Vikram (விக்ரம்)

  சினிமா மீது தீராத காதலுடன் ஜெயித்த சியான் விக்ரம்… சேது டூ விக்ரம் வரை ஒரு அலசல்!

  குறிப்பிட்ட தொழில் மீது தீராத காதலும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி வாகை சூடலாம் என்பதை எடுத்துக்காட்டும் நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் பற்றிய தொகுப்பு இதோ…

  திரைப்பயணம்:

  திரையுலகில் எப்படியாவது கால் பதித்தாக வேண்டும் என தீராத தாகத்துடன் அலைந்து வந்த விக்ரமை, சின்னத்திரை இருகரம் ஏந்தி வரவேற்றது. 1988 ஆம் கைலாசம் பாலசந்தர் இயக்கிய கலாட்டா குடும்பம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அதன் மூலமாக 1990 ஆம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘மீரா’, ‘தந்துவிட்டேன் என்னை’, ‘காதல் கீதம்’, ‘புதிய மன்னர்கள்’, ‘உல்லாசம்’, ‘ஹவுஸ்ஃபுல்’போன்ற படங்களில் நடித்தாலும், விக்ரம் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படங்கள் கைகொடுக்கவில்லை. இருப்பினும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் கிடைக்கும் ரோலில் எல்லாம் நடித்து வந்தார்.

  கோலிவுட்டில் ஹீரோவாக நடித்த பின்னரும், பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் டப்பிங் கொடுக்கும் வேலையை செய்து வந்தார். ‘அமராவதி’ படத்தில் அஜித்திற்கும், ‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவிற்கும், ‘விஐபி’, ‘காதல் தேசம்’ ஆகிய படங்களில் அப்பாஸுக்கும் விக்ரம் டப்பிங் கொடுத்துள்ளார். திரையுலகில் சாதிக்காமல் விடக்கூடாது என்ற வேட்கையுடன் போராடி வந்த விக்ரமிற்கு 1999ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் அடாவடியான கல்லூரி மாணவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என இரண்டு வெவ்வேறு பரிமாணங்களில் நடித்து அசத்தினார்.

  கல்லூரி மாணவனாக ஹேண்ட்சம் தோற்றத்தில் வரும் விக்ரம், பின்பாதியில் மன நலம் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்து உடல் எடையை குறைத்து, மொட்டை தலையுடன் நடித்தார். இந்த படம் மூலமாக தான் விக்ரம் தனது ரசிகர்களால் ‘சியான் விக்ரம்’ என செல்லமாக அழைக்கப்பட்டார்.

  அதன் பின்னர் 2001ம் ஆண்டு ‘தில்’, ‘காசி’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, 2002ம் ஆண்டு ‘ஜெமினி’, ‘சாமுராய்’, ‘கிங்’, 2003ம் ஆண்டு ‘சாமி’, ‘பிதாமகன்’, ‘தூள்’, ‘காதல் சடுகுடு’, ‘அருள்’ (2004), 2005ல் ‘அந்தியன்’, ‘மஜா’, ‘பீமா’ (2008), ‘கந்தசாமி’ (2009), ‘ராவணன்’ (2010), ‘தெய்வத்திருமகள்’ (2011), ‘ஐ’ (2015), 2016ல் ‘இருமுகன்’, ‘ஸ்கெட்ச்’, ‘சாமி 2’, ‘கடாரம் கொண்டான்’ (2019), ‘மகான்’ ( 2022) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

  தனது படங்கள் மூலமாக பல வெற்றி, தோல்விகளை பார்த்திருந்தாலும் சியான் விக்ரம் தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை எப்போதுமே நிரூபித்து வருகிறார். தனது படங்களுக்காக உடல் எடை, தோற்றம், தலைமுடி, தாடி என அனைத்து விஷயத்தையும் மாற்றிக்கொள்வதை சியான் விக்ரம் வழக்கமாக கொண்டுள்ளார். தெய்வத்திருமகள், அந்தியன், ஐ ஆகிய படங்களுக்காக உடல் எடையை குறைத்தும், சில படங்களுக்காக மொட்டையடித்தும், பிதாமகன் படத்திற்காக தலைமுடியின் நிறத்தை மாற்றியும் நடித்துள்ளார்.

  சியான் விக்ரம், நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் ஹிட்டடித்தவர். ‘ஓ போடு’, “எக்ஸ்க்யூஸ் மி”, “இதெல்லாம் டூப்பு”, “மேம்போ மாமியா”, ” மியாவ் மியாவ்”, “கதை சொல்ல போரேன்”, “ப ப பாப்பா” உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

  குடும்ப வாழ்க்கை:

  விக்ரம், ஜான் விக்டர் – ராஜேஸ்வரி தம்பதிக்கு 17ம் தேதி ஏப்ரல் 1965 சென்னையில் பிறந்தார். விக்ரமின் இயற்பெயர் கென்னடி என்பதாகும், இதனால் தான் திரையுலகில் சக நடிகர்கள், நண்பர்கள் இவரை செல்லமாக ‘கென்னி’ என அழைக்கின்றனர். அப்பா ஜான் விக்டர் முன்னாள் ராணுவ வீரர், அம்மா ராஜேஸ்வரி துணை ஆட்சியராக பணியாற்றியவர். விக்ரமுக்கு அனிதா என்கிற தங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர்.

  ஏற்காட்டில் உள்ள மாண்ட்போர்ட் ஸ்கூலில் பள்ளிப்படிப்பை முடித்த விக்ரம், சென்னை லயோலா கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். 1992ம் ஆண்டு சைலா பாலகிருஷ்ணன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட விக்ரமிற்கு துருவ் விக்ரம் என்ற ஒரு மகனும் அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். மகள் அக்‌ஷிதா மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து மகள் வழி பேரனான மனுரஞ்சித்தை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2020ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது, இதன் மூலம் விக்ரம் தாத்தாவாக புரோமோஷன் ஆனார்.

  மகன் துருவ் விக்ரம் தற்போது தமிழ் திரையுலகில் இளம் ஹீரோவாக நடித்து வருகிறார். துருவ் நடிப்பில் ‘ஆதித்யா வர்மா’, ‘மகான்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  விக்ரமின் தந்தையும் கில்லி உள்ளிட்ட சில படங்களில் அப்பா வேடங்களில் நடித்துள்ளார். திரையுலகில் வினோத் ராஜ் என அழைக்கப்படும் விக்ரமின் தந்தை தனது 80 வயதில் மூப்பு காரணமாக 2018ம் ஆண்டு காலமானார்.

  விக்ரம் வென்ற விருதுகள்:

  1999ம் ஆண்டு சேது படத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருது வென்றுள்ளார். 2000ம் ஆண்டு ‘சேது’, 2002ம் ஆண்டு ‘காசி’, 2004ம் ஆண்டு ‘பிதாமகன்’, 2006ம் ஆண்டு ‘அந்நியன்’, 2016ம் ஆண்டு ‘ராவணன்’, 2016ம் ஆண்டு ’ஐ’ ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றுள்ளார்.

  2003ம் ஆண்டு பிதாமகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.