Vijay Sethupathi (விஜய் சேதுபதி)

    கூத்துப்பட்டறை டூ மக்கள் செல்வன் வரை; விஜய் சேதுபதி கடந்து வந்த பாதை!

    கூத்துப்பட்டறையில் கணக்காளராக வாழ்க்கையை தொடங்கிய விஜய் சேதுபதி, பேக்ரவுண்டில் நிற்க கூடிய துணை நடிகர் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து இன்று மக்கள் செல்வனாக ரசிகர்கள் மனதில் உயர்ந்தது எப்படி என பார்க்கலாம்…

    திரைப்பயணம் :

    கோலிவுட்டை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். முதல் ரஜினிகாந்த் வரை உச்ச நட்சத்திரங்கள் பலரும் ஏதாவது ஒரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த வரலாறு உண்டு. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் ‘கில்லி’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘புதுப்பேட்டை’, ‘லீ’ போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பர்கள் பட்டாளத்தில் ஒருவராக எங்கோ ஒரு மூலையில் நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்தார். ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் நடிக்கும் போது இயக்குநர் சுசீந்திரனிடம் கிடைத்த அறிமுகம், சீனு ராமசாமி படத்திற்கான சிபாரிசாக மாறியது. 2010ம் ஆண்டு எந்த விதமான பெரிய விளம்பரமும், வியாபார தந்திரமும் இல்லாமல் எளிமையாக வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    இந்த படத்தில் நடித்ததற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும், பாடல்கள் எழுதியதற்காக வைரமுத்துவிற்கும் தேசிய விருதுகள் கிடைத்தது. சினிமா வாய்ப்பிற்காக அழைத்த காலத்தில் சின்னத்திரை சீரியல்கள், குறும்படங்கள் என கிடைத்தவற்றில் எல்லாம் தனது திறமையை வெளிக்காட்டி வந்த விஜய் சேதுபதிக்கும், குறும்பட இயக்குநராக இருந்த கார்த்திக் சுப்புராஜுக்கும் இடையிலான அறிமுகம் தான் ஒரு மகாநடிகனை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பீட்சா’, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என 2012ம் ஆண்டு அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகி, சூப்பர் டூப்பர் ஹிட்டானது. புதுமுக இயக்குநர்களால் அன்று விஜய் சேதுபதிக்கு திறக்கப்பட்ட கோலிவுட் கதவு, இன்று பாலிவுட் வரையிலான ரத்த கம்பள வரவேற்பாக மாறியுள்ளது. அடுத்தடுத்து 3 படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் துணிச்சலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் 2012ம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது.

    அடுத்ததாக 2013ம் ஆண்டு முற்றிலும் வித்தியாசமான கெட்டப் மற்றும் கதைக்களம் கொண்ட‘சூது கவ்வும்’ படம் சூப்பர் ஹிட்டானது. வளர்ந்து வரும் கதாநாயகர்கள் யாருமே ஏற்கத் துணியாத குடிகாரன் கதாபாத்திரத்தில் ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா’ படத்தில் நடித்தார். முழு நீள நகைச்சுவை படமான இதில் ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்ற ஒற்றை வசனம் மூலமாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். 2014ம் ஆண்டு ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘வன்மம்’, ஆகிய படங்களில் நடித்த விஜய் சேதுபதி, ‘ஜிகர்தண்டா’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘திருடன் போலீஸ்’ ஆகிய படங்களில் நட்புக்காக சிறப்பு தோற்றத்திலும் நடித்து கொடுத்தார்.

    2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளும் விஜய் சேதுபதிக்கான ஆண்டாக அமைந்தது. 2015ம் ஆண்டு ‘புறம்போக்கு எனும் பொதுவுடமை’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘நானும் ரெளடி தான்’ ஆகிய படங்கள் வெளியானது. 2016ம் ஆண்டு ‘சேதுபதி’ படத்தில் மிடுக்கான காவல்துறை அதிகாரியாகவும், ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் ரவுடியாகவும் நடித்து அசத்தியவர், அடுத்தடுத்து ‘இறைவி’ ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘றெக்க’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதிக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுத்தந்தது. ‘கவண்’, ‘கருப்பன்’, ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் ஸ்டைலிஷ் மற்றும் ஆக்‌ஷன் கதாபாத்திங்களில் நடித்த விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.

    K.இராமச்சந்திரன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு நடித்த வெளிவந்த “96” திரைப்படம் அந்த ஆண்டிற்கான பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அதே ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’, ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களும் சூப்பர் ஹிட்டடிக்க விஜய் சேதுபதியின் மார்க்கெட் மதிப்பு கூடியது. இதனால் 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக நடித்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக முத்திரை பதித்திருந்த விஜய் சேதுபதி, பலரும் நடிகர்களும் நடிக்க தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நடித்து அசத்தினார்.

    ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த சில்பா கதாபாத்திரம் அவரது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லாக மாறியது. அதன் பின்னர் ‘க/பெ ரணசிங்கம்’, ‘கடைசி விவசாயி‘, ‘மாமனிதன்‘, ‘லாபம்‘, ஆகிய படங்களில் முன்னணி நடிகர் அந்தஸ்தை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு கதையின் நாயகனாக தோன்றி அசத்தினார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து தளபதி விஜயுடன் ‘மாஸ்டர்’, உலக நாயகன் கமல் ஹாசன் உடன் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

    ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் துணை கதாபாத்திரம், செகன்ட் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பல கதாபாத்திரங்களில் நடித்து வருவது தான் விஜய் சேதுபதி என்ற மக்கள் கலைஞனை இன்று வரை வெற்றி வாகை சூட வைத்துள்ளது. தற்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒட்டுமொத்த திரையுலகின் அடையாளமாக மாறி வருகிறார்.

    நடிகராக மட்டுமின்றி ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்கள் மூலமாக பாடகராகவும், ‘ஜூங்கா’, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ‘ஆரஞ்சு மிட்டாய்’ படங்கள் மூலமாக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ‘நம்ம ஊரு ஹீரோ’, ‘மாஸ்டர் செஃப் தமிழ்’ என சன் தொலைக்காட்சியின் பேமஸ் ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

    விருதுகள்:

    2017ம் ஆண்டு ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது.

    2018ம் ஆண்டு சூப்பர் டூப்பர் ஹிட்டான “96” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது பெற்றார்.

    2019ல் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சில்பா என்ற திருநங்கையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

    2022ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு இந்தோ – ஃபிரெஞ்சு திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    குடும்ப வாழ்க்கை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த விஜய் சேதுபதி பள்ளிப்படிப்பை விருதுநகரிலும் கல்லூரி படிப்பை சென்னையிலும் முடித்துள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். வேலை பிடிக்காததால் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிட்டார். அதன் பின்னர் கூத்துப்பட்டை ஒன்றில் கணக்காளராக வேலை பார்த்து விஜய் சேதுபதி, சீரியல்கள், துணை கதாபாத்திரங்கள் என படிப்படியாக முன்னேறி இன்று திரையுலகின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார்.

    விஜய் சேதுபதிக்கும், கேரளாவைச் சேர்ந்த ஜெஸ்ஸி என்பவருக்கும் இடையே மலர்ந்த காதல் 2003ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும் ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சூரியா ‘நானும் ரவுடி தான்’ படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாகவும், ‘ஜூங்கா’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா ‘முகிழ்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

    No Content is Available