HOME » ACTOR VIVEK

Vivek (விவேக்)

  சின்ன கலைவாணர் விவேக் அவர்களை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

  சினிமா துறையில் உள்ளவர்களில் ஒரு சிலர் மட்டுமே நிஜ வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான நடத்தையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த வகையில், நடிகர் விவேக் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். இவர் நடித்த படங்கள் அனைத்துமே தனித்துவமான ஒன்றாக இருப்பது மட்டுமல்லாமல் மக்களிடையே பேசுபொருளாகவும் மாறிவிடும். இது தான் இவரது படங்களுக்கென்று இருக்க கூடிய ஆற்றலும் கூட. இந்த பதிவில் மக்கள் நாயகனான விவேக் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பற்றி பார்க்கலாம்.

  இளமை பருவம்

  நடிகர் விவேக் 1961 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை ஊட்டி கான்வென்ட்டில் முடித்தார். பிறகு தனது கல்லூரி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முடித்து பி.காம் பட்டமும் பெற்றார். தனது சிறு வயதிலேயே இவர் முறைப்படி பரத நாட்டியம் கற்று கொண்டார். இவற்றுடன் ஆர்மோனியம், வயலின், தபேலா போன்ற இசைக்கருவிகளையும் இசைக்கவும் கற்று கொண்டார். இப்படி பல வகையான கலைகளை கற்று தேர்ந்து, சினிமா துறையில் நுழைந்தார்.

  சினிமா பயணம்

  நடிகர் விவேக் அவர்களுக்கு சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றின் மூலம் இயக்குனர் கே. பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்தது. இவரது திறமைகளை நேரில் பார்த்த அவர் தனது படமான மனதில் உறுதி வேண்டும் என்கிற படத்தில் 1987-இல் ஒரு வாய்ப்பை கொடுத்தார். இந்த படத்திற்கு பிறகு விவேக்கிற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க, அவர் குடும்பத்துடன் கோடம்பாக்கத்தில் குடியேறினார். இந்த காலகட்டத்தில் அருட்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமிர்தா நந்தினி, தேஜசுவினி, பிரசன்னா குமார் என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

  நடித்த படங்கள்

  இவர் தனது சினிமா பயணத்தை தொடங்கிய பிறகு, 1990-களின் தொடக்கத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இவர் ஆரம்பத்தில் துணை நடிகராக தன்னை அறிமுகம் செய்து கொண்டாலும், பிறகு இவர் நடித்த எல்லா படங்களும் ஹிட்டாக தொடங்கின. அத்துடன் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்தார். பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராகவும் மாறினார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் கதாநாயகனின் நண்பன் பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

  குறிப்பாக இவரது நகைச்சுவை என்பது வெறும் கேலி செய்வதாக இல்லாமல், மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை கொண்டதாக இருக்கும். இதன் மூலமே பல தரப்பு மக்களின் பாராட்டுக்களை குவிக்க தொடங்கினார். மேலும் இவர் பேசும் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. இவர் நடித்த புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் ஆகிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த முக்கிய திரைப்படங்களாகும்.

  விருதுகள்

  பன்முக தன்மை கொண்ட நடிகரான விவேக் அவர்களது திறமைகளை பாராட்டி இந்திய அரசு 2009 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது. இவற்றுடன் பல்வேறு பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள், சிறந்த நடிகருக்கான விருதுகள் என ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்த படங்களுக்கு கூட நல்ல வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்று இருந்தது.

  சமூக பணிகள்

  தனது வாழ்க்கையை வெறும் நடிகராக மட்டும் சுருக்கி கொள்ளாமல், சமூக செயல்பாட்டாளராகவும் தனது இறுதி காலம் வரை செயல்பட்டு வந்தார். அதன்படி, ‘கிரீன் கலாம்’ என்கிற அமைப்பை 2010 ஆம் ஆண்டில் தொடங்கி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழிகாட்டுதலின் மூலம் இந்தியா முழுவதும் மரங்களை நடும் இத்திட்டத்தை தொடங்கினார். சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னார்வலர்களை இணைத்து இந்த முயற்சியில் வெற்றி கண்டார். கலாம் இறந்த போது சுமார் 3,300,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. 2018 ஆம் ஆண்டு மாநில அரசால் பிளாஸ்டிக் மாசு இல்லாத தமிழ்நாடு பிரச்சாரத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

  இறப்பு

  பலரை சிரிக்க வைத்த நல்ல உள்ளதை கொண்ட நடிகர் விவேக் அவர்கள் 17 ஏப்ரல் 2021 அன்று மாரடைப்பினால் உயிர் இழந்தார். மேலும் இவரது இறப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களால் சின்ன கலைவாணர் என்று அன்பாக அழைக்கப்படும் விவேக் அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருந்தாலும், அவர் செய்த பல நற்காரியங்கள் என்றென்றும் அழியாமல் இருக்கும்.