HOME » BAKRID

Bakrid

  ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையும், அதன் வரலாற்றுச் சிறப்புகளும்!

  உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக பக்ரீத் விழா கொண்டாடப்படுகிறது. இதனை தியாகத் திருநாள் என்றும் கூறுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் துல்ஹஜ் (அரபி மாதம்) 10ஆம் நாளன்று ‘ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத்’ போற்றிக் கொண்டாடப்படுகிறது.

  பெரும்பாலும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு இரண்டு மாதங்கள் கழித்து பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் அல்லது மைதானங்களில் ஒன்று கூடி தொழுகை நடத்துகின்றனர். இந்த தொழுகையானது சூரிய உதயம் முழுமையாக வந்த பிறகே நடத்தப்படுகிறது.

  புத்தாடை அணிந்து வழிபாடு நடத்துவதுடன், ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி அன்பை பரிமாறி கொள்கின்றனர். அன்றைய தினம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை பரிமாறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

  தொழுகை நிறைவடைந்த பிறகு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிட்டு (குர்பானி) கொடுக்கின்றனர். வெட்டப்படும் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரிக்கின்றனர். அதில் ஒரு பங்கை அண்டை வீட்டார்களுக்கும், இரண்டாவது பங்கை ஏழைகளுக்கும், மூன்றாவது பங்கை தங்களுக்கும் என வைத்துக் கொள்கின்றனர். அந்த இறைச்சியில் சுவையான உணவு சுவைத்து உண்டு மகிழுகின்றனர்.

  பக்ரீத் வரலாறு

  இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் சோகத்தில் இருந்து வந்த அவர் குழந்தை வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

  இறுதியில் இறைவன் அருளால் இப்ராஹிமின் இரண்டாவது மனைவி ஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள் என்று கூறப்படுகிறது.

  இப்ராஹிமின் மகன் இஸ்மாயில் பால்ய பருவத்தை அடைந்தபோது, இப்ராஹிமின் கனவில் தோன்றிய இறைவன், மகன் இஸ்மாயிலை தனக்கு பலியிடுமாறு கட்டளையிட்டார். இதுகுறித்து மகனுக்கு அவர் தெரியப்படுத்தினார். கடவுளின் கட்டளை என்றால் தன்னை பலியிடுங்கள் என்று இஸ்மாயிலும் ஒப்புக் கொண்டார். அதன்படி மகனை அழைத்துச் சென்று பலி பீடத்தில் வைத்து இப்ராஹிம் வெட்ட முயன்றார்.

  சிஃப்ரயீல் என்னும் வானவர்

  இப்ராஹிம் தனது மகன் இஸ்மாயிலை வெட்ட துணிந்தபோது இறைவனின் குரல் அந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியது. தன் மீது கொண்ட பற்றினால் தன்னுடைய மகன் இஸ்மாயில் உயிரையே பலி கொடுக்க துணிந்த அந்தத் தந்தையின் தியாகத்தைப் புகழ்ந்து, தடுத்து நிறுத்தியது இறைவன் அல்லாஹ்வின் அன்பு. ‘சிஃப்ரயீல்’ எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அல்லாஹ் அந்த ‘பலி’யைத் தடுத்தார். மேலும், அங்கே ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயிலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமுக்கு கட்டளையிட்டார்.

  அதன்படி ஆட்டை பலியிட்டு, அதை அனைவரும் பகிர்ந்து உண்டு கொண்டாடினர். அந்த நாள் தான் இப்போது பக்ரீத் என்னும் பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

  பலியிடுதலில் கட்டுப்பாடு

  இஸ்லாமியர்கள் பலி கொடுக்கும் விலங்குகளை தேர்வு செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்றனர். குர்பானி கொடுக்கப்படும் விலங்கு ஆண் இனமாக இருக்க வேண்டும். பெண் பாலின விலங்குகளை பலி கொடுக்க கூடாது. குறிப்பாக, குர்பானி கொடுக்கப்படும் விலங்கானது நோயுற்றதாகவோ, உடல் ஊனம் கொண்டதாகவோ இருக்கக் கூடாது. பலியிடும் விலங்கின் இறைச்சியில் கட்டாயமாக ஏழைகளுக்கு பங்கு கொடுக்க வேண்டும்.

  பக்ரீத் பண்டிகையும், ஹஜ் முக்கியத்துவமும்

  பக்ரீத் பண்டிகையை ஈத்-உல்- அதா என்றும்m இஸ்லாமியர்கள் குறிப்பிடுகின்றனர். அது இஸ்மாயர்களின் புனித கடமையான ஹஜ் பயணத்தின் நிறைவை குறிக்கிறது. சவுதி அரேபியாவில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதிக்கு இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வதே ஹஜ் என்று அழைக்கப்படுகிறது.

  இந்தப் புனித பயணத்தின் போது இறைவனின் அருளை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை நடத்துகின்றனர். தங்களுடைய அனைத்து பாவங்களில் இருந்தும் விடுதலை வேண்டுகின்றனர். ஹஜ் பயணத்தின் நிறைவாக, புனித அராஃபத் என்னும் இடத்தில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி, நாள் முழுவதும் குரான் வசனங்களை வாசித்து தொழுகை நடத்துகின்றனர். அந்த இடத்தில் தான் இப்ராஹிம் தனது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்கத் துணிந்த இடம் என்று கருதப்படுகிறது.