HOME » DEEPAVALI

Deepavali

  தீபாவளி பண்டிகை – உருவான விதம் மற்றும் கொண்டாட்டங்கள்!

  தீபாவளி என்றாலே பட்டாசு, மத்தாப்பு, புத்தாடைகள், இனிப்பு மற்றும் பலகாரங்கள் போன்றவை தான் நமது நினைவுக்கு வரக்கூடியவை. தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாட கூடிய பலருக்கும் தீபாவளி எதற்காக கொண்டாடுகிறோம், இதற்கான வரலாறு என்ன என்பது குறித்து சரியாக தெரிவதில்லை. வெறுமனே விடுமுறை கிடைக்கின்ற ஒரு ஜாலியான நாளாகவே தீபாவளியை பலரும் பார்க்கின்றோம். எனவே இந்த பதிவில் தீபாவளியின் முழு வரலாற்றையும், அதன் சிறப்பம்சத்தையும் பற்றி பார்ப்போம்.

  வரலாறு

  தீபாவளி பண்டிகை குறித்து பல விதமான வரலாறுகள் உள்ளன. இதிகாசகளின் படி நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்கிற ஊரின் மன்னனாக இருந்த நரகாசுரன், அங்குள்ள மக்களுக்கு பலவித கொடுமைகளை செய்து வந்தான். அது மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் அச்சுறுத்தல்களை கொடுத்து வந்தான். இப்படி பல வகையில் தீங்கு செய்து கொண்டே இருந்த நரகாசுரனை வதம் செய்ய கிருஷ்ணர் முடிவெடுத்தார்.

  ஆனால், பூதேவியின் மகனான நரகாசுரன் கடும் தவம் இருந்து, பிரம்மனிடமிருந்து ஒரு அசாதாரமான வரத்தைப் பெறுகிறான். அதாவது, நரகாசுரனின் மரணம் என்பது அவரது தாயாரின் கையால்தான் நிகழ வேண்டும் என்கிற வரத்தை பெறுகிறான். மேலும், தனது தாயாரை தவிர வேறு யாரும் தன்னை அழிக்க முடியாது என்கிற கர்வம் அதிகரித்ததன் பெயரில் பல கொடுமைகளை துணிச்சலாக செய்து வந்தான். நரகாசுரனின் ஆணவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் அனைத்து கடவுள்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.

  அதன்படி, கிருஷ்ணரே நரகாசுரனை வதம் செய்வதற்கு முன் வந்தார். இந்நிலையில் நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், பூதேவயின் மறு உருவமான தனது மனைவி சத்யபாமாவை ரத சாரதியாக அழைத்துக் கொண்டு நரகாசுரனை வதம் செய்ய கிளம்புகிறார். இந்த யுக்தியை கொஞ்சம் கூட அப்போது நரகாசுரன் எதிர்பார்த்திருக்க மாட்டான். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில், நரகாசுரன் விட்ட அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார்.

  இதை பார்த்த ரத சாரதியான சத்யபாமா, தன்னிடம் இருந்த வில்லை எடுத்து, அம்பை தொடுத்து நரகாசுரனை தாக்குகிறார். ஒரு வழியாக கிருஷ்ணர் நரகாசுரனின் வரத்தை வைத்தே அவரை தந்திரமாக வீழ்த்தி விடுகிறார். அதன் பின்னர் அவனின் பிடியில் இருந்த அனைத்து மக்களையும் காப்பாற்றுகிறார். இந்த விடியல் நிறைந்த நாளை தான் மக்கள் அன்றில் இருந்து இன்று வரை தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.

  தீபத் திருநாள் :

  தீபாவளி பண்டிகையை தீபத் திருநாள் என்று அழைப்பதுண்டு. இதற்கு இன்னொரு கதையும் உண்டு. 10 தலை ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்த ராமன், பிறகு சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். பல ஆண்டுகளாக வனவாசம் இருந்த நிலையில் நாட்டிற்கு திரும்பியதால் மக்கள் அவருக்கு மன்னனாக முடி சூடுகின்றனர். இந்த நன்னாளை தான் அயோத்தி மக்கள் தீபங்களை ஏற்றி தீபக் திருநாளாக கொண்டாடினர். இதனால் தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்கிற பெயரும் வந்தது என புராணங்கள் கூறுகின்றன. இது போன்ற பல வித கதைகள் தீபாவளிக்கு உள்ளது.

  கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள்

  அன்று தொட்டு இன்று வரை தீபாவளி பண்டிகை என்பது சந்தோஷம் நிறைந்த ஒரு நன்னாளாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு ஒரு மாதத்தில் இருந்தே மக்கள் அதற்கான பணிகளை செய்ய தொடங்கி விடுவர். குறிப்பாக சுவையான இனிப்புகள், கார பலகாரங்கள் போன்றவற்றை தீபாவளி பண்டிகைக்கு சில வாரத்திற்கு முன்பிருந்தே தயார் செய்து வைத்து கொள்வர். இது ஒரு புறம் இருக்க, தீபாவளி அன்று அணிய கூடிய விதவிதமான புத்தாடைகளையும் ஒரு மாத காலத்திற்கு முன்பிலிருந்தே மக்கள் வாங்க தொடங்கி விடுவர்.

  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

  இப்படி ஒரு மாத காலமாக மக்கள் தங்களை தயார்படுத்தி கொண்ட ஒரு மகிழ்ச்சி பொங்கும் திருநாளான தீபாவளி அன்று காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து தள்ளுவார்கள். அதன் பிறகு இறைவனை வழிபாடு செய்துவிட்டு, இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பெரியர்களிடம் ஆசி பெறுவார்கள். சிலர் தீபாவளி அன்று வெளியாக கூடிய புது படங்களுக்கு குடும்பமாக சென்று தங்களது நாளை கழிப்பார்கள்.

  வாழ்வில் ஒளியை தர கூடிய பண்டிகையான தீபாவளியை இந்துக்கள் மட்டுமன்றி பிற மதத்தினரும், பிற நாட்டவரும் கொண்டாடி வருவது இதன் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது.