வாரிசு நடிகராக களமிறங்கி வித்தியாசமான ரோல்களில் நடித்து அசத்தும் நடிகர் கௌதம் கார்த்திக்!
அரசியலை போலவே நடிப்பிலும் வாரிசுகள் களமிறங்குவது சகஜமாகி வருகிறது. வாரிசு நடிகர்கள் களமிறங்கினாலும் நடிப்பில் திறமை மற்றும் மக்களை கவரும் ஆளுமை இருந்தால் மட்டுமே சினிமாவில் ஜொலிக்க முடியும்.
தமிழ் திரைத்துறையில் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறை நடிகராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் வாரிசு நடிகர் கௌதம் கார்த்திக். இவர் பழம்பெரும் நடிகர் மறைந்த முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனும் ஆவார். தாத்தா மற்றும் அப்பாவை தொடர்ந்து தற்போது சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நடிகர் கௌதம் கார்த்திக் பற்றிய சுவாரசிய தகவல்களை பார்க்கலாம்.
நடிகர் கௌதம் கார்த்திக்கின் ஆரம்பகால வாழ்க்கை..
மறைந்த நடிகர் நடிகர் ஆர்.முத்துராமனின் மகனான நடிகர் கார்த்திக் மற்றும் அவரது முதல் மனைவியான நடிகை ராகினிக்கு பிறந்தவர் தான் நடிகர் கௌதம் கார்த்திக். கடந்த 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி தமிழக தலைநகரான சென்னையில் பிறந்தார் நடிகர் கவுதம் கார்த்திக். சென்னையில் பிறந்தாலும் நடிகர் கௌதம் கார்த்திக் தனது பள்ளிப் படிப்பை ஊட்டியில் அமைந்திருக்கும் ஹெப்ரோன் பள்ளியிலும், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும், கல்லூரி படிப்பை பெங்களூரில் உள்ள கிறிஸ்ட் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.
சினிமா வாழ்க்கை:
இந்திய சினிமாவில் முக்கிய டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் மணிரத்னம் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் தனது ராவணன் திரைப்படத்தை எடுத்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு பேட்டியின் போது பேசிய நடிகர் கார்த்திக் தனது மகன் கௌதம் கார்த்திக் விரைவில் திரைத்துறைக்குள் நுழைய இருப்பதாகவும், அவர் தனது முதல் படமாக டைரக்டர் மணிரத்னத்தின் திரைப்படமொன்றி நடிக்க இருப்பதாகவும் கூறினார். தந்தை கார்த்திக் அறிவித்தபடியே முக்கிய இந்திய சினிமா டைரக்டரான மணிரத்னத்தின் “கடல்” திரைப்படம் மூலம் ராமநாதபுரத்து மீனவ இளைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் கௌதம் கார்த்திக்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நடித்தார். பிரபலநடிகர்கள் அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன் என பல திரைப்படங்களில் மாறுபட்ட ரோல்களில் நடித்து மெல்ல மெல்ல தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார்.
அடல்ட் காமெடி படங்கள்..
மணிரத்னத்தின் அறிமுகம் என்ற முத்திரையுடன் இருக்கும் நடிகர் நடிகர் கௌதம் கார்த்திக் ரங்கூன், இவன் தந்திரன் போன்ற படங்களில் கவனிக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சட்டென்று அடல்ட் காமெடி ஜர்னர் பக்கம் திரும்பியது ரசிகர்களை மட்டுமல்ல, சினிமா துறையில் இருந்தவர்களையும் ஆச்சர்யப்படுத்தியது. வித்தியாசமான ரோல்களில் நடிப்பவர் என்ற பெயருக்கு ஏற்ப அடல்ட் காமெடி படங்களாக வெளிவந்த ஹரஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கவனம் பெற்றார். முன்னணி நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற முழுநீள காமெடி படத்திலும், தனது தந்தை நடிகர் கார்த்திக்குடன் சேர்ந்து மிஸ்டர். சந்திரமௌலி படத்திலும் நடித்துள்ளார் நடிகர் கௌதம் கார்த்திக். பின் இந்திரஜித், தேவராட்டம் போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடித்தார்.
குடும்ப திரைப்படம்:
மசாலா மற்றும் கமர்ஷியல் படங்களால் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வந்த நடிகர் கௌதம் கார்த்திக், தமிழ் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலான ரோலில் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைபடத்தில் நடித்து இயல்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இந்த திரைப்படத்தில் கூட்டு குடும்பத்தில் வாழும் சாதாரண கிராமத்து இளைஞனாக அமைதியாக நடித்து வெகுவாக ஈர்த்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் இவரது நடிப்பில் வெளியான யுத்த சத்தம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
மமோவுடன் காதல்..
யாரு அது மமோ என்று குழம்ப வேண்டாம். நடிகை மஞ்சிமா மோகனின் ஷார்ட் ஃபார்ம் தான் இது. கவுதம் மேனனின் அச்சம் என்பது மடமையடாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்கின் ஜோடியாக நடித்தார். அப்போது இருவரும் காதலில் விழுந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சோஷியல் மீடியாவில் சில மாதங்களுக்கு முன் மஞ்சிமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த கௌதம் “உன்னைப் போன்ற ஒரு வலிமையான பெண் என் வாழ்க்கையில் இணைவதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறி இருவரும் காதலிப்பதை உறுதி செய்தார்.
எப்போது திருமணம்?
கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் தங்கள் காதலை பற்றி அவரவர் பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், அவர்களிடமிருந்து ஒப்புதல் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு இந்த ஆண்டு (2022) இறுதிக்குள் திருமண செய்து வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.