நடிகர் நகுல்!
19 ஆம் வயதிலேயே, இயக்குனர் ஷங்கரின் திரைப்படமான ‘பாய்ஸ்’ படத்தில் ஐந்து புதுமுகங்களில் ஒருவராக அறிமுகம் ஆனவர் நடிகர் நகுல் ஜெயதேவ். இவர் அறிமுகமான காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகையின் தம்பி என்பது சில ஆண்டுகளுக்கு பிறகே தெரிய வந்தது. சில ஹிட் திரைப்படங்கள், சில சுமாரான திரைப்படங்கள் என்று நகுல் தமிழ் நடிகர்களில் ஒருவராக தனது அடையாளத்தைப் பதித்துள்ளார்.
பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுகம் ஆன போது, கொழு கொழு இளைஞராக இருந்த நடிகர் நகுல், அடுத்தடுத்த படங்களில் எடை குறைத்து, ஃபிட்டாக்கி பலரையும் ஆச்சரியப்படுத்தினார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தில், கதாநாயகனான நடிகை சுனைனாவுடன் நடித்த நகுல், ‘நாக்க மூக்க’ பாடல் மூலம் பெரிய புகழ் பெற்றார். நடிப்பு, நடனம் என்று ஒரு எல்லாவற்றிலும் அசத்தும் ஒரு புதிய நடிகர் கிடைத்துவிட்டார் என்று பாராட்டைப் பெற்றார். அதன் பிறகு வெளியான திரைப்படங்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றன.
ஆண் ஜோதிகா என்று பலரும் கலாய்க்கும் அளவுக்கு ஓவர் ஆக்டிங், ஓவர் எக்ஸ்ப்ரஷன் கொடுத்த சில நடிகர்களில் நகுலும் ஒருவர்.
நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், நாரதன் ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றது.
2022 ஆம் ஆண்டில் வாஸ்கோடா காமா மற்றும் எரியும் கண்ணாடி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
2018 ஆம் ஆண்டில் செல் என்ற திரைப்படத்தில் நடித்த பின்னர், சில ஆண்டுகள் சின்னத்திரை பக்கம் தலைகாட்டி, சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.
பாடகர் நகுல்
நடிகர் நகுலைப் பலருக்கும் அறியாத விஷயம், இவர் பல திரைப்படங்களில் பாடியுள்ளார் என்பது! இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த பல படங்களில், நடிகர் நகுல் பாதியுள்ளார். அந்நியன் திரைப்படத்தின் காதல் யானை வருகுது ரெமோ, கஜினி திரைப்படத்தின் X-மச்சி பாடல், வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் கற்க கற்க பாடல், வல்லவன் திரைப்படத்தில் ஹூரே ஹூரே பாடல் உள்ளிட்ட பல பாடல்களை நகுல் பாடியுள்ளார். மேலும், இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ‘நாக்க மூக்க’ பாடலை, விஜய் ஆண்டனி இசையில் நகுல் பாடியுள்ளார்.
சின்னத்திரையில் நடிகர் நகுல்
தேர்ந்த டான்சரான நடிகர்நகுல், விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றார்.
கலர்ஸ் தமிழில், டான்ஸ் vs டான்ஸ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம், சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகர் நகுல். பின்னர், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 மற்றும் 8 இல் நடுவராகப் பங்கேற்றார். இடையே, நடனப் போட்டியான பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனின் நடுவராகவும் இருந்தார்.
விஜய் டிவியில் இருந்து விலகி, 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றுள்ளார்.
நடிகர் நகுலின் குடும்பம்
நடிகர் நகுல் ஜெய்தேவ் மும்பையைச் சேர்ந்தவர். இவருடைய மூத்த சகோதரி தான் தமிழ்நாட்டின் குடும்பப்பாங்கான நடிகை என்று பெயர் பெற்ற நடிகை தேவயாணி. திரைப்படங்களில் மட்டுமில்லாமல், சீரியலிலும் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை தேவயாணி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மயூர் என்ற மூத்த சகோதரர் ஒருவர் இருக்கிறார். இவரின் சகோதரரும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தவர். நகுல் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி, பிரபலமான பிறகே, இவர் நடிகை தேவயாணியின் தம்பி என்பது தெரிய வந்தது.
நடிகர் நகுல், தனது நீண்ட நாள் தோழி மற்றும் காதலியான சுருதி பாஸ்கர் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமண செய்தார். இவர்கள் இருவரும் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள். நகுலும் அவரது மனைவியும் பாடி பகிரும் இசை மற்றும் பாடல் வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்தத் தம்பதிக்கு 2020 ஆம் ஆண்டில் அகிரா என்ற குழந்தை பிறந்தது. 2022 ஆம் ஆண்டு ஜூன் இறுதியில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.