HOME » ACTOR VIJAY

Actor Vijay

  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாக்ஸ் ஆஃபிசை அதிர வைத்து வரும் தளபதி!

  பாலிவுட் திரையுலகம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்து வெளியிடுகிறது. அதே நேரம் தமிழ் திரையுலகமான கோலிவுட் இன்டஸ்ட்ரி ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிடுகிறது. தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் படங்களை உலகெங்கிலும் உள்ள மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். எனவே கோலிவுட்டில் அறிமுகமாகும் ஒரு நடிகர், வளரும் நடிகர் மற்றும் முன்னணி நடிகர் என் படிப்படியாக உயர்ந்து டாப்பில் இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

  அதை சாதித்து காட்டியவர தான் இளைய தளபதியாக இருந்து தற்போது தளபதியாக கோடிக்கணக்கான மக்கள் மனதில் பதிந்துள்ள நடிகர் விஜய். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்து நிற்கும் தளபதி விஜய் பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

  பிறப்பு..

  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் – ஷோபா தம்பதியரின் மகனாக கடந்த 1974-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். விஜயின் தாய் ஷோபா இந்து குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை சந்திரசேகர் தமிழ் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஜய்.

  விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார், ஆனால் எதிர்பாராவிதமாக 2 வயதில் அவர் இறந்து விட்டார். தங்கையின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி காரணமாக குறும்புத்தனம் மற்றும் அதிகம் பேசுபவராக இருந்த விஜயின் கேரக்டர் சீரியஸாகவும், அமைதியாகவும் மாறி விட்டதாக தாயார் ஷோபா பல சந்தர்ப்பங்களில் கூறி இருக்கிறார்.

  குழந்தை நடிகராக…

  சிறு வயதில் இருந்தே விஜய்க்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. விஜய்யின் தந்தை சந்திரசேகர் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் என்பதால் 10 வயதாக இருக்கும் போதே வெற்றி என்ற படத்தில் குழந்தை நடிகராக சிறு வேடத்தில் நடித்தார் அல்லவா. விஜயின் முதல் படம் இது தான், மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக ரூ.500 சம்பளமாக அவருக்கு கொடுக்கப்பட்டது. விஜய் முன்னணி நடிகராக படங்களில் பணியாற்றுவதற்கு முன்பு 5 படங்களுக்கு மேல் குழந்தை நடிகராக பணியாற்றினார். வெற்றி படத்தில் குழந்தை நடிகராக நடித்த பிறகு, 1984-ம் ஆண்டு வெளியான குடும்பம், 1985-ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன், 1986-ஆம் ஆண்டு வெளியான வசந்த ராகம், 1987-ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு விளையாட்டு மற்றும் 1988-ஆம் ஆண்டு வெளியான இது எங்கள் நீதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜய்.

  படிப்பா.! நடிப்பா.!

  எனினும் நடிப்பிற்கிடையிலும் கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட விஜய் தனது ஆரம்ப படிப்பை கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலை பள்ளியில் சேர்ந்தார். கல்லூரி வாழ்க்கையை லயோலா காலேஜில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்ந்ததன் மூலம் துவக்கினார். ஆனால் படிப்பை விட நடிப்பில் அதிகம் ஆர்வம் இருந்த காரணத்தால் கல்லூரி படிப்பை விட்டு பாதியில் வெளியேறினார்.

  ஹீரோவாக..

  1984 முதல் 1988 வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய், முதல் முதலாக 1992-ஆம் ஆண்டு தனது தந்தையின் இயக்கத்திலேயே வெளியான “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற முடியாமல் தோல்வியடைந்தது. நாளைய தீர்ப்பு படத்திற்குப் பிறகு அவரது இரண்டாவது திரைப்படம் செந்தூரபாண்டிபடம் 1993-ல் வந்தது. இதில் விஜயகாந்தும் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அவரது முந்தைய படத்துடன் ஒப்பிடும் போது நன்றாக இருந்தது. கிராமபுரா ரசிகர்களுக்கு இந்த படம் மூலம் விஜய் பரிச்சயமானார். பின் 1994-ல் வெளியான ரசிகன் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் அவரை மிகவும் பிரபலமடைய செய்தது.

  திருமணம் மற்றும் குழந்தைகள்..

  பூவே உனக்காக திரைப்படத்தை பார்த்து தனது நடிப்பில் மயங்கிய இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை1999-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய். இங்கிலாந்தில் சந்தித்து கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி, திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பத்தியருக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா ஷாஷா என்று 2 பிள்ளைகள் உள்ளனர். இருவருமே விஜய்யின் படத்தில் குழந்தை நடிகர்களாக நடித்துள்ளனர். சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாட்டிலும், மகள் திவ்யா தெறி கேரக்டரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  இன்று வரை பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வரும் விஜய்..

  1990-களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவில் ஒரு காதல் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தி கொண்ட விஜய், ரசிகன் படத்திற்குப் பிறகு தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். 1996-ல் விஜயின் நடிப்பில் வெளியான பூவே உனக்காக முன்பை விட அவரை பிரபலமான ஹீரோவாக மாற்றியது. பூவே உனக்காக படத்தை தொடர்ந்து காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், திருமலை, கில்லி, போக்கிரி, நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என பல படங்கள் விஜய்யின் கேரியரில் இன்று வரை சிறந்த படங்களாக இருக்கின்றன. இன்று வரை நடிப்பில் மட்டுமல்ல டான்ஸ் ஆடுவதிலும் தான் சிறந்தவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வரும் விஜய் மேலும் பல பிளாக் பஸ்டர்களை கொடுப்பார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.