Attakathi Dinesh (அட்டகத்தி தினேஷ்)

    அட்டகத்தி தினேஷ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

    சினிமா துறையில் முன்னுக்கு வருவதற்கு பெரிய பின்புலமோ, உடல் தோற்றமோ தேவை இல்லை என்பதை தனது நடிப்பு திறமையின் மூலம் நிரூபித்தவர் தான் அட்டகத்தி தினேஷ். இவர் நடித்த படங்கள் எல்லாவற்றிலும் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இன்று சினிமா துறைக்கு வரக்கூடிய பலரும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேலையில், தனது சினிமா பயணத்தை சாதாரண கதாபாத்திரங்கள் மூலம் தொடங்கியவர் தான் நடிகர் தினேஷ். இந்த பதிவில் இவரை பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

    இளமை பருவம்

    நடிகர் தினேஷ் அவர்களது முழு பெயர் தினேஷ் ரவி என்பதாகும். இவர் 1984-இல் வேலூரில் பிறந்தார். இவர் தனது உயர்நிலைப் பள்ளியை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, 2010 ஆம் ஆண்டு முதல் நடிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டு, பல வகையில் முயற்சித்தார். அதன்படி விஜய் டிவியில் “காதலிக்க நேரமில்லை” என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதற்கு அடுத்தாக சன் டிவி தொடரான பெண் என்கிற தொடரில் நடிகை சீதாவுக்கு மகனாக நடித்தார். இப்படியாக தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகர் தினேஷ்.

    திரைப்படங்கள்

    இதற்கு அடுத்தாக நேரடியாக தமிழ் படங்களில் நடிக்கும் பல வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில், 2011ல் ஆடுகளம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதே ஆண்டில் மௌனகுரு படத்திலும் நடித்து இருந்தார். இந்த இரு படங்களிலும் சாதாரண கதாபாத்திரத்திலேயே இவர் நடித்திருந்தார். இதன் பிறகு 2012-இல் இயக்குனர் பா. ரஞ்சித்தின் அட்டகத்தி திரைப்படத்தில் தினேஷ் தோன்றி ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. மற்றும் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றது. இந்த படத்தின் மூலம் நடிகர் தினேஷ் ஒரு சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகராக உருவெடுத்தார். இது மட்டுமன்றி இந்த படம் இயக்குனர் பா.ரஞ்சித்தின் சினிமா பயணத்திலும் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

    அட்டகத்தி படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தது. எனவே அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக எதிர் நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்த குக்கூ படத்தில் 2014-இல் நடித்தார். இதில் மீண்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி அசத்தி இருந்தார் தினேஷ். அவரது அற்புதமான நடிப்பு எல்லா தரப்பு மக்களிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்று தந்தது. அடுத்ததாக அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கிய திருடன் போலீஸ் படத்தில் நடித்தார்.

    பிறகு 2015-இல் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். அடுத்தாக எம். சத்ரகுமாரின் லாக் அப் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட விசாரணை திரைப்படத்தில் தினேஷ் நடித்தார். இந்த படம் பல்வேறு விருதுகளை குவித்தததோடு பெரும் விவாதத்தையும் எழுப்பியது. இன்று வரை இந்த படம் முக்கிய தமிழ் படமாக பார்க்கப்படுகிறது.

    நடிகர் தினேஷ் சினிமா கேரியரில் இந்த படம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றே சொல்லலாம். இதற்கு அடுத்தாக ஒரு நாள் கூத்து, கபாலி, உள்குத்து, அண்ணனுக்கு ஜெய், களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்திருந்தார். 2019-இல் இரண்டம் உலகபோரின் கடைசி குண்டு படத்திலும் நடித்து அசத்தி இருந்தார். இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. மேலும் தற்போது, ஜே பேபி, பள்ளு படாம பார்த்துக்கோ, தேறும் போரும் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். வரும் காலங்களில் அட்டகத்தி போன்ற பல படங்களை எதிர்பார்க்கலாம்.

    விருதுகள்

    நடிகர் தினேஷ் நடித்த படங்களில் அட்டகத்தி, குக்கூ, விசாரணை ஆகிய படங்கள் பல்வேறு விருதுகளை குவித்துள்ளது. குறிப்பாக அட்டகத்தி படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விஜய் விருதுக்கு தினேஷின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான SIIMA விருதுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதே போன்று, குக்கூ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விஜய் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.