GV Prakash (ஜி.வி.பிரகாஷ்)

  சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே-வில் பாடகராக துவங்கி ஹீரோவாக கலக்கி வரும் பிரபல மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ்!

  ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் திரையில் தோன்ற வேண்டும் என்ற கனவு, சினிமாவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வெற்றியை சுவைத்தவர்களுக்கும் ஏற்படுகிறது. ஆசை மட்டும் இருந்தால் போதாது, ரசிகர்களை ஏற்று கொள்ள வைக்க வேண்டும்.

  அந்த வேலையை கச்சிதமாக செய்து பிரபல இசை அமைப்பாளரார் மற்றும் பின்னணி பாடகராக மட்டும் இல்லாமல், ஒரு நடிகராக திறமையை வெளிப்படுத்தி ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருபவர் ஜி.வி.பிரகாஷ். தன்னுடைய தனித்துவமான இசையால் மற்றும் குரலால் ரசிகர்களை கட்டி போட்டு வரும் வேலையை ஒரு பக்கம் செய்தாலும், மறுபக்கம் பக்கத்து வீட்டு பையனை போன்ற தோற்றம் மற்றும் இயல்பான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்துள்ளார் ஒரு ஹீரோவாக.

  சினிமாவின் பல துறைகளிலும் கால் தடம் பதித்து கலக்கி வரும் ஜி.வி.பிரகாஷின் குடும்பம், சினிமா வாழ்க்கை உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்களை இங்கே..

  பிறப்பு மற்றும் குடும்பம்:

  ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இந்த ஜி.வி.பிரகாஷ் குமார். 1987-ஆம் வருடம் ஜூன் மாதம் 13-ஆம் தேதி சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தை பெயர் ஜி.வெங்கடேஷ். இவரது தாய் பெயர் ஏ.ஆர்.ரெஹானா. ஏ.ஆர்.ரஹ்மான் இவருக்கு தாய்மாமன் முறை ஆவார். செட்டிநாடு வித்யாஷ்ரமத்தில் தனது பள்ளி கல்வியை முடித்தார்.

  சிறுவயதிலேயே பாடகராக..

  தனது குடும்பத்திலேயே இசைப்புயல் இருப்பதால் சிறுவயதிலேயே சினிமாவின் மீதான ஈர்ப்பு ஜி.வி.பிரகாஷுக்கு இருந்தது. டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக பாடகராக அறிமுகமாக பிரபல பாடலான சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை பாடி அசத்தினார். அதன் பின் 90-களில் ரஹ்மான் இசையில் வெளியான பல பாடல்களில் சிறுவர்களுக்காக பாடி சிறந்த பாடகராக தேவையான திறமைகளை வளர்த்து கொண்டார். ஒரு கட்டத்தில் பாடலோடு சேர்த்து இசை மீதும் ஈர்ப்பு ஏற்பட இசையை கற்று கொள்வதிலும் கவனம் செலுத்தினார்.

  இசையமைப்பாளராக அறிமுகம்..

  டைரக்டர் வசந்த பாலன் இயக்கத்தில், டைரக்டர் சங்கரால் தயாரிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டான திரைப்படம் வெயில். கிராமத்து பின்னணி மற்றும் வாழ்க்கை முறையில் உருவான இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக இசைமைப்பாளராக 2006-ல் அறிமுகம் ஆனார் ஜி.வி.பிரகாஷ். அறிமுகமான முதல் படத்திலேயே உருகுதே மருகுதே, காதல் நெருப்பின் பயணம், வெயிலோடு விளையாடி என சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் விளையாடி விட்டார் ஜி.வி.பிரகாஷ். யார் இவர் என கவனிக்க வைத்த கையோடு அஜித்தின் கிரீடம் படத்திற்கு இசையமைத்து தனது இரண்டாவது படத்திலும் பாடல்களை சூப்பர் ஹிட்டாக செய்தார். தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான பொல்லாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்து மூன்றாவது படத்திலும் அருமையான இளம் இசையமைப்பாளர் என்று முத்திரை பதித்தார்.

  தொடர்ந்து ஓரம்போ, வெள்ளித்திரை, குசேலன்ம் ஆனந்த தாண்டவம், காளை, சேவல், அங்காடி தெரு உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்து மேலும் பிரபலமடைந்தார். அற்புதமான மியூசிக் டைரக்டர் என்று பெயரெடுத்த பின் ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வ திருமகள், மயக்கம் என்ன, முப்பொழுதும் உன் கற்பனைகள், சைவம், தலைவா, நிமிர்ந்து நில், பரதேசி, உதயம் என்எச் 4, ராஜா ராணி, கொம்பன், தெறி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து படத்திற்கு படம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனெக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார். அசுரன், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் இவரது பின்னணி இசை ரசிகர்களை மிரள செய்தது.

  திரைப்பட தயாரிப்பு..

  2013-ஆம் ஆண்டில் ஜி.வி.பிரகாஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ” ஜி.வி. பிரகாஷ் குமார் புரொடக்ஷன்ஸ்” என்ற பெயரில் தொடங்கினார். இவரது முதல் படமான மதயானை கூட்டம், பாலுமகேந்திராவின் முன்னாள் உதவியாளர் விக்ரம் சுகுமாரன் இயக்கியது ஆகும்.

  நடிகராக அறிமுகம்..

  மியூசிக் டைரக்டர், ப்ளேபேக் சிங்கர், ப்ரொடியூசர் அவதாரத்தை அடுத்து சினிமா துறையில் நேரடியாக பிரபலமாகும் ஹீரோ அவதாரம் எடுக்க முடிவு செய்த ஜி.வி. பிரகாஷ், அதற்கான பணிகளில் இறங்கினார். மணி நாகராஜ் இயக்கத்தில் பென்சில் திரைப்படத்தில் முதல் முதலில் ஹீரோவாக நடித்தாலும், இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் இவர் அடுத்தது நடித்த திகில் திரைப்படமான டார்லிங் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் மக்கள் இவரை ஹீரோவாக ஏற்று கொண்டனர். ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ் லீ உள்ளிட்ட பல காமெடி படங்களில் நடித்தார். அதே சமயம் நாச்சியார், சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை, வாட்ச்மேன், ஜெயில், செல்ஃபி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நல்ல நடிகர் என்ற இமேஜையும் பெற்று உள்ளார்.

  காதல் மற்றும் திருமணம்:

  ஜி.வி.பிரகாஷ் தனது பள்ளித் தோழியான பிரபல பாடகி சைந்தவியை காதலித்து கடந்த 2013-ல் திருமணம் செய்து கொண்டார். 2020-ல் தங்களுக்கு பிறந்த மகளுக்கு அன்வி நிற அழகிய பெயரை சூட்டி உள்ளனர் இத்தம்பதியினர். ஒரே சமயத்தில் முன்னணி மியூசிக் டைரக்டர், சிங்கர், ஹீரோ என தன்னை பிசியாக வைத்து கொண்டு கோலிவுட்டை கலக்கி வருகிறார் ஜி.வி. பிரகாஷ்.