பாஜக-வின் சாணக்கியரான அமித்ஷா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
அரசியலில் ஒரு பெரும் ஆளுமையாக உருவாக வேண்டுமென்றால் அதற்கு மாபெரும் உழைப்பும், திறமையும் தேவைப்படும். அப்படிப்பட்டவர்கள் மட்டுமே இன்றைய அரசியல் களத்தில் உறுதியாக நின்று போட்டி போட முடியும். அவர்களில் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் தான் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷா. இவரின் அரசியல் தந்திரம் தான் உலகம் முழுக்க இவரை அறிமுகம் செய்து வைத்தது என்றே சொல்லலாம். இந்த பதிவில் அமித்ஷாவின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம் மற்றும் பல சுவாரஸ்ய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இளமை பருவம்
அமித்ஷாவின் முழு பெயர் அமித் அனில் சந்திர ஷா என்பதாகும். இவர் மும்பையில் 1964ல் பிறந்தார். இவர் மெஹ்சானாவில் உள்ள பள்ளியில் பள்ளி படிப்பை கற்றார். அதன் பிறகு, இவர் உயிர் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். அடுத்து தனது தந்தையின் வணிகத்திற்காக அவருடன் இருந்து பணியாற்றினார். அமித் ஷா சிறுவயதிலிருந்தே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) ஈடுபாடு கொண்டிருந்தார்; மேலும் அகமதாபாத்தில் கல்லூரி நாட்களில் அவர் முறையாக ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஆனார். 1982 ஆம் ஆண்டு அகமதாபாத் ஆர்எஸ்எஸ் மூலம் நரேந்திர மோடியை முதன்முதலில் சந்தித்தார். அந்த நேரத்தில், மோடி ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்துள்ளார். இப்படி தான் இவர்களின் அறிமுகம் இருந்துள்ளது.
அரசியல் பயணம்
அமித் ஷா-வின் அரசியல் பயணம் என்பது இளம் வயதிலேயே தொடங்கி விட்டது எனலாம். இவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் மட்டுமல்லாது, பாரதிய சனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். பின்னர் 1985-இல் நரேந்திர மோதியின் கீழ் அமைந்த இளைஞர் அணியில் பணியாற்றினார். அடுத்தாக பா.ஜ.க.வில் நேரடியாக இணைந்தார். தொடக்கத்தில் இவர் பல்வேறு பிரச்சாரங்களுக்கு சென்று பேசி வந்தார். குறிப்பாக குஜராத்தில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராகப் பலமுறை பணி செய்துள்ளார்.
பிறகு இவர் 2002-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அமைச்சரவையில் குஜராத் மாநில உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். அப்போது பல வகையான அரசியல் தந்திரங்களை தனது பிரச்சாரத்தின் மூலம் முன்வைத்தார். அடுத்து 2007 ஆம் ஆண்டில் அமைச்சரவையில் அமைச்சரானார். இதற்கு பின்னர், 2013-இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார். அப்போது பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று தனது பிரச்சாரத்தை செய்து வந்தார். இதற்கு மாபெரும் சான்றாக 2014-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த வேளையில், உள்துறை அமைச்சராகப் இருந்த ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகி காரணத்தால் அப்பதவிக்கு அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குற்றசாட்டுகள்
அரசியல் களம் என்பது பலவித திருப்பங்களை கொண்டது தான் என்றாலும், அதில் பல குற்றசாட்டுகள் முக்கியமானதாக வரலாரா க மாறி இருக்கும். அந்த வகையில், அமித்ஷா மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக 2005 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சொராப்தீன் சேக் கொலை வழக்கில் அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. இது மிக முக்கிய குற்றச்சாட்டாக அப்போது பேசப்பட்டது. அதே போன்று 2009 ஆம் ஆண்டில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்கப்பட்ட வழக்கிலும் அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் காவல்துறை மோதல் தொடர்பான வழக்கு ஒன்றில் அமித்ஷாவை குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த வழக்கின் காரணமாகத் தன் அமைச்சர் பதவியையும் அமித்ஷா துறக்க நேர்ந்தது. இது பெரும் அதிர்வலையை அப்போது ஏற்படுத்தி இருந்தது. இது போன்று இன்று வரை பல குற்றசாட்டுகள் அமித்ஷா மீது வைக்கப்பட்டு வருகிறது.
உள்துறை அமைச்சராகவும், ராஜ தந்திரியாகவும்..
அமித்ஷா 2019ம் ஆண்டில் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். இதற்கு அடுத்து ஜூன் 1, 2019ல் உள்துறை அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு பல்வேறு ராஜ தந்திர நடவடிக்கையாக மேற்கொண்டார். குறிப்பாக ஆகஸ்ட் 5, 2019-இல், 370-வது பிரிவை நீக்கி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க செய்தார். இதே போன்று, செப்டம்பர் 2019 இல், இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த மொழியாக இந்தி மொழியை பேசப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் NRC மற்றும் CAA ஆகிய சட்ட திருத்தங்கள் மூலம் நாட்டு மக்களை நிலைகுலைய வைத்தார். இதனால் பலதரப்பு மக்கள் பாஜக மீது பெரும் அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
இப்படி பல்வேறு ராஜ தந்திரங்களை கொண்டுள்ள அமிதஷாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதே அரசியல் ஆளுமைகளின் யோசனையாக இருக்கிறது.