HOME » CHETESHWAR PUJARA

Cheteshwar Pujara (சேதேஷ்வர் புஜாரா)

    தனது கனவோடு சேர்த்து தந்தையின் கனவையும் நிறைவேற்றிய இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா!

    இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பு சுவர் என்றழைக்கப்பட்ட சிறந்த வீரர் ராகுல் டிராவிட். கிட்டத்தட்ட இவருக்கு சமமான திறமையுடன் டெஸ்ட் போட்டிகளில் தவறாமல் இடம்பெறுவார் விவிஎஸ் லக்ஷ்மன். கடந்த 2012-ல் இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணிக்கு அரணாக அமைய கூடிய மாற்று பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி கிரிக்கெட் உலகில் எழுந்தது.

    மிக பெரிய வீரர்களுக்கு மாற்றாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கிடைத்தவர் தான் செதேஷ்வர் புஜாரா. இதுவரை எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைக்கு சொந்தக்காரர். அப்படி என்ன செய்துள்ளார் என்றால் ஒரே இன்னிங்க்ஸில் அதிக பால் (525 பால்களை) எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய அணியின் அடுத்த ராகுல் டிராவிட் என்ற பெயரும், புகழும் பெற்ற புஜாராவின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை பற்றிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    பிறப்பு:

    கடந்த 1988-ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் ஒரு இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார் செதேஷ்வர் புஜாரா. தந்தை பெயர் அரவிந்த்’புஜாரா, தயார் பெயர் ரீமா புஜாரா. இவர் கிரிக்கெட் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்ததால் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் இருந்தார். இவரது தந்தை அரவிந்த் மற்றும் இவரது மாமா பிபின் ஆகியோர் சவுராஷ்டிரா அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய வீரர்கள் ஆவர். புஜாராவின் திறமைகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொண்ட பெற்றோர் கிரிக்கெட் விளையாட்டிற்காக உரிய பயிற்சிகளை மேற்கொள்ள உதவினர். தனது பள்ளி படிப்பை ராஜ்கோட்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி வித்யாலயா பள்ளியில் முடித்தார். பின் ஜே.ஜே குண்டலியா கல்லூரியில் தனது BBA-வை முடித்தார். இதற்கிடையே தனது 17-வது வயதில் கேன்சரால் பாதிக்கப்பட்ட தாயை இழந்தார் புஜாரா.

    சவுராஷ்டிரா அணியில் அறிமுகம்:

    முறையான கோச்சிங் சென்டர் சென்று பயிற்சி எடுக்க முடியாத பொருளாதார சூழலில் வளர்ந்த புஜாராவுக்கு அவரது தந்தை அரவிந்த் மற்றும் உறவினர் பிபின் தான் பயிற்சியாளர்களாக செயல்பட்டனர். இருவரும் எவ்வளவு நேரம் பவுலிங் போட்டாலும் எளிதில் அவுட் ஆகாமல் தாக்குப்பிடிக்கும் திறனை வளர்த்து கொண்ட புஜாரா, லோக்கல் மேட்ச்களில் சிறப்பாக ஆடி சவுராஷ்டிரா டீம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒருகட்டத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட புஜாரா, அன்டர் 14 டீமில் இவரை போல பேட்ஸ்மேன் இல்லை என்னும் அளவிற்கு வளர்ந்தார். ஏனென்றால் 15 மேட்ச்களில் 13 சதம் விளாசி கிரிக்கெட் உலகில் தனது பெயரை நிலை நிறுத்தினார்.

    இந்திய அணியின் அன்டர் 19 டீமில் அறிமுகம்:

    சவுராஷ்டிரா டீமில் இவர் காட்டிய அதிரடி காரணமாக கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியா v/s இங்கிலாந்து போட்டியின் போது 19 வயதுக்குட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் புஜாரா அறிமுகமானார். இங்கும் தனது அதிரடியை தொடர்ந்த புஜாரா 211 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற உதவினார். அந்த டெஸ்ட் சீரிஸில் 400 ரன்களுக்கும் மேல் குவித்த புஜாரா சிறந்த ஆட்ட நாயகன் விருதையும் பெற்று அசத்தினார். 2006 ஆம் ஆண்டில், Afro-Asia அன்டர்-19 கோப்பையின் போது 4 இன்னிங்ஸ்களில் மூன்று முறை 50-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்ததால், 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் போட்டியின் நாயகனாகவும் இருந்தார்.

    சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

    நாட்டிலுள்ள அனைத்து கிரிக்கெட் பிளேயர்களின் உயரிய லட்சியம் இந்திய அணியில் இடம்பெறுவது. 2010-ஆம் ஆண்டு பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அறிமுகமானார். முதல் இன்னிங்சில் 4 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 72 ரன்கள் எடுத்தார். எனினும் டிராவிட், லக்ஷ்மன் உள்ளிட்ட மூத்த வீரர்கலின் லைன்அப் காரணமாக அணியில் நிலையான இடம்பெற முடியாமல் இருந்தார்.

    2012-க்கு பிறகு..

    சீனியர் வீரர்களின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் டிராவிடின் இடத்தில் புஜாராவை ஒன்-டவுனாக களமிறக்கினார் அப்போதைய கேப்டன் தோனி. தடுப்பு சுவர் டிராவிட்டிற்கு மாற்றாக களமிறக்கப்பட்டுளோம் என்பதை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி நியூஸிலாந்திற்கு எதிராக 159 ரன்கள், இங்கிலாந்திற்கு எதிராக 206 ரன்கள் என தனது மிரட்டலை துவக்கினார் புஜாரா. தொடர்ந்து அசத்திய இவர் சதம், இரட்டை சதம் என தனது டெஸ்ட் கேரியரில் பல முக்கிய மைல்கல்லை எட்டினார்.

    டெஸ்ட் மட்டும் ஏன்.?

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இவர் அதிகம் சேர்க்கப்படாமல், சோபிக்க முடியாமல் போனதற்கு காயமே காரணம். இவருக்கு செய்யப்பட்டுள்ள மூட்டுமாற்று அறுவை சிகிச்சை காரணமாக இவரால் விரைவாக ஓட முடியாது என்பதால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் டீமின் நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமே ஜொலிக்க முடிந்தது.

    திருமணம்:

    பிப்ரவரி 13 , 2013-ல் பூஜா பாபரி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள புஜாராவுக்கு அதிதி என்ற மகள் இருக்கிறார்

    மீண்டும் ஃபார்முக்கு வந்த புஜாரா:

    சில வருடங்களாக ஃபார்ம் அவுட்டில் இருந்த புஜாரா 2022 துவக்கத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று பலரும் கூற, எனினும் தனது திறமையை நிரூபிக்க கவுண்டி மேட்சில் Sussex டீமிற்காக விளையாடி வெறும் 10-க்கும் மேற்பட்ட இன்னிங்ஸில் சதம், இரட்டை சத்தம் என மாறி மாறி விளாசி 1000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார்.

    ஃபார்ம் அவுட்டில் இருந்து மீண்டு வந்துள்ள புஜாரா, இந்திய அணிக்காக மீண்டும் மிரட்டலை தொடர் வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.