HOME » ACTOR VISHNU VISHAL

Actor Vishnu Vishal

  தனிப்பட்ட வாழ்க்கை தந்த மன வலியிலிருந்து மீண்டு சொல்லி அடிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

  தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வளர்ந்து வரும் நடிகராக தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவில் கிராமத்து இளைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து பல வித்தியாசமான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர்.

  சினிமாவில் இவரது ஸ்பெஷல் இந்த ரோல் தான் நடிப்பேன் என்று ஒரே வட்டத்திற்குள் அடைபடாமல் முன்னணி நடிகர்களை போலவே கதைக்கு ஏற்ப தனது உடல் மற்றும் நடிப்பு திறனை மாற்றி கொண்டு நடித்து வருவது தான்.

  வெளிப்படையான நடிகர்..

  பல பிரபலங்களை போலவே இவரும் தனது வாழ்க்கையில் இன்ப துன்பங்களை சேர்த்தே அனுபவித்துள்ளார். ஆனால் வெகு சில பிரபலங்களே தங்கள் வாழ்க்கையின் இருந்த பக்கங்களை பற்றி வெளிப்படையாக வாய் திறப்பார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான பிரபலங்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்த சிக்கல்களை பற்றி பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களால் மிகுந்த மனஅழுத்தத்தில் சிக்கி தவித்ததையும். அதிலிருந்து எப்படி மீண்டு வெளியே வந்தார் என்பதையும் சோஷியல் மீடியாவில் வெளிப்படையாக ஷேர் செய்தவர் நடிகர் விஷ்ணு விஷால்.

  விஷ்ணு விஷாலின் ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் குடும்பம்…

  நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 17-07-1984 அன்று தமிழக காவல்துறை உயர் அதிகாரியான ரமேஷ் குடாவ்லாவுக்கு வேலூரில் பிறந்தவர் ஆவார். விஷ்ணு விஷாலின் உண்மையான பெயர் விஷால் குடாவ்லா. திரைப்பட துறைக்கு வரும் போது தனது பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றி கொண்டார். இவர் திருச்சியில் உள்ள கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் (Campion Anglo-Indian Higher Secondary School) பள்ளிப் படிப்பையும், SRM பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ படித்தார். தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு இவர் கிரிக்கெட் வீரராக மாறினார் மற்றும் பல TNCA லீக் ஆட்டங்களில் விளையாடினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

  நடிப்பின் மீது ஆர்வம் எப்படி.?

  காலில் அடிபட்டதால் ஏற்பட்ட கடுமையான காயத்தின் போது சில மாதங்கள் படுத்த படுக்கையாக ஓய்வெடுக்க நேரிட்டது. அப்போது பொழுதை கழிக்க ஏராளமான திரைப்படங்களை பார்க்க துவங்கினார். இதனை தொடர்ந்து நடிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

  உறவினரின் உதவியால் சினிமாவில் என்ட்ரி..

  நடிகனாக வேண்டும் என்ற வேட்கை நாளுக்கு நாள் அதிகமாகவே அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார். இவரது தந்தையின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழ் சினிமா துறையில் இருக்கவே அவரை அணுகி தனது ஆசையை தெரிவிக்கவே, அவர் திரையுலகில் நுழைய உதவினார். ஏற்கனவே ஒரு விஷால் இண்டஸ்ட்ரியில் இருந்ததால், முதலில் விஷ்ணு என்ற பெயரில் திரை துறைக்குள் நுழைந்து, பின்னர் தன் பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றி கொண்டார்.

  வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகம்:

  டைரக்டர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமாகிய இவர் கபடி வீரர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். முதல் படத்திலேயே கபடி வீரராக நடிக்க பல மாதங்கள் வெயிலில் நின்று தனது ஸ்கின் டோனை மாற்றி, கபடி பயிற்சியும் பெற்றார். இவரது கடின உழைப்பு வீண் போகவில்லை. வணிக ரீதியாக படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து முதல் படத்திலேயே பிரபலமானார். தொடர்ந்து இவர் நடித்த பலே பாண்டியா மற்றும் துரோகி உள்ளிட்ட படங்கள் சரியாக ஓடவில்லை. என்றாலும் அடுத்த படமான குள்ளநரி கூட்டத்தில் விட்டதை பிடித்து மீண்டும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவனிக்க வைத்தார்.

  தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இடம் பொருள் ஏவல், இன்று நேற்று நாளை என சூப்பர்ஹிட் படங்களில் நடித்து தனெக்கென ரசிகர்கள் வட்டத்தை பெற்றார். அடுத்து நடித்த மாவீரன் கிட்டு, கதாநாயகன் உள்ளிட்ட படங்கள் சரியாக போகாத நிலையில் மிரட்டலான நடிப்பால் ராட்சசன் மூலம் கம்பேக் கொடுத்தார் விஷ்ணு விஷால். சிலுக்குவார்பட்டி சிங்கம், காடன் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான FIR திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தான் நடித்த சில படங்களுக்கே தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

  தனிப்பட்ட வாழ்க்கை:

  ரஜினி என்ற தனது கல்லூரி தோழியை காதலித்து கடந்த 2010-ல் திருமணம் செய்து கொண்டார் விஷ்ணு விஷால். இத்தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2018-ல் விவாகரத்து செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட மனஅழுத்தம் குடிப்பழக்கத்திற்கு தன்னை அடிமையாக்கி விட்டதாகவும், தூக்கமின்றி பல இரவுகள் கழிந்ததாகவும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கொண்டார். அதன் பிறகு உடலை மெருகேற்றுவதில் கவனம் செலுத்த துவங்கியதால் சோகத்திலிருத்து மீண்டதாக குறிப்பிட்டார். இந்த போஸ்டிற்கு “வாரணமாயிரம் வழியைத் தேர்ந்தெடுத்தேன்” என்றே கேப்ஷனும் கொடுத்திருந்தார்.

  இரண்டாம் திருமணம்:

  இந்திய பேட்மின்ட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோஷியல் மீடியாவில் செய்தி பரவியது. இந்நிலையில் திடீரென்று ஜுவாலாவின் பிறந்தநாளன்று மோதிரம் அணிவித்து நிச்சயம் முடிந்துவிட்டது என்று இருவருமே தத்தம் சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தனர். இதனை தொடர்ந்து இவர்களின் திருமணம் ஏப்ரல் 22, 2021 அன்று ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருமண வாழ்வில் சந்தோஷமாக இருப்பதாக கூறியுள்ள விஷ்ணு விஷால், தொடர்ந்து நல்ல கதையம்சங்கள் கொண்ட படத்தை தேர்வு செய்து வித்தியாசமான ரோல்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.