HOME » ACTOR SATHYARAJ

Actor Sathyaraj

  எம்.ஜி.ஆர். ரசிகன் டூ கட்டப்பா வரை; லொள்ளு மன்னன் சத்யராஜ் கடந்து வந்த பாதை!

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சிம்பு வரை திரையுலகில் அடியெடுத்து வைக்கும் அனைத்து ஹீரோக்களும் அவர்களது காலத்தில் நடித்து வந்த முன்னணி நடிகர் இன்ஸ்பிரேஷனாக இருப்பார்கள். அப்படி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது தென்னிந்தியா சினிமாவின் கட்டப்பாவாக கலக்கி வரும் நடிகர் சத்யராஜ் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு இதோ…

  திரைப்பயணம்:

  வில்லனாக அறிமுகமான எல்லாருக்கும் முன்னணி ஹீரோவாக மாறும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடாது. ஆனால் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கூட அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. ‘சட்டம் என் கையில்’, ‘ஏணிப்படிகள்’ , ‘மூன்று முகம்’ , ‘பாயும் புலி’ என பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த சத்யராஜ், ‘நூறாவது நாள்’ படத்தில் நடிப்பதற்காக அதன் இயக்குநர் மணிவண்ணனிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார்.

  அப்போது சத்யராஜ் கொடுத்த சில புகைப்படங்களை பார்த்த மணிவண்ணன் இந்த வில்லன் கேரக்டர் அவருக்கு செட் ஆகாது என மறுத்துவிட்டாராம். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் எப்படியாவது நடித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்த சத்யராஜ், தலைமுடியை மொட்டையடித்து, முகத்தில் சிவப்பு சாயத்தை தெளித்த கொண்டு மணிவண்ணன் முன்னால் போய் நின்றுள்ளார். ஒரு நிமிடம் சத்யராஜை பார்த்து அரண்டு போன மணிவண்ணன் நூறாவது நாள் படத்தில் அவரையே வில்லனாக நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார்.

  அதுவரை வில்லனாக கூட பெரிதாக திரையில் தெரியாமல் இருந்த சத்யராஜுக்கு நூறாவது நாள் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் 1985, 86 ஆகிய ஆண்டுகளில் 5 அல்லது 6 படங்களில் வில்லனாக சத்யராஜ் நடித்திருக்கும் அளவுக்கு அவருக்கு மவுசு கூடியது. ‘எனக்குள் ஒருவன்’ ‘நான் மகான் அல்ல’, ‘சாவி’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘திறமை’ , ‘முதல் மரியாதை’, ‘பகல் நிலவு’, ‘காக்கிச்சட்டை’, ‘பிள்ளை நிலா’, ‘விக்ரம்’, ‘தர்மம்’, ‘இரவு பூக்கள்’ , ‘மந்திரப்புன்னகை’, ‘மிஸ்டர் பாரத்’, ‘முதல் வசந்தம்’, ‘ரசிகன் ஒரு ரசிகை’, ‘விடிஞ்சா கல்யாணம்’ என அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.

  தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யராஜுக்கு 1986ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கடலோர கவிதைகள்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து ஹீரோவாக மாறிய சத்யராஜ், ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘மக்கள் என் பக்கம்’, ‘வேதம் புதிது’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘பூவிழி வாசலிலே’, ‘அண்ணாநகர் முதல் தெரு’, ‘ஜீவா’, ‘புதிய வானம்’, ‘சின்னப்பதாஸ்’, ‘தாய் நாடு’, ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’, ‘உலகம் பிறந்தது எனக்காக’, ‘நடிகன்’ , ‘புது மனிதன்’, ‘பிரம்மா’, ‘திருமதி பழனிச்சாமி’, ‘தெற்குத் தெரு மச்சான்’, ‘பங்காளி’, உடன் பிறப்பு’, ‘ரிக்க்ஷா மாமா’, ‘ஏர்போர்ட்’ , ‘கட்டளை’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘அமைதிப்படை’, ‘வில்லாதி வில்லன்’ , ‘மாமன் மகள்’, ‘சேனாதிபதி’, ‘பகைவன்’, ‘கல்யாண கலாட்டா (1998), ‘மலபார் போலீஸ்’, ‘புரட்சிக்காரன்’, ‘அசத்தல்’, ‘மாறன்’, ‘மிலிட்டரி’, ‘ஜோர்’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘வெற்றிவேல் சக்திவேல்’ (2௦௦5), கோவை பிரதர்ஸ்’, ‘பெரியார், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘நண்பன்’, ‘நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ’ போன்ற திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெற்றிப் பெற்றவையாக விளங்குகிறது. 1986ம் ஆண்டு தொடங்கி 2012ம் ஆண்டு வரை கதையின் நாயகனாக பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

  தற்போது விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, உதயநிதி, சிபிராஜ் உள்ளிட்ட இளம் தலைமுறை நடிகர்களுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குணச்சித்திர நடிகராக ‘மெர்சல்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘எம்.ஜி.ஆர்.மகன்’, ‘சிகரம் தொடு’ ‘ராஜா ராணி’, ‘பூஜை’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள சத்யராஜுக்கு 2015 மற்றும் 2017ம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’ முதல் மற்றும் இரண்டாம் பாகம் வாழ்நாள் திரைப்படமாக அமைந்தது. தென்னிந்தியாவையே வசூலில் மிரள வைத்த இந்த திரைப்படத்தில் சத்யராஜ் ‘கட்டப்பா’ என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

  ‘வில்லாதி வில்லன்’ திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ள சத்யரஜ், மகன் சிபி ராஜுக்காக ‘லீ’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

  விருதுகள்:

  தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி விருது’ வென்றுள்ளார். 1991 ஆண்டு தமிழக அரசு சத்யராஜை எம்.ஜி.ஆர். விருது வழங்கி 2007ம் ஆண்டு தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதினைப்’ பெற்றுத்தந்தது. 2012ம் ஆண்டு நண்பன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ‘விஜய் விருது’ பெற்றுள்ளார்.

  எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்:

  சத்யராஜ் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த செய்தி. சத்யராஜ் தனது தங்கைகள் நந்தினி, அகிலா இருவருக்கும் கோவையில் திருமணம் நடத்திவைத்தார். இதற்கான அழைப்பிதழை வைப்பதற்காக எம்.ஜி.ஆரை சந்திக்க ராமவரம் தோட்டம் சென்றார். அப்போது அங்கு எம்.ஜி.ஆர். இல்லை கோட்டைக்குச் சென்றிருந்தார். ஜானகி அம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம் திருமண அழைப்பிதழைக் கொடுத்த சத்யராஜ், இது கோவையில் அங்கு திருமணம் நடக்கிறது என்பதை அறிவிப்பதற்காக மட்டுமே தவிர, சாதாரண நடிகனின் தங்கைகள் திருமணத்திற்கு மக்கள் திலகம் அவ்வளவு தூரம் பயணிக்க வேண்டிய அவசியமில்லை. நானே திருமணம் முடிந்ததும் தங்கைகளை அழைத்து வந்து ஆசி பெறுகிறேன் என கோரிக்கை வைத்ததாக சத்யராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  ஆனால் சத்யராஜுக்கே ஷாக் கொடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர். ஜானகி அம்மாளுடன் திருமணத்தில் பங்கேற்றார். அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சாதாரண நடிகரின் தங்கை திருமணத்தில் பங்கேற்றது பரபரப்பாக பேசப்பட்டது.

  அதன் பின்னர் சிவாஜி கணேசனுடன் சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ பட விழாவுக்கு அவரை அழைக்க தோட்டத்துக்கு போன போதுதான், உனக்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டுள்ளார். சத்யராஜ் மறுத்தும் திரும்ப, திரும்ப கேட்டதால், எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி செய்யும் கர்லா கட்டையை அவரிடம் இருந்து பரிசாக பெற்றார்.

  எந்த முன் அனுமதியும் பெறாமல் எப்போது வேண்டுமானாலும் ராமவரம் தோட்டத்தில் போய் எம்.ஜி.ஆரை பார்க்க கூடியவரும், எம்.ஜி.ஆர். இறந்த போது அவரது உடல் மீது உப்பு அள்ளிப்போடும் பாக்கியம் பெற்ற ஒரே நடிகர் சத்யராஜ் தான்.

  குடும்ப வாழ்க்கை:

  சத்யராஜின் இயற்பெயர் ரங்கராஜ் என்பதாகும். சினிமாவிற்காக பெயரை மாற்ற வேண்டும் என்ற போது, எம்.ஜி.ஆரின் தயாரிப்பு நிறுவனமான சத்யராஜா என்ற பெயரைக் குறிக்கும் வகையில் சத்யராஜ் என வைத்துக்கொண்டார். மகேஸ்வரி என்பவரை மணந்துள்ள சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். திவ்யா ஊட்டச்சத்து நிபுணராகவும், மகன் சிபிராஜ் திரையுலகில் நடிகராகவும் இருந்து வருகின்றனர்.