காதல் நாயகன் டூ ராக்கெட்ரி வின்னர் – நடிகர் மாதவனின் ரன்னிங் பயணம்!
கம்பீரமான தேகம், முறுக்கிய மீசை, தெனாவெட்டான பேச்சு என்று எப்போதும் ஒரு வீரம் மிகுந்த தோரணையில் வரும் கதாநாயகர்களை மட்டுமே தமிழ் சினிமா பெரும்பாலும் பார்த்துக் கொண்டிருந்த சமயம். அத்தனை மரபுகளையும் உடைத்து எறிந்துவிட்டு, மீசையும், தாடியும் இல்லாமல் சாக்கலேட் பாய் முகத்துடன் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் மாதவன்.
முதல் படமே ஹிமாலய இயக்குநர் மணிரத்னம் இயக்கியது என்றால் சொல்லவா வேண்டும். ஆம், 2000ஆவது ஆண்டில் வெளிவந்த அலைபாயுதே மூலமாகத்தான் திரையுலகிற்கு மாதவன் அறிமுகம் ஆனார். ஆனால், 1990களின் தொடக்கத்தில் இருந்தே அவர் ஹிந்தி மொழியில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பதும், அதற்குப் பிறகு ஆங்கிலம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
அலைபாயுதே படத்தில், கதாநாயகி ஷாலினியை துரத்தி, துரத்தி காதலிப்பது, பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்வது, பின்னர் காதல் மனைவியுடன் சண்டை போடுவது என இந்தப் படத்தில் வந்த காட்சிகள் அனைத்தும் அந்தக் காலகட்டத்தில் புதுமையாக இருந்தாலும் கூட பல ரசிகர்களை அந்த கதை கட்டிப் போட்டது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
தெறிக்கவிட்ட மின்னலே
அலைபாயுதே பட வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் மின்னலே திரைப்படத்தில் நடித்தார் மாதவன். இந்த படத்திலும் காதல் காட்சிகள் தான் அதிகம் என்றாலும், கொஞ்சம் தெனாவெட்டு மிகுந்த ஹீரோவாக வலம் வந்தார் மாதவன். ஆக, அலைபாயுதே, மின்னலே காதல் கவிதைகளை அள்ளித் தெளித்த காரணத்தினால் பெண்களின் கனவு நாயகனாக மாறிப் போனார் மாதவன்.
பெரும் வரவேற்பை பெற்ற படங்கள்
2002ஆம் ஆண்டில் மாதவன், சிம்ரன் இணைந்து நடித்த கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படம் ஈழத்தில் நடைபெறும் இன்னல்களை மையப்படுத்தியதாக இருந்தது. அதை தொடர்ந்து ஹிந்தி மொழியில் குரு, 3 இடீயட்ஸ் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். இந்நிலையில், 2016ஆம் ஆண்டில் குத்துச்சண்டை பயிற்சியாளராக மாதவன் நடித்திருந்த இறுதிச் சுற்று திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை குவித்தது மட்டுமல்லாமல், அவருக்கு பெரும் பாராட்டையும் பெற்றுத்தந்தது.
கவனம் ஈர்த்த ராக்கெட்ரி
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகள், அதனால் அவர் எதிர்கொண்ட இன்னல்கள், வழக்கை உடைத்து அவர் பெற்ற வெற்றி ஆகியவற்றை மையமாக வைத்து மாதவன் தானே இயக்கி, நடித்து, தயாரித்து வெளியிட்ட திரைப்படம் தான் ராக்கெட்ரி. தத்ரூபமாக நம்பி நாராயணனைப் போலவே இந்தப் படத்தில் வாழ்ந்திருந்தார் மாதவன். இந்தப் படத்திற்கு நாடெங்கிலும் பல மாநிலங்களின் முதல்வர்கள் மாதவனை அழைத்து நேரில் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மாதவனின் வாழ்க்கை குறிப்புகள்
கடந்த 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர் மாதவன். இவரது தந்தை ரங்கநாதன், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மேலாண்மை அதிகாரியாகப் பணியாற்றினார். தாய் சரோஜா ஃபேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணியாற்றியவர். மாதவன் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர்.
சினிமாவுக்கு வரும் முன்பாக மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக மாதவன் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் சரிதா பிர்ஜி என்ற பெண்ணை சந்திக்க, அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் ஏறத்தாழ 9 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உண்டு. அவர் சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.
மாதவன் பெற்ற விருதுகள்
அலைபாயுதே, ஆயுத எழுத்து, இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்ததற்காக ஃபிலிம்பேர் விருதுகளை மாதவன் பெற்றுள்ளார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இதுவரையிலும் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
100 ரூபாய் சம்பளம் வாங்கிய மாதவன்
கடந்த 1996ஆம் ஆண்டில் மாடலிங் துறையில் மாதவன் அடியெடுத்து வைத்த நேரம். முதல் முதலாக, ஒரு டால்கம் பவுடர் விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரத்திற்காக மாதவன் பெற்ற சம்பளம் ரூ.100 மட்டுமே.