தி.மு.கவின் பகுதி பிரதிநிதியாக வாழ்க்கையை தொடங்கி முதல்வரான
மு.க ஸ்டாலினின் அரசியல் பயணம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுதி பிரதிநிதியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி தற்போது தமிழக முதல்வராக வெற்றி வாகை சூடியுள்ளார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற மு.க ஸ்டாலின்.
குடும்ப அரசியலைக் கொண்டாடும் கட்சித் தான் திராவிட முன்னேற்றக்கழகம் என்று பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் முன் வைத்தாலும் அரசியலில் கடைநிலைத் தொண்டனாகவும், திமுக கட்சியின் பகுதி பிரதிநிதி என படிப்படியாக முன்னேறி தற்போது தமிழகத்தின் முதல்வராகப் பதவியில் உள்ளார்
மு.க ஸ்டாலின். இந்த நிலைக்கு வருவதற்கு பல போராட்டங்களை சந்தித்ததோடு மிசாவில் கைதாகி சிறைவாசமும் பெற்றார். இது போன்று மக்களின் நலன்களுக்காக எண்ணற்ற போராட்டங்களைச் சந்தித்து உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்க வைக்கும் முதல்வராக உள்ள மு.க ஸ்டாலின் சுவாரஸ்சிய அரசியல் பயணம் பற்றிய ஓர் பார்வை இங்கே…
மு.க ஸ்டாலின் இளமைப்பருவம்:
மு. கருணாநிதிக்கும் அவரது இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கும் கடந்த 1953 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பிறந்தார் மு.க ஸ்டாலின். இவர் பிறந்து நான்காவது நாளில் சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலின் மறைந்ததால், தன்னுடைய குழந்தைக்கு அவரது பெயரையே சூட்டினார் கருணாநிதி.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பைப் பயின்ற இவர், மாநிலக்கல்லூரியில் தன்னுடைய வரலாற்றுப் படிப்பை நிறைவு செய்தார். நினைவுத் தெரிந்த காலத்தில் இருந்தே அரசியல் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக தனது தந்தையான கருணாநிதி பதவி வகித்ததைப் பார்த்த ஸ்டாலினுக்கு சிறு வயதில் இருந்தே அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது.
இந்த சூழலில் தான், கடந்த 1960 ன் பிற்பகுதியில் கோபாலபுரம் பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து “இளைஞர் திமுக“ என்ற அமைப்பு உருவாக்கினார். இதன் என்ற பெயரில் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடி வந்தார் மு.க ஸ்டாலின். இந்த ஆரம்பம் தான் தற்போது திமுகவில் இளைஞரணி உருவாக அடித்தளமாக அமைந்ததுள்ளது.
மு.க ஸ்டாலின் அரசியல் பிரவேசம்:
கடந்த 1967 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 14 வயதில் அரசியல் வாழ்க்கைத் தொடங்கிய ஸ்டாலின், அந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவிற்காகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் 1973ல் திமுக வின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வானார் ஸ்டாலின். இதன் பிறகு தமிழகத்தில் கடந்த 1976ல் எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் பெற்றார். அப்போது போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியின் 75 வது வட்ட தி.மு.க வின் பகுதி பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டது தான் இக்கட்சியில் இவருக்கு கிடைத்த முதல் பதவி என்று கூறலாம்.
மேயராக மு.க ஸ்டாலின்:
தனக்கு பகுதி பிரதிநிதி பதவி கிடைத்ததையடுத்து கட்சியின் வளர்ச்சிக்காக பல போராட்டங்களையும், நலத்திட்டங்களையும் மக்களுக்காக மேற்கொண்டார் மு.க ஸ்டாலின். கடந்த 1996 ஆம் ஆண்டு மக்களால் சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார். மேயராக பதவி வகித்த போது “ சிங்கார சென்னை“ என முழக்கத்தை முன் வைத்த ஸ்டாலின் மழைநீர் வடிகால் வாரியம், 9 இடங்களில் மேம்பாலம் கட்டியது மற்றும் சென்னை பெருவெள்ளத்தில் மக்களைக் காப்பாற்றியது என சொல்லும் அளவிற்கான பல பணிகளை செய்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2001 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மு.க ஸ்டாலின் மீண்டும் சென்னையின் மேயராக வெற்றி பெற்றார். ஆனால் ஒருவர் ஒரு பதவியை மட்டும் வகிக்க முடியும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதால் தனது மேயர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்தார். தமிழகத்தில் 2006 ல் மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த போது உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவியேற்றார் மு.க ஸ்டாலின். தன்னுடைய துறையில் அசோக் வர்தன் ஷெட்டி, டி. உதய சந்திரன் என சிறப்பாக அதிகாரிகளைத் தேர்வு செய்து பணியாற்றியதால் பல குறிப்பிடத்தக்க பணிகளை அவரால் செய்ய முடிந்தது.
இருந்தப்போதும் திமுக கட்சிக்கு எதிராக பல 2ஜி ஸ்கேம் போன்ற பல பிரச்சனைகள் எழுந்தமையால் 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து 2014, 2016 சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் தான் வயது முதிர்வின் காரணமாக 2016ல் தனது கட்சிப்பணிகளில் கருணாநிதி ஒதுங்கிய நிலையில் கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றார் மு. க ஸ்டாலின். மேலும் 2018ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவிற்கு எந்த சலசலப்பும் இன்றி திமுக கட்சியின் தலைவரானார் மு.க ஸ்டாலின்.
எப்படியாவது ஆட்சிப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதற்காக நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது எதிர்க்கட்சியான அதிமுகவில் பல பிரச்சனைகள் எழுந்தது. இதோடு பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வராக இருந்த செல்வி. ஜெயலலிதா மரணத்தையடுத்து மக்களிடம் செல்வாக்கை இழந்த கட்சியானது அதிமுக. இந்த சூழலில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார் மு.க ஸ்டாலின். நேர்மையான மற்றும் திறமையான ஆட்சியாளர்கள் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களை நியமித்து ஆட்சி நடத்தி வருகிறார்
மு. க. ஸ்டாலின்.
வழக்கம் போல எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் தன்னுடைய பணியை திறம்பட செய்து வருகிறார்.
சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடரில் மு.க ஸ்டாலின்:
மு. கருணாநிதியைப் போன்று எழுத்திலும், திரையுலகிலும் அந்தளவிற்கு சாதிக்கவில்லை மு.க ஸ்டாலின். இருந்தபோதும் ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் ஆகிய திரைப்படங்களிலும் குறிஞ்சி மலர், சூர்யா போன்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். நடிப்பை விட அரசியலில் அதிக ஈடுபாடு இருந்தமையால் சினிமாத்துறையை விட்டு வெளியேறினார் ஸ்டாலின்.
திருமணம் மற்றும் பொழுது போக்கு
கடந்த 1975ல் மு.க. ஸ்டாலினுக்கு துர்காவதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும், மற்றும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர். அரசியலில் மட்டுமில்லாமல் செஸ், கிரிக்கெட், பேட்மிட்டன் போன்ற விளையாட்டுகளிலும் மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் அதிக ஆர்வம் கொண்டவராக உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.