HOME » ASHOK GEHLOT

Ashok Gehlot

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், தலைமையின் குடும்பத்திற்கு நம்பிக்கையானவர், அரசியல் மந்திரவாதி என அழைக்கப்படும் அசோக் கெலாட்டின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பு…

    ஆரம்ப கட்ட வாழ்க்கை:

    அசோக் கெலாட், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மகாமந்திரில் 1951ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்தார். இவரது தந்தை லக்சுமணன் சிங் கெலாட் மேஜிக் மேனாக இருந்துள்ளார். அசோக் கெலாட்டின் பரம்பரையே மேஜிக் செய்யும் தொழில் செய்து வந்துள்ளது. சின்ன வயதில் அப்பாவுக்கு உதவுவதற்காக பல மேஜிக் ஷோக்களில் அசோக் கெலாட்டும் பங்கேற்றுள்ளார். அசோக் கெலாட்டிற்கு மருத்துவராக வர வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது, ஆனால் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    அசோக் கெலாட் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டமும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். 1977ம் ஆண்டு சுனிதா கெலாட்டை மணமுடிந்த அசோக் கெலாட்டிற்கு, வைபவ் கெலாட் என்ற மகனும், சோனியா என்ற மகளும் உள்ளனர்.

    இந்திய தேசிய மாணவர் சங்கம்:

    கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே அசோக் கெலாட் தீவிரமான காந்தியவாதியாக திகழ்ந்தார். 1971ம் ஆண்டு கெலாட் அகதிகள் முகாமில் சேவையாற்றுவதைக் கண்ட முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி அவரை காங்கிரஸ் கட்சியில் இணைய வைத்தார். 1974ம் ஆண்டு காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (NSUI) முதல் மாநிலத் தலைவராக்கினார். ராஜஸ்தான் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் முதல் தலைவர் கெலாட் ஆவார்.

    அரசியல் பயணம்:

    1977ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 4,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 1980ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஜோத்பூர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார்.

    அதே தொகுதியில் 1984–1989, 1991–1996, 1996–1998, 1998–1999 5 முறை போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தொடுக்கப்பட்டார்.

    1999ஆம் ஆண்டு ஜோத்பூரின் சர்தார்புரா சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியிலிருந்து 2003ஆம் ஆண்டு தேர்தலிலும் 2008ஆம் ஆண்டு தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

    இந்திரா காந்தி அமைச்சரவையில் கெலாட்:

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் பி. வி. நரசிம்ம ராவ் ஆகியோரது அமைச்சர் அவைகளில் அசோக் கெலாட் இடம் பிடித்துள்ளார்.

    இந்திரா காந்தி இந்தியா பிரதமராக இருந்த சமயத்தில், செப்டம்பர் 2ம் தேதி 1982ம் ஆண்டு முதல் பிப்ரவரி 7ம் தேதி 1984ம் ஆண்டு வரை சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து துணை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பின்னர் 7 பிப்ரவரி 1984 முதல் அக்டோபர் 31, 1984 வரை விளையாட்டு அமைச்சகத்தின் துணை அமைச்சராக பணியாற்றிய அசோக் கெலாட், மீண்டும் நவம்பர் 12, 1984 முதல் டிசம்பர் 31, 1984 வரை சுற்றுலா மற்றும் சிவில் விமான போக்குவரத்து துணை அமைச்சராக மாற்றப்பட்டார். ​​

    தனது சீறிய பணிகளால் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியால் பாராட்டப்பட்ட அசோக் கெலாட் மத்திய அமைச்சராக பதவி வகித்தார். டிசம்பர் 31, 1984 முதல் செப்டம்பர் 26, 1985 வரையிலான காலகட்டத்தில், மத்திய சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இதையடுத்து, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவியேற்றார். அசோக் கெலாட் இந்த அமைச்சகத்தின் அமைச்சராக 21 ஜூன் 1991 முதல் 18 ஜனவரி 1993 வரை பதவி வகித்தார்.

    இதற்கிடையில், 1998ம் ஆண்டு ஜுன் முதல் நவம்பர் மாதம் வரை ராஜஸ்தான் அரசின் உள்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை அமைச்சராகவும் அசோக் கெலாட் பதவி வகித்துள்ளார்.

    ராஜஸ்தான் முதல்வர்:

    முதல் முறையாக 1998ம் ஆண்டு ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்ற அசோக் கெலாட் 2003ஆம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் பஞ்ச நிவாரணம், மின் உற்பத்தி, கட்டுமானம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றினார்.

    2003ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து பாஜகவைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராகவும், அசோக் கெலாட் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவியேற்றனர்.

    2008ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி அடைந்ததை அடுத்து இரண்டாவது முறையாக ராஜஸ்தான் முதலமைச்சராக பதவியேற்றார்.

    இதனையடுத்து அசோக் கெலாட் மூன்றாவது முறையாக ராஜஸ்தான் முதல்வராக 17 டிசம்பர் 2018 அன்று பதவியேற்றார். தற்போது 4வது முறையாக ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

    முக்கிய பொறுப்புகள்:

    2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக பதவி வகித்துள்ளார். 2017ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    சமூக சேவை:

    அசோக் கெலாட் பாரத் சேவா சன்ஸ்தான் அமைப்பை நிறுவியவர். ராஜீவ் காந்தி நினைவு புத்தக வங்கி மூலம் இந்த அமைப்பானது இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் இலவச புத்தகங்களை விநியோகித்து வருகிறது.

    டெல்லி ராஜீவ் காந்தி படிப்பு வட்டத்தின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி அளவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக செயல்படுகிறது.