லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா!
எல்ஐசி ஆஃப் இந்தியா (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) அல்லது லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்பது இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. பல காப்பீடு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்கும் இந்தியாவின் எல்ஐசி நிறுவனம், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள் உட்பட மொத்தம் 2048 கிளைகளுடன் நாடு முழுவதும் இயங்கி வருகிறது.
எல்ஐசி வரலாறு
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், 1956 ஆம் ஆண்டில் 245 வருங்கால வைப்புச் சங்கங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் இணைப்பிற்குப் பிறகு நிறுவப்பட்டது. ஜூன் மாதம் 1956 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பிறகு, செப்டம்பர் 1956ல் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது. இதற்கிடையில், பிரத்யேக எல்ஐசி சட்டம் ஜூலை 1956 முதல் அமலுக்கு வந்தது.
இந்தியாவில் தனியார் காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்குவதற்கு இந்தியாவின் எல்ஐசி நிறுவனம் பெரிய உதவியாக இருந்தது. 154 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், 16 வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் 75 வருங்கால வைப்பு நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொருளாதாரத்தில் எல்ஐசியின் பங்கு
எல்.ஐ.சி-யின் முக்கிய பங்கு, உலகளாவிய நிதிச் சந்தைகள் மற்றும் பல்வேறு அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதாகும். எல்ஐசியின் விதியின்படி, பாலிசிகள் மூலம் சேகரிக்கப்படும் பணத்தில் குறைந்தது 75% மத்திய மற்றும் மாநில அரசுப் பத்திரங்களில் எல்ஐசி முதலீடு செய்ய வேண்டும். இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டும் மேம்பாட்டுக்கு எல்ஐசியின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் இரண்டு முக்கிய மற்றும் அடிப்படையான பாலிசிகள் :
* ஆயுள் காப்பீடு
இந்த காப்பீடு எந்தவொரு தனி நபருக்கும் மற்றும் அவரது குடும்பத்திற்கும் நிதி பாதுகாப்பு வழங்குகிறது. ஒரு நபர் இறந்து போனால், அதனால் ஏற்படக்கூடிய நிதி ரீதியான பிரச்சனையை எதிர்கொள்ள, உதவுகிறது. நிதி இழப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. இந்தக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கவரேஜை வாங்கி, காப்பீட்டின் தொகை மற்றும் வயதின் அடிப்படையில் வருடாந்திர பிரீமியத்தைச் செலுத்துகிறார். பாலிசி ஒரு குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகக் கூடியது, எனவே இது ‘டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
* பண மதிப்பு காப்பீடு
இந்த வகை பாலிசியில், காப்பீட்டுத் தொகை காலப்போக்கில் குறைகிறது மற்றும் பாலிசியின் சேமிப்பு, அதற்கு ஏற்றார் போல காலப்போக்கில் அதிகரிக்கிறது. இந்த வகை காப்பீடு பாலிசியில் உள்ள சேமிப்பு மற்றும் காப்பீட்டாளர் செலுத்தும் பிரீமியத்தின் மூலம் வருவாய் மூலம் நிதியளிக்கப்படுகிறது.
எல்ஐசி அடிப்படை பாலிசிகளின் கீழ் பல பாலிசிகளை வழங்குகிறது, சில முக்கியமான பாலிசிகள் பின்வருமாறு :
* எல்ஐசி ஜீவன் பிரகதி
* எல்ஐசி லைப் கவர்
* எல்ஐசி சிங்கிள் பிரீமியம் எண்டோமென்ட் திட்டம்
* எல்ஐசி ஜீவன் தருண்
* எல்ஐசி ஜீவன் ஆனந்த்
எல்ஐசியின் முக்கிய செயல்பாடுகள் :
* காப்பீட்டில் முதலீடு செய்து, சேமிப்பாகவும், எதிர்காலத்துக்கான நிதி பாதுகாப்பைப் பெறவும், மக்களை ஊக்குவிக்கிறது.
* அரசாங்கப் பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் மக்களின் மூலதனத்தைப் பாதுகாக்கிறது.
* மலிவு விலையில் காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது.
* தொழில்களுக்கு நேரடிக் கடன்கள், வீட்டுக் கடன்கள், பல்வேறு தேசிய திட்டங்களுக்கு நியாயமான வட்டி விகிதத்தில் கடன்கள் போன்ற பல்வேறு கடன்களை வழங்குகிறது.
எல்ஐசியின் நோக்கங்கள் :
ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்புவதை LIC நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு தரப்பின் மக்களின் ஆயுள் காப்பீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும், இதனால் அவசர காலத்தில் ஏற்படும் நிதி இழப்பைக் குறைக்க முடியும்.
முகவர்கள் மற்றும் பணியாளர்கள் வடிவில் வேலைவாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும், இதன் மூலம் நாட்டில் வேலையின்மை பிரச்சனையை குறைக்க வேண்டும்.