HOME » DR B R AMBEDKAR

Dr B R Ambedkar

  அம்பேத்கர் என்றதும் 90களில் பிறந்தவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் படித்த சிறிய குறிப்பும், 2K கிட்ஸ்-களுக்கு பரியேறும் பெருமாளில் வரும் அம்பேத்கர் குறித்த வசனமும் நினைவுக்கு வரலாம். அம்பேத்கர் குறித்த விக்கிபீடியா தகவல்களை நிரப்பி வைப்பது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, அம்பேத்கர் குறித்த ஒரு சித்திரத்தை உருவாக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

   

  அம்பேத்கர் குறித்து அறிய நினைப்பவர்கள் “நான் இந்துவாக சாக மாட்டேன்” என்ற அவரது புத்தகத்தை வாசிக்கலாம். வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள் மம்முட்டி நடித்த அம்பேதகர் திரைப்படத்தைக் காணலாம். இந்த நூற்றாண்டிலேயே சாதி ஆணவக் கொலைகள், சாதி ரீதியான தாக்குதல்கள் நடக்கிறது என்றால், டாக்டர் அம்பேத்கர் வாழ்ந்த போது எத்தனை மூர்க்கமாக இந்த சமூகம் இருந்திருக்க கூடும்?…மெத்தப்படித்த மேதையாக, உலகமே உச்சி முகர்ந்தாலும் தான் வாழும் காலத்தில் சாதி ரீதியாக கடும் அவமானத்திற்கு ஆளானவர் அவர். அதனால்தான், ‘நான் இந்துவாகப் பிறந்தேன். அதைத் தடுக்கும் சக்தி இல்லை. ஆனால், நான் இந்துவாக சாக மாட்டேன்’ என பகிரங்கமாக அறிவித்தார் சட்ட மேதை டாக்டர். அம்பேத்கர்.

   

  வெளிநாட்டுக்கு படிக்க சென்ற முதல் இந்தியர் மட்டுமல்ல. வெளிநாட்டில் முனைவர் பட்டமும் (Ph.D) பெற்ற முதல் இந்தியரும் அவரே. 1917ல் THE NATIONAL DIVIDEND OF INDIA: HISTORICAL AND ANALYSTICAL STUDY என்ற தலைப்பில் அவர் அளித்த ஆய்வேடு பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் வளர்ச்சி கோட்பாடு என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. 1923 ஆம் ஆண்டு ரூபாயின் சிக்கல் என்ற தலைப்பில் லண்டன் பல்கலைக்கழகத்தில் டி.எஸ்சி (D.Sc) பட்டம் பெறுவதற்காக பொருளாதாரம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதினார். இது போன்ற நூல்களால் தான் இந்தியாவில் RESERVE BANK உருவாவதற்குக் காரணம்.

   

  தினசரி 24 மணி நேரத்தில் 18 மணி நேரத்தை படிப்பதற்காக செலவழித்தார். லண்டனில் அவர் தங்கியிருந்த போது, அங்குள்ள நூலகர் அம்பேத்கர் குறித்து இப்படி சொல்கிறார். “ நான் நூலகத்தை திறக்கும் போது வாசலில் காத்திருப்பார். நூலகத்தை மூடும் போது கடசி ஆளாக வெளியேறுவார்”. அந்த அளவு வெறி கொண்டு படித்ததால்தான் யாராலும் எட்ட முடியாத உயரங்களை அவரால் எட்ட முடிந்தது.

   

  இரவு தூங்கச் செல்லும் போது தன் படுக்கையில் குறைந்தது 8, 10 புத்தகங்களாவது இருக்க வேண்டும். தூக்கம் வரவில்லை என்றாலும் தூங்கி எழுந்தாலும் புத்தகங்களில் தான் அவர் முழிப்பார். கடுமையான  உடல் வேதனையின் போதும் படிப்பதை அவர் நிறுத்தியதில்லை. இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டர் அம்பேத்கரின் வழக்கம்.அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.

   

  பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், என்னுடைய வழிகாட்டி டாக்டர் அம்பேத்கர் என்று பதிவு செய்துள்ளார். வறுமை ஒழிப்பைப் பற்றி என் சிந்தனையை கிளர்ந்தெழச் செய்தவரும் அவரே. அவருடைய பொருளாதார கொள்கையை பின்பற்றி ஆராய்ச்சி செய்தேன் என்று கூறியுள்ளார். இப்படி சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பை செலவிட்டவர் டாக்டர் அம்பேத்கர்.

   

  சட்டத்தைப் பற்றிக் குறை சொல்லும் சிலர், அம்பேதகர் தான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என்ற வாதங்களை முன் வைப்பர். ஆனால், சட்டம் இயற்றுவதில் நான் வெறும் குதிரையாக மட்டுமே இருந்தேன். என் மீது ஆட்சியாளர்கள் சவாரி செய்தார்கள் என அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார்.

   

  ”சுதந்திரமானவன் என்று நான் யாரை வரையறுப்பேனென்றால் – எவனொருவன் தன்னுடைய உரிமை, பொறுப்பு. கடமை ஆகியவை பற்றிய விழிப்போடு இருக்கிறானோ. எவனொருவன் தன்னை அடக்கி ஆளும் சூழலுக்கு அடங்க மறுத்து, அந்தச் சூழலை தனக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்கிறானோ, எவனொருவன் இது பழகிப்போய் விட்டது. வழிவழியாய் இதுதான் நடைமுறை. இதுதான் மரபு இப்படித்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்று சொல்லி அதற்கு முன்னோர்களை சாட்சிக்கு இழுக்காமல் இருக்கிறானோ அவனிடமே பகுத்தறியும் சிந்தனையின் சுடர் அணையாமல் எரிகிறது. அவனையே நான் சுதந்திரமான மனிதன் என்பேன்.” என்றவர் அம்பேத்கர்

   

  ”சாதி என்பது ஒரு மனநிலை. நோயுற்ற மனநிலை. இந்து மதத்தால் கற்பிக்கப்பட்ட விழுமியங்களே இந்த நோய்க்கான மூலகாரணம். நாம் சாதி வேற்றுமையைக் கடைப்பிடிக்கிறோம். தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் அதற்குக் காரணம் இப்போது நாம் இருக்கும் இந்து மதமானது நமக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதனால்தான்.” என அம்பேத்கர் குறிப்பிட்டார்.

   

  சாதி அடுக்குகளை அப்படியே வைத்துக்கொண்டு சீர்திருத்தங்கள் செய்தால் போதும் என்று மகாத்மா காந்தியடிகள் கூறியதை அம்பேத்கர் ஏற்கவில்லை. என்ன பதில் சொன்னார் தெரியுமா? வேறு ருசிகளை மாற்றிவிட முடியலாம். ஆனால், விஷத்தை அமுதமாக்க முடியாது என்றார் கடுமையான கோபத்துடன். தீண்டத்தகாதோர் எனப்படும் ஒருவர்கூட, இந்த தேசம் குறித்து பெருமை கொள்ளமாட்டர்கள் என்றார்.

   

  ஆம், தேசப்பிதா மகாத்மா காந்தியுடன் அம்பேத்கர் பல விஷயங்களில் முரண்பட்டே வந்தார். அதில் முக்கியமான ஒன்று புனா ஒப்பந்தம். இதன் வெளிப்பாடாகத்தான் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள். சுமார் 10 லட்சம் மக்களோடு அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு பௌத்தத்தை ஏற்றுக் கொண்டார்.பௌத்த மார்க்கத்தை தழுவும் பொழுது அவர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுதான் முழு விடுதலைக்கான வழி. அந்த உறுதிமொழிகள் அடங்கிய நூல் உலகத்தில் தலை சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

   

  அம்பேத்கர் மறைந்து 66 ஆண்டுகள் ஆகிவிட்டன.தற்போது அம்பேத்கரையும் பௌத்தத்தையும் ஸ்வீகரிக்கும் முயற்சியில் இந்துத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளனர். பௌத்தம் இந்து மதத்தின் கூறு என அவர்கள் வாதிடுகின்றனர். இதை பவுத்த மதத்தினரும் அம்பேத்கரியவாதிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இதே போன்று அம்பேதகரின் கருத்துக்களை அங்கும் இங்கும் கத்தரித்து, “பாருங்கள் அவர் இந்து மதத்திற்கு எதிரானவர் இல்லை” என நிறுவுகிறார்கள்.

   

  உண்மையில் இப்போது நம் முன் நிற்கும் கேள்வி? அம்பேத்கர் யாருக்கு சொந்தமானவர்? சாதியால், மதத்தால், பிறப்பால்,பாலினத்தால் ஒருக்கப்படும் அனைவருக்குமானவர் என்பதே இதற்கு பதில். ஆம் அவர் அனிதாவுக்கு சொந்தக்காரர், ரோகித் வெமுலாவுக்கு சொந்தமானவர். பிரித்திகா யாசினிக்கு சொந்தமானவர். அவருக்கு சொந்தமானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.