Edappadi Palaniswami (எடப்பாடி பழனிசாமி)

    அரசியல் வாழ்க்கையில் வெள்ளி விழா காண இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

    மன்னராட்சி முறை முடித்து வைக்கப்பட்டது, இந்தியாவில் ஜனநாயக முறைப்படி மக்களாட்சி மலர்ந்த போது, சாமானியர்களும் அரசியல் தலைமைகளாக உருவெடுக்கலாம் என்ற சூழல் வந்தது. ஆனால், ஆண்டுகள் செல்ல, செல்ல இன்றைக்கு வாரிசுகள் மற்றும் குடும்ப அரசியல் கோலோச்சும் நிலை காணப்படுகிறது. அதே சமயம், சாமானியராக உள்ளே நுழைந்து தமிழக முதல்வராகவும், கட்சியின் உயர் பொறுப்புக்கும் வர முடியும் என்ற கண்ணெதிர் எடுத்துக்காட்டாக திகழுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

    ஆம், கடந்த 1974ஆம் அண்டு தனது 20 வயதில், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அஇஅதிமுக) சாதாரண தொண்டராக தம்மை இணைத்துக் கொண்ட, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையைம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி தான், பின்னாளில் அதே கட்சியின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து நின்றார்.

    அரசியலில் கீழே இருந்து மேலே செல்வது என்பதெல்லாம் ஏதோ ஏணிப்படி வைத்தாற்போல கடகடவென மேலே செல்லும் காரியம் அல்ல. இது பரமபத விளையாட்டு போலத்தான். இரண்டு, மூன்று முயற்சிகளில் நீங்கள் 20 அடி உயர்ந்தால், ஒரே வாய்ப்பில் 16 அடி சறுக்கி கீழே வருவதற்குமான சாத்தியக்கூறுகளும் உண்டு.

    அத்தகைய அரசியல் உலகில் பல ஏற்ற, இறக்கங்களைக் கடந்து அமைச்சராக வலம் வந்து கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி, யாரும் எதிர்பாராத வகையில் தமிழக முதல்வர் ஆனார். அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டில் தமிழக முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி.

    இவரது அரசியல் வாழ்க்கை எங்கு தொடங்கியது, என்னென்ன பொறுப்புகளை கடந்து இந்த நிலைக்கு வந்தார் என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

    அரசியல் வாழ்க்கை

    அதிமுகவில் தன்னை தொண்டராக இணைத்துக் கொண்ட பிறகு, தொடர்ந்து கட்சிப் பணியாற்றியத்ன் மூலமாக மாவட்ட அளவில் கட்சியில் தன்னை பழனிச்சாமி உயர்த்திக் கொண்டார். கட்சியில் சேர்ந்த 15ஆவது வருடம், அதாவது கடந்த 1989ஆம் ஆண்டில் எடப்படி சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ-வாக தேர்வாகி முதல்முறை சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

    ஆனால், அப்போதைய ஆட்சி கவிழ்ந்த நிலையில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

    கட்சியிலும் உயர் பதவி

    சேலம் மாவட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக எடப்பாடி பழனிச்சாமி வளர்ந்து வந்த நிலையில், கட்சியிலும் மாநில அளவிலான பொறுப்புகள் அவரை தேடி வந்தன. கடந்த 2006ஆம் ஆண்டில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், 2007ஆம் ஆண்டில் அமைப்புச் செயலாளராகவும் உயர்ந்தார்.

    அமைச்சர் பதவி

    2011ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியபோது, எடப்பாடியில் எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்ட பழனிச்சாமிக்கு, அப்போது கட்சியில் முக்கியஸ்தர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு இணையாக அமைச்சரவையில் இடம் கிடைத்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றார். கடந்த 2014ஆம் ஆண்டில் அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

    தமிழக முதல்வர்

    2016ஆம் ஆண்டில், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, இடைக்கால முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், கட்சி மேலிடத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் பதவி விலகிய நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. பல மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

    ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி 32 அமைச்சர்களுடன் பழனிச்சாமி ஆட்சி அமைத்தார். அவர் ஆட்சி அமைத்த சமயத்தில், அதற்கு உறுதுணையாக சசிகலா இருந்தார் என்ற போதிலும், பிறகு அவர் ஊழல் வழக்கில் சிறை சென்ற நிலையில், ஆட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி.

    பொய்த்த கனவுகள்

    எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நிலைக்காது என்றும், இடையில் கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. கள யதார்த்தமும் கூட அப்படித்தான் இருந்தது. கட்சியை விட்டு விலகிய அல்லது நீக்கப்பட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மூலமாக ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்று கருதப்பட்ட நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து ஆட்சியை முழுமையாக நிறைவு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி.

    கட்சியின் தோல்வி

    இதற்கிடையே, அதிமுக அதிருப்தி அணியாக செயல்பட்ட பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டு, அவர் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர்.

    2021ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

    மீண்டும் வெடித்த மோதல்

    கட்சியின் பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி பொதுக்குழு கூட்டப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார் பழனிச்சாமி.

    ஆனால், எதிர்பாராத திருப்பமாக, இந்த பொதுக்குழு, அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அதிருப்தியாளர்களை அரவணைத்து செல்வாரா அல்லது அவர்களை சமாளிப்பாரா, கட்சி அவர் கட்டுப்பாட்டிற்குள் அதிகாரப்பூர்வமாக வருமா என்ற கேள்விகளுடன் அரசியல் பயணம் தொடர்கிறது.

    வாழ்க்கை குறிப்பு

    கடந்த 1954ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி பிறந்தவர் பழனிச்சாமி. இவரது பெற்றோர் கருப்பண்ணசாமி மற்றும் தவசியம்மாள் ஆவர். பிஎஸ்சி வேளாண்மை கல்வி பயின்ற போதிலும் எடப்பாடி பழனிச்சாமி பட்டம் பெறவில்லை. இவர் ராதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார்.