வைகை புயல்….மீம்ஸ், நகைச்சுவை வசனங்களின் மன்னன் நடிகர் வடிவேலுவின் சுவாரஸ்சிய திரைப்பயணம்!
“இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிட்டு இருக்கு, ஐயோ இப்பவே கண்ண கட்டுதே“ என பல நகைச்சுவை வசனங்களுக்குச் சொந்தக்காரரான வைகை புயல் வடிவேலு அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகராக இன்றைக்கும் வலம் வருகிறார்.
ஒல்லியான தோற்றம்.. எடுப்பான பல்.. யாருடா? இந்த சின்னப்பையன் என அனைவரையும் கேள்வி எழுப்ப வைத்த நடிகர் தான் இன்றைக்கு உலகம் முழுவதும் தன்னுடைய நகைச்சுவை நடிப்புத்திறமையால் உயர்ந்துள்ளார் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம் “ போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் மூலம் ரசிகர்களை திரும்ப பார்க்க வைத்தவர் தான் மதுரை மண்ணிற்கு சொந்தக்காரரான வைகை புயல் வடிவேலு. இவரின் ஆரம்ப கால திரைப்பயணத்தில் என்னென்ன நடந்தது? எப்படியெல்லாம் கடந்து வந்தார் என்பது பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள் இதோ இங்கே…
ஆரம்ப கால வாழ்க்கை:
மதுரையில் நடராச மற்றும் வைத்தீஸ்வரி தம்பதியினருக்கு மகனாக கடந்த 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி பிறந்தார் வடிவேலு. படிப்பில் ஆர்வம் இல்லாத இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிக்கும் திறன் இருந்துள்ளது. தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து தான் மக்களை ரசிக்க வைத்துள்ளார். இப்படி தனக்கு பிடித்த நாடகங்களை நடித்துவந்த போது தான், எதிர்பாராதவிதமாக தந்தை நடராசர் இறந்துவிடுகிறார். என்ன செய்வது என தவித்த நிலையில் கடவுள் போல் வந்து வடிவேலுக்கு உதவ முன் வந்தவர் தான் நடிகர் ராஜ்கிரண். வடிவேலுவின் குடும்ப சூழலைப் பார்த்த ராஜ்கிரண், அவருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் பணியாளராக சேர்ந்துக்கொண்டார்
இப்படியே காலம் சென்றுக்கொண்டிருந்த போது தான் இவரின் நடிப்புத்திறனை ஏற்கனவே அறிந்த ராஜ்கிரண், கடந்த 1991 ஆம் ஆண்டு அவர் தயாரித்து இயக்கிய “ என் ராசாவின் மனசிலே“ என்ற திரைப்படத்தில் முதன் முறையாக நகைச்சுவை நடிகராக களம் இறங்கினார். இப்படத்தில் போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு என்ற பாடலைப்பாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்ததால் தொடக்க புள்ளியிலேயே ரசிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்ற பெருமைக்குரியவரானார் வடிவேலு. பின்னர் விஜயகாந்தின் சின்ன கவுண்டர் படம் முழுவதும் அவருக்கு குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்ததால் மிகவும் பிரபலமானார் வடிவேலு.. யாருப்பா இது என மற்ற இயக்குனர்கள் கேட்கும் அளவிற்கு பிரபலமான வடிவேலு, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தன்னுடைய நடிப்பு திறமையை உலகறிய செய்தார்.
இப்படத்தை தொடர்ந்து தேவர் மகன், வரவு எட்டணா செலவு பத்தணா, சிங்கார வேலன், காத்திருக்க நேரமில்லை, கிழக்கு சீமையிலே போன்ற படங்களில் எதார்த்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கவுண்டமனி, செந்திலுக்கு இணையான நகைச்சுவை நடிகராக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவரை உச்சத்தில் கொண்டு சென்றது வெற்றிக்கொடி. துபாய் என்றாலே வடிவேலுவை நியாபகப்படுத்தும் அளவிற்கு இப்படத்தில் நகைச்சுவையை வெளுத்து வாங்கியிருப்பார். தொடர்ந்து சித்தப்பு நேசமணியாக ப்ரண்டஸ் திரைப்படத்திலும் கைப்புள்ளயாக வின்னர் திரைப்படத்திலும் அசத்தியிருப்பார். குறிப்பாக இது புருசன் கணக்கு என நகைச்சுவை கோவை சரளாவுடன் இணைத்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் தான்.
இப்படி தன்னுடைய நகைச்சுவையால் உயர்ந்த வடிவேலுவின் காமெடிக்கு என தனி டிராக்கை அமைத்துக்கொடுத்தார்கள் இயக்குனர்கள். அந்தளவிற்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பெருமைக்குரியவராக விளங்கினார். நகைச்சுவை மன்னனாக வலம் வந்த இவர் சங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஹீரோவாக அறிமுகமானர். திரையுலகில் இவர் அறிமுகமான பிறகு இதுவரை தமிழில் வெளியான படங்களில் 80 சதவீதம் இவர் நடித்திருக்கிறார்.
பாடகராக வைகை புயல் வடிவேலு:
‘எட்டணா இருந்தா’ சிரிப்பு வருது சிரிப்பு வருது, ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்க.. வாடி பொட்ட புள்ள வெளியே என்பது போன்ற பல பாடல்களையும் பாடியுள்ளார்.
வடிவேலு பெற்ற விருதுகள்:
காலம் மாறிப் போச்சு, வெற்றிக்கொடி கட்டு, தவசி, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, காத்தவராயன் போன்ற படங்களில் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கியது. மேலும் சந்திரமுகி, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படங்களுக்காக பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது
அரசியல் வாழ்க்கை:
சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் கவனம் செலுத்திய இவர் கடந்த 2011 ஆம் நடந்த தமிழக சட்டமன்றத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். இப்படி சினமாவை விட்டு திரையுலகிற்கு வந்த இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசியது அந்த காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சில ஆண்டுகள் பொதுவாழ்விற்கு வராமல் ஒதுங்கியிருந்தார்.
சினிமாவில் மீண்டும் என்ட்ரி:
அரசியல் பிரச்சனை, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகளால் சினிமா மற்றும் பொதுவாழ்க்கையில் என்டரி ஆகாமல் இருந்த நிலையில் தான் மீண்டும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துவருகிறார்.
மீம்ஸ் மற்றும் நகைச்சுவை வசனத்திற்கு சொந்தக்காரர்:
பல பிரச்சனைகளுக்கு பிறகு சினிமா வாழ்க்கையில் தலைக்காட்டாமல் இருந்தாலும் இவர் பேசியுள்ள வசனங்கள் மக்களிடம் மீம்ஸ்களாக வலம் வந்தது. இதோடு நம்முடைய வாழ்வில் என்னடா இப்படி ஆயிடுச்சே என்றாலும் இன்னுமா நம்மள இந்த ஊரு நம்பிட்டு இருக்குன்னு எதார்த்த பேசினாலும் நகைச்சுவையாக தான் மக்கள் நினைப்பார்கள். அந்தளவிற்கு நம்முடைய வாழ்க்கைக்கு தொடர்புடைய பல நகைச்சுவை வசனங்களைப் பேசியிருப்பார். குறிப்பாக ஆணிய புடுங்க வேண்டாம.. பில்டிங் ஸ்ட்ராங்க்கு பேஷ் மட்டம் வீக்கு, எதையுமே பிளாண் பண்ணாம பண்ணக்கூடாது, சிறிய புறாவுக்கு அக்கப்போரா…என வைகை புயல் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்…
என்னதான் பல காமெடி நடிகர்கள் வலம் வந்திருந்தாலும் வடிவேலுவின் நகைச்சுவை அடித்துக்கொள்வதற்கு யாருமே இல்லை என்பது தான் நிதர்சன உண்மை.