Dharmendra Pradhan (தர்மேந்திர பிரதான்)

  முதுகலை மாணவர் டூ மத்திய அமைச்சர்; தர்மேந்திர பிரதான் அரசியல் பயணம் குறித்த ஓர் பார்வை!

  பாரதீய ஜனதா கட்சியில் இணை அமைச்சராக இருந்த தேபேந்திர பிரதானின் மகனான தர்மேந்திர பிரதான் கட்சியில் இணைத்துக் கொண்டு பல பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டவர். தன்னுடைய அமைச்சரவையில் எத்தனை சிக்கல்கள் மற்றும் எதிர்ப்புகள் வந்தாலும் தகர்ந்தெறிந்து எப்படி அரசியலில் கால் பதித்து நிற்கிறார் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

  இளமைப்பருவம்

  வாஜ்பாய் அரசில் இணை அமைச்சராக இருந்த தேபேந்திர பிரதான் மற்றும் பசந்தா மஞ்சேரி பிரதான் தம்பதியினருக்கு கடந்த 1969 ஆம் ஆண்டு ஜுன் 26 ல் ஒடிசா மாநிலத்தில் உள்ள கண்டயத் குர்மி பகுதியில் பிறந்தார் தர்மேந்திர பிரதான். புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்தே தந்தையின் அரசியல் வாழ்க்கையைக் கவனித்து வந்த சூழலில் தான் தன்னையும் அரசியலில் இணைத்துக் கொண்டார் தர்மேந்திர பிரதான்.

  தர்மேந்திர பிரதான் கடந்து வந்த அரசியல் பாதை…

  கடந்த 1983ல் அகில இந்திய பாரதீய வித்யார்த்தி பரிஷத் செயல்பாட்டாளராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் தர்மேந்திர பிரதான். இந்த அமைப்பின் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்ட இவர், தந்தையின் வழிக்காட்டுதலின் படி பாரதீய ஜனதாக கட்சிக்குள் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியும் பல்வேறு பதவிகளை வழங்கிய நிலையில் தான், கடந்த 2004 ஆம் ஆண்டு தியோகர் பகுதியில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து தலா இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மேந்திர பிரதான் தனக்குரிய பணிகளைத் திறம்பட மேற்கொண்டு வருகிறார். மோடி தலைமையில் பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றி வரும் இவர், பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தாலும் பிரச்சனையைத் தான் சந்தித்து வருகிறது.

  அமைச்சராக தர்மேந்திர பிரதான்…

  மோடி அமைச்சரவையில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், பல புதிய முயற்சிகளைக் கொண்டார். குறிப்பாக இந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் வெற்றிக்கு பெருமை சேர்ந்தார் தர்மேந்திர பிரதான். நாடு முழுவதும் சுமார் 8 மில்லியனுக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மானிய விலையில் கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இவர் “ உஜ்வாலா நாயகன்“ என்ற அந்தஸ்த்தைப் பெற்றார். இவரின் இந்த முயற்சிகள் தான் கடந்த 2019 லோக் சபா தேர்தலில் மோடி அரசாங்கம் வெற்றி பெற்றமைக்கு முக்கிய காரணமாகும். இத்திட்டத்தின் கீழ், ஆரம்பத்தில் கேஸ் சிலிண்டர் மானியம் முறையாக வழங்கப்பட்டு வந்தாலும், தற்போது வழங்கப்படவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  அரசின் கொள்கை முடிவுகளில் தர்மேந்திர பிரதான்…

  ஹைட்ரோகார்பன் துறையில் சில முக்கிய முடிவுகளை பிரதான் தலைமை தாங்கினார். பிரதான், மத்திய அமைச்சரவையின் ஆதரவுடன், புதிய ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையை கொண்டு வந்துள்ளார்

  இதே போன்று மத்திய அமைச்சரவையில் குறுகிய காலம் மட்டும் எஃகு அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும், இரண்டாம் நிலை எஃகு துறையின் வளர்ச்சியை உறுதி செய்வது மறறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பல முயற்சிகளை எடுத்து வந்தார்.

  நீட் தேர்வும் தர்மேந்திர பிரதானும்…

  இந்தியாவில் மீண்டும் மோடி தலைமையிலான அமைச்சரவை செயல்பட்டுவரக்கூடிய நிலையில், தற்போது தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். நாடு முழுவதும் மனிதவளத்தை மறுதிறன் செய்யம் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது பதவிக்காலத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 40 சதவீத அதிகமாகவும், மாணவர் சேர்க்கை 2019 வரை 20 சதவீதத்திற்கு அதிகமாக இருந்துள்ளது.

  மேலும் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பட்ட மக்களையும் சமமாக நடத்த நீட் தேர்வு கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் பல்வேறு போராட்டங்களை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மேற்கொண்டுவரும் நிலையில் மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் தான், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வை நாங்கள் கொண்டுவரவில்லை என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி தான் இந்த தேர்வை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

  நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை பாரதீய ஜனதா கட்சியில் அமைச்சராக இருந்து நிறைவேற்றியுள்ளார். இருந்தப் போதும் சில கொள்கை முடிவுகள் அனைத்துத்தரப்பட்ட மக்களையும் பாதிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.