கருணாநிதியின் இலக்கிய வாரிசாக அறிமுகமாகி அரசியலில் கலக்கி வரும் MP கனிமொழி!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாரிசுகள் அவரின் வழியை பின்பற்றி அரசியலில் சாதனை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். மறைந்த கருணாநிதியின் நேரடி அரசியல் வாரிசாக களமிறங்கிய ஸ்டாலின், கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி சிறு வயதில் இருந்தே தீவிர களப்பணியாற்றி படிப்படியாக உயர்ந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவராக உள்ளார்.
இவரது சகோதரியான கனிமொழியும் ஆணுக்கு பெண் சளைத்தவர் இல்லை என்று அரசியலில் புகுந்தது தனக்கென தனி தொண்டர் படையை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அரசியல் விமர்சகர்களால் திராவிட புதல்வி என்ற அடைமொழியிலும் குறிப்பிடப்படுகிறார். திராவிட அரசியலில் தற்போது முக்கிய இடம் பிடித்துள்ள கனிமொழி கருணாநிதி ஒருஅரசியல்வாதி, கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர். கனிமொழியின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
பிறப்பு:
மறைந்த மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்கு முதல் மகளாக கடந்த 1968-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி பிறந்தார் கனிமொழி. ஸ்டாலின், அழகிரி, செல்வி மற்றும் தமிழரசு ஆகியோர் கருணாநிதியின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
படிப்பு மற்றும் திருமண வாழ்க்கை:
கனிமொழி தனது பள்ளிப் படிப்பை சென்னை சர்ச் பார்க் பெரிசண்டேஷன் கான்வென்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டப் படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியிலும் பயின்றார். படிப்பை முடித்த பிறகு 1989-ஆம் ஆண்டு அத்திபன் போஸ் என்பவரை தனது இளம் வயதிலேயே மணந்தார். எனினும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர்களது திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முறிந்த நிலையில், 1997-ல் அரவிந்தன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகனுக்கு ஆதித்யா என்று பெயர் வைத்தனர்.
இலக்கியம் மற்றும் பத்திரிகை துறைகளில் ஈடுபாடு:
கருணாநிதியின் மகள் என்பதால் தனது இளமை காலம் முதலே எழுதுவதிலும், வாசிப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்தார் கனிமொழி. இலக்கியம் மற்றும் பத்திரிகை துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கனிமொழி தி இந்து ஆங்கில நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்கத்தில் பணியாற்றினார். இதன் பிறகு குங்குமம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து இயங்கும் தமிழ் முரசு இதழிலும் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார்.
தொழில்முறை பத்திரிகையாளர் மற்றும் கவிஞராக ஜொலித்த கனிமொழி எழுதிய கருவறை வாசனை எனும் கவிதை தொகுப்பு இவரை சிறந்த நவீன கவிஞர்களில் ஒருவராக அடையாளப்படுத்தியது. கருவறை வாசனை தவிர கனிமொழியின் கவிதை தொகுப்பு படைப்புகளாக அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி உள்ளிட்டவை உள்ளன. கடந்த 2007-ல் நடைபெற்ற கலை, பண்பாட்டு நிகழ்ச்சியான சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயலாற்றி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
நேரடி அரசியலில் குதித்த கனிமொழி..
2007-க்கு முன்பு வரை கருணாநிதியின் இலக்கிய வாரிசாக மட்டுமே அறியப்பட்ட கனிமொழி, தனது தந்தையின் விருப்பம் காரணமாக அரசியலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. முதலில் தயக்கம் காட்டிய கனிமொழியை நேரடி அரசியலுக்கு சம்மதிக்க வைத்தவர் துரைமுருகன் என்றும் தகவல் உண்டு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த கனிமொழி 2007-ஆம் ஆண்டு முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையிலேயே அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர் கபில் சிபல் உள்ளிட்ட பலரையும் வியக்க வைத்தார். இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மையப்படுத்தி அப்போது இவர் பேசிய 10 நிமிடமும் இந்திய அளவில் மிகவும் கவனிக்கப்பட்டது. கருணாநிதியின் வாரிசாக இதன் மூலம் டெல்லியில் முத்திரை பதித்தார் கனிமொழி. மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழியின் பதவிக்காலம் 2013-ம் ஆண்டு முடிந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக 2013-ல் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறைக்கு அனுப்பிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு..
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஆர்.ராஜாவோடு சேர்த்து கனிமொழி மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து மே 20, 2011 அன்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் பெண்களுக்கான சிறப்பு சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்கள் கழித்து தான் இவருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது. எனினும் வழக்கு விவசாரணைக்காக இவர் பல மாதங்கள் டெல்லியிலே இருக்க நேரிட்டது. இறுதியாக குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி கடந்த 2017-ல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
மக்களை சந்தித்து மக்களவைக்கு சென்றார்:
2 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட கனிமொழி. கடந்த 2019-ல் முதல் முறை மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகினார். தமிழிசை சவுந்திர ராஜனை விட 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றியாளரானார். மக்கள் பணியோடு சேர்த்து கலை,இலக்கியம் மற்றும் பகுத்தறிவு பற்றி சரளமாக பேச கூடியவராக இருக்கும் இவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெண்ணுரிமை, பாலின சமத்துவம் பற்றியும் பேசி பலரையும் கவர்ந்துள்ளார். தனது அரசியல் பயணத்தில் கனிமொழி இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.