Lalu Prasad Yadav (லாலு பிரசாத் யாதவ்)

    மாணவர் சங்கத் தலைவர் முதல் பீகார் முதல்வர் வரை – லாலு பிரசாத்தின் அரசியல் வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

    இந்திய அரசியலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கம் ஆகியவை நிறைந்துள்ளன. ஊழலில் சிக்கும் எந்த ஒரு அரசியல் தலைவரும் தண்டிக்கப்பட போவதில்லை என்ற எண்ணம் சாமானிய மக்கள் மனதில் பரவியுள்ளது. ஆனால் ஒன்றல்ல, இரண்டல்ல 5 ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ்.

    சாமானிய குடும்பத்தில் பிறந்தவரான இவர், தன்னுடைய சொந்த முயற்சியால் அரசியலில் காலூன்றி, முதல்வர், மத்திய அமைச்சர் என்று பல உயர் பதவிகளை அடைந்தவர். எனினும் ஊழல் வழக்குகளில் சிக்கியதன் விளைவாக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேர்ந்தது. அரசியல் வாழ்வில் இவரது வளர்ச்சியும், வீழ்ச்சியும் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    வாழ்க்கை குறிப்பு

    பீகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1948ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி குந்தன் ராய் மற்றும் மராட்சியா தேவி என்ற தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர் லாலு பிரசாத் யாதவ். அரசியல் அறிவியல் பிரிவில் எம்ஏ பட்டக்கல்வியும், பின்னர் சட்டக் கல்வியும் முடித்திருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் தொடக்கத்தில் பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் கிளார்க்காக பணியாற்றியவர்.

    கடந்த 1973ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ராப்ரி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இரண்டு மகன்களும், ஏழு மகள்களும் உள்ளனர்.
    இதில் தேஜஸ்வி யாதவ் தற்போது பீகார் மாநிலத்தின் துணை முதல்வராகவும், தேஜ் பிரதாப் யாதவ் மாநில அமைச்சராகவும் இருக்கின்றனர்.

    மாணவர் சங்கத் தலைவராக அரசியல் பயணம் தொடக்கம்

    கடந்த 1970ஆம் ஆண்டு பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்க பொதுச் செயலாளராக பொதுவாழ்வில் அடி எடுத்து வைத்தார் லாலு பிரசாத் யாதவ். அதனைத் தொடர்ந்து 1974ஆம் ஆண்டில் அந்த மாணவர் சங்கத்தின் தலைவராகவும் உயர்ந்தார். இதற்கு அடுத்தபடியாக ஜெயப்பிரகாஷ் நாராயணன் முன்னெடுத்த பீகார் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு அரசியல் பணிகளை செய்து வந்தார்.

    இதன் விளைவாக 29ஆம் வயதில் 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சியின் சார்பில் எம்பியாக வெற்றி பெற்றார். ஆனால் ஓராண்டில் ஜனதா அரசு கவிழ்ந்த நிலையில், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பக்கம் லாலு பிரசாத் தன்னை நிறுத்திக் கொண்டார்.

    தனி செல்வாக்குடன் வளர்ச்சி

    மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர்களில் ஒருவராக பீகார் மாநிலத்தில் தனது செல்வாக்கை லாலு பிரசாத் யாதவ் வளர்த்துக் கொண்டார். குறிப்பாக, அவர் சார்ந்த யாதவர் சமுதாயத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், முஸ்லிம்கள் ஆகியோர் மத்தியில் மிக பிரபலமடைந்தவராக வளர தொடங்கினார்.

    பீகார் முதல்வராக பதவியேற்பு

    1990ஆம் ஆண்டில் ஜனதா தளம் கட்சி பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த போது, உட்கட்சியில் நிலவிய பலத்த போட்டிகளுக்கு மத்தியில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டில் நாடெங்கிலும் ரத யாத்திரை நடத்தி வந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை பீகார் மாநிலத்தில் வைத்து கைது செய்ததன் மூலமாக இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்தார் லாலு பிரசாத் யாதவ்.

    ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தொடக்கம்

    பீகார் முதல்வராக 1990ஆம் ஆண்டில் இருந்து 1997ஆம் ஆண்டு வரையில் லாலு பிரசாத் பதவி வகித்த காலத்தில், மாட்டு தீவன ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஜனதா தளம் கட்சியுடன் ஏற்பட்ட மோதலில் அக்கட்சியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை லாலு பிரசாத் யாதவ் தொடங்கினார். 1998 ஆம் ஆண்டில் மாதேபுரா தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    மனைவியை முதல்வராகிய லாலு பிரசாத் யாதவ்

    பீகாரில் 2000 ஆவது ஆண்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், மாட்டுத் தீவன வழக்கில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் எழுத்தறிவு கூட இல்லாத தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக கொண்டு வந்தார் லாலு பிரசாத் யாதவ். இந்திய அளவில் மிக மோசமாக முன்னெடுக்கப்பட்ட குடும்ப அரசியல் இது என்ற கரும்புள்ளி வரலாற்றில் நிலைத்து விட்டது.

    மத்திய ரயில்வே அமைச்சர்

    2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசு அமைந்த போது, அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவி வகித்த காலத்தில் பயணிகளுக்கு சாதகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக ரயில்வே துறையை 30 ஆயிரம் கோடி லாபத்தில் இயங்க வைத்த இவரது நடவடிக்கைகள் உலக அளவில் பெரும் பாராட்டுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றன.

    ஆனால் ரயில்வே அமைச்சராக இருந்த காலகட்டத்திலும் ஐஆர்சிடிசி நிறுவனம் தொடர்பான ஒப்பந்தங்களை கொடுப்பதில் ஊழல் செய்ததாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

    ஆட்சி இழப்பு

    பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்தபோது சட்டம் ஒழுங்கு மிகவும். சீர்கேடு அடைந்தது. இத்தகைய சூழலில் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளுக்கு அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இதற்கு அடுத்தடுத்த தேர்தல்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பதும், பின்னர் அந்த ஆட்சி கவிழ்வதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அரசியல் ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி இருந்து வருகிறது.

    ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை

    பீகார் முதல்வராக இருந்த காலத்தில் மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக லாலி பிரசாத் மீது ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2013ஆம் ஆண்டில் தொடங்கி அந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறை தண்டனை பெற்று வந்தார் லாலு பிரசாத் யாதவ். எனினும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதே சமயம், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது. மேலும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.