தமிழ் திரையுலகில் தனக்கான தனி இடத்தை நிரப்பிக் கொண்ட நடிகர் பார்த்திபன்!
தமிழ் திரையுலகில் எண்ணற்ற ஜாம்பவான்கள் உண்டு என்றாலும் அந்த வரிசையில் தவறாமல் இடம்பெறக் கூடிய நடிகர் பார்த்திபன் ஆவார். நடிகர் என்று மட்டுமல்லாமல் இயக்குநர், எழுத்தாளர், வசக கர்த்தா என்று பன்முகத்தன்மை கொண்டவர். திரையுலகில் பலர் தங்கள் திறமைக்கான அங்கீகாரமாக ஒரு விருது பெற முடியாதா என்று காத்துக் கொண்டிருக்கையில், அதை முதல் படத்திலேயே செய்து காட்டியவர் பார்த்திபன் ஆவார்.
ஆம், கடந்த 1989ஆம் ஆண்டில் பார்த்திபன் தானே இயக்கி, நடித்த படம் புதிய பாதை ஆகும். சிறந்த படத்திற்கான தேசிய விருதை புதிய பாதை திரைப்படம் தட்டிச் சென்றது.
பார்த்திபன் இதுவரை 15 படங்களை இயக்கியுள்ளார். 14 படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பார்த்திபனின் இயக்கம் அல்லது நடிப்பில் வெளிவந்த படங்களான ஹவுஸ்ஃபுல், அழகி, ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற பல படங்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக ஒத்த செருப்பு திரைப்படம் தேசிய விருது பெற்றது.
தூத்துக்குடியை சேர்ந்தவர்
பார்த்திபன் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். 10ஆம் வகுப்பு பாஸ் ஆன பிறகு சென்னைக்கு புறப்பட்டு வந்தார். தொடக்கத்தில் நாடக நிறுவனம் ஒன்றில் இணைந்து பணியாற்றினார். பின்னர் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இதற்கிடையே, பல்வேறு இதழ்களில் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
திரைப்பட நடிகை சீதாவை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு கீர்த்தனா, அனுஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உண்டு. இதில், கீர்த்தனா கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி புகழ் பெற்றார். அதே சமயம், பார்த்திபன் மற்றும் சீதா இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர்கள் இருவரும் 2018ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக, கௌதம் வாசுதேவ மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருந்தனர்.
சமூக ஊடகங்களில் பார்த்திபன்
திரையுலக வாழ்விற்கு மத்தியில் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர் பார்த்திபன் ஆவார். தன்னுடைய படங்கள், படைப்புகள், வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.
ஃபேஸ்புக்கில் சுமார் 1.2 மில்லியனுக்கு அதிகமான ஃபாலோயர்ஸ், இன்ஸ்டாகிராமில் சுமார் 95 ஆயிரம் ஃபாலோயர்ஸ் பார்த்திபனை பின் தொடர்கின்றனர். யூ டியூப் வலைதளத்தில் பார்த்திபன் நடத்தும் சானலுக்கு சுமார் 68 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
கனவுப் படமான ஒத்த செருப்பு
தன்னுடைய இயக்கத்தில், தானே நடித்து, தானே தயாரிப்பாளராகவும் வெளியிட்ட ஒத்த செருப்பு திரைப்படம் பெரும் வெற்றியையும், அனைத்து தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றது. சுமார் 18 ஆண்டுகாலமாக இந்தப் படத்தை இயக்குவதற்கான கனவோடு இருந்ததாகவும், இது தன்னுடைய குழந்தை போன்றது என்றும் பார்த்திபன் குறிப்பிட்டார்.
இதுவரையிலும் யாருமே சாதிக்காத ஒரு சாதனையை செய்வதே தன் வாழ்க்கையின் பேராசை என்று பார்த்திபன் தெரிவித்தார்.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்
பார்த்திபன் எப்போதுமே மனதில் பட்டதை வெளிப்படையாக களகளவென பேசும் பழக்கம் கொண்டவர். பிரபல வார இதழ் ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்த அவர், அங்கு சிறந்த படைப்புகளுக்கான விருதை சிறப்பு விருந்தினர் என்ற முறையில் வழங்கினார்.
அப்போது பார்த்திபன் பேசுகையில், “நான் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு திரைப்படமானது ஆஸ்கர் தேர்வுக் குழுவின் பரிந்துரையில் இடம்பெற்றது. ஆனால், அந்தப் படத்திற்கு இங்கு எந்த விருதும் தரவில்லை. விருதுக்கு பரிசீலனை கூட செய்யவில்லை. இனி நான் ஒருபோதும் இவர்களின் விருதை பெற விரும்பவில்லை’’ என்று தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.
சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்
சமீபத்தில் தான் இயக்கிய இரவின் நிழல் படத்திற்கான பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பார்த்திபன் வெளியிட்டார். மேடையில் மைக் வேலை செய்யவில்லை என்ற கோபத்தில், அதை தூக்கி ரோபோ சங்கரை நோக்கி வீசினார். இதனால், பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், தன்னுடைய செயலுக்காக பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார்.