HOME » DIRECTOR CHERAN

Cheran (சேரன்)

  ஆட்டோகிராஃப் நாயகன் சேரன் இயக்கிய மற்றும் நடித்த வெற்றிக்கதைகளின் சுவாரஸ்சிய பயணம்!

  பாரதி கண்ணம்மா படத்தில் இயக்குனராக கால் பதித்த நாள் முதல் பல சமூக கருத்துக்களைப் படங்களை இயக்கி மக்கள் மனதில் தனக்கென ஓர் அங்கீகாரத்தைப் பிடித்த இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவர் தான் நம்ம மதுரைக்காரரான சேரன்.

  “ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே“ என்ற ஆட்டோகிராப் பாடலைக் கேட்கும் போதே மனதில் இனம்புரியாத சந்தோஷமும், சோகமும் அலைபாயும். அந்தளவிற்கு ஒவ்வொருவரின் பள்ளிகால மற்றும் கல்லூரிக்கால காதல் வாழ்க்கையை அப்படியே திரைக்குக் காண்பித்தவர் இயக்குனர் சேரன்.. அப்படத்தில் நடிகராகவும் வலம் வந்த பெருமைக்குரியவர்.

  பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கே. பாலச்சந்தர் போன்ற பல முன்னணி இயக்குனர்களுக்கு நடுவில் சமூக கருத்துள்ள படங்களை இயக்கி மக்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தைப்பிடித்த நம்ம சேரனின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் சுவாரஸ்சியமானது.

  மதுரை மாவட்டம் கொழிஞ்சிப்பட்டி எனும் குக்கிராமத்தில் பாண்டின் மற்றும் கமலா தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார் சேரன். இவரது தந்தை வெள்ளலூர் தியேட்டர் ஒன்றில் ப்ரொஜக்டர் ஆப்ரேட்டாக பணியாற்றியதால் சிறுவயது காலம் முதல் நடிப்பில் ஆர்வத்துடன் இருந்துள்ளார். கிராமத்தில் மற்றும் பள்ளியில் நிகழும் விழாக்களில் பல நாடகங்களில் நடித்துத் திறமையை வளர்த்தார் சேரன். மதுரையில் இருந்தால் கனவை நிறைவேற்ற முடியுமா? என்ற சந்தேகம் எழவே.. திரையுலக கனவுகளுடன் சென்னைக்கு வந்தார். ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்ற போது இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தார்.

  புரியாத புதிர், சேரன் பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட ஹிட் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றி, 1997 ல் பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகம் ஆனார்.

  “தென்றலுக்கு தெரியுதா தெம்மாங்கு பாட்டு“ என பாடலில் மட்டும் இல்லாமல் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் படம் முழுவதும் தெளிவாகக் காண்பித்திருப்பார் இயக்குனர் சேரன்.. திரையுலகம் இப்படத்தை கொண்டாடினாலும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. இதையெல்லாம் எதிர்த்துத் தொடர்ந்து பல சமூக கருத்துள்ள படங்களை மக்களுக்காக இயக்கினார் சேரன்.

  “ஊனம் என்பது மனதில் தான் உடலில் இல்லை என்பதையும் குயவர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் விதமாக பொற்காலம், கிராமத்தில் எந்த வசதியும் இல்லை… நீங்களும் எங்க கூட வந்து வாழுங்கள் என்று முதல்வரை கடத்தும் தேசிய கீதம், வெளிநாடு வேணாம் நம் ஊர்லயும் வாழலாம் என்பதை வெளிப்படுத்திய வெற்றிக்கொடி கட்டு, நட்பு, காதல், குடும்பம், பாசம் அனைத்தையும் ஒரு சேர்த்த பாண்டவர் பூமி, போர்க்களம்“ என பல வெற்றிப்படங்களை இயக்கிய பெருமைக்குரியவர் தான் சேரன்.

  இயக்குனராக மக்கள் மனதில் இடம் பிடித்த காலக்கட்டத்தில், சிறு வயது கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான “சொல்ல மறந்த கதையில் ஹீரோவாக“ அறிமுகமானார் சேரன்.. கிராமத்து இளைஞனாகவும் வறுமையில் சிக்கித்தவிக்கும் குடும்பம் மற்றும் பணக்கார மனைவியின் குடும்பத்திடம் சிக்கித்தவிப்பது போன்ற கதைக்களத்தில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றிக்கண்டார் சேரன்.

  பின்னர் 2004 ல் இயக்கியும், நடித்தும் வெளியான ஆட்டோகிராப் இன்றைக்கும் மக்கள் மனதில் ஆட்டோகிராப் ஆக உள்ளது. பள்ளிகால மற்றும் கல்லூரிக்கால காதல் வாழ்க்கையை அப்படியே திரைக்குக் காண்பித்தார் இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன்.. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு தவமாய் தவமிருந்து படத்தில் நாயகனாகவும் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் மகனாக நடிப்பில் அசத்தினார். ஆனந்தம் விளையாடும் வீடு, மூன்று பேர் மூன்று காதல், யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம், மாயக்கண்ணாடி போன்ற படங்களில் ஹீரோவாக வலம் வந்து முத்திரைப் பதித்தார் சேரன்.

  சேரன் பெற்ற தேசிய விருதுகள்:

  நடிப்பு மற்றும் படம் இயக்குவதில் மற்றவர்களுடன் போட்டியிட்டு முன்னிலை வகித்த சேரன், 2000 ல் வெளியான வெற்றிக்கொடி கட்டு, 2004 ல் வெளியான ஆட்டோகிராப், 2005 ல் தவமாய் தவமிருந்து, 2005 ல் வெளியான ஆடும் கூத்து போன்ற திரைப்படங்களுக்கு சிறந்த இயக்குனராக தேசிய விருதை பெற்றார். இதோடு தமிழக அரசின் திரைப்பட விருதை 8 முறையும், சிறந்த திரைப்படம், சிறந்த வசனம் மற்றும் எழுத்தாளர், சிறந்த இயக்குனர் என பல துறைகளில் விருதுகளை வென்றார் சேரன். பின்னர் பிலிம் பேர் விருதுகளை 5 முறையும், திரைப்படங்கள் சார்ந்த பல தரப்புகளில் பல விருதுகளையும் பெற்றார்.

  இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் தொய்வு ஏற்பட்ட சமயத்தில் குடும்பத்திலும் பல பிரச்சனைகளை சந்தித்ததால், திரையுலகில் முகம் காட்டாமல் இருந்தார் சேரன். பின்னர் தன்னுடைய திறமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

  தன்னுடைய வாழ்க்கையில் என்ன தான் பல பிரச்சனைகளில் சிக்கினாலும், சேரன் என்றாலே சமூக கருத்துள்ள கதைகளை இயக்குவதிலும் நடிப்பிலும் என்றைக்கும் சூப்பர் ஹீரோ என்ற பெயரைப்பெற்ற பெருமைக்குரியவராகவே உள்ளார்.