HOME » ACTOR KARTHI

Karthi (கார்த்தி)

  பருத்தி வீரன் டூ பொன்னியின் செல்வன் வரை… தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடம் பிடித்த கார்த்தி!

  தமிழ் திரையுலகில் அப்பா பிரபல நடிகராக இருந்து அவரது வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகிறார்கள் என்றால் அவர்கள் மீது வெளிச்சமும், அழுத்தமும் மிகவும் அதிகம். ஏனெனில் புதுமுக ஹீரோவுக்கு நடிப்பை மட்டுமே பார்ப்பார்கள், ஆனால் வாரிசு நடிகருக்கோ கொஞ்சம் சொதப்பினாலும், ‘அவங்க அப்பா எவ்வளவு பெரிய நடிகர் பையன் அந்த அளவுக்கு இல்லையே’ என விமர்சித்துவிட்டு செல்வார்கள். இந்த பிரச்சனையை நடிகர் சூர்யா தனது முதல் படத்திலேயே எதிர்கொண்டார்.

  அப்பா சிவக்குமார் பிரபல நடிகர் என்பதாலேயே சூர்யா முதல் படத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தார். ஆனால் கார்த்தியின் கதையே வேறு, அவர் திரையுலகிற்கு அறிமுகமாகும் போது அண்ணன் சூர்யா முன்னணி நடிகர் இடத்தை பிடித்துவிட்டார். எனவே அப்பா, அண்ணன் என இரண்டு பேரின் பெயரை காப்பதோடு, தன்னையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கார்த்திக்கு இருந்தது. அதை எப்படி நிரூபித்தார், இன்று முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தியின் வாழ்க்கை பற்றி அறிந்து கொள்ளலாம்…

  அசிஸ்டெண்ட் இயக்குநர் டூ நடிகர்:

  கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அப்போதில் இருந்தே கார்த்திக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் கார்த்தியின் ஆசையோ இயக்குநராக வேண்டும் என்பதே. அதனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிக்கழித்தார். ஒருகட்டத்திற்கு மேல் ஒரே ஒரு படத்தில் நடித்தால் என்ன என கார்த்தி டிக் அடித்த படம் தான் ‘பருத்தி வீரன்’. 2007ம் ஆண்டு வெளியான தனது முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த கார்த்திக்கு மட்டுமில்ல ‘பருத்தி வீரன்’ திரைப்படம் தமிழில் திரையுலகிலேயே முக்கிய இடம் பிடித்தது. முதல் படத்திலேயே யாருமே நடிக்க துணியாத வகையில், ஏற்றி கட்டிய லுங்கியும் பரட்டை தலையும் தாடி மீசையும் என முரட்டு இளைஞனாக அறிமுகமாகி மனம் கவர்ந்தார்.

  அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் 3 வருட படப்பிடிப்புக்கு பிறகு 2010 ஆம் ஆண்டு வெளியானது. 'பையா', 'காஷ்மோரா', 'மெட்ராஸ்', 'தோழா', என வித்தியாசமான கதைக்களங்களை தைரியமாக தேர்வு செய்து நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் 'தீரன் அதிகாரம் ஒன்று' ‘சுல்தான்’, ‘கடைக்குட்டி சிங்கம்’ 'கைதி' ஆக்‌ஷன் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற முகமும், ரெமான்ஸ், சண்டை காட்சிகள், காமெடி என அனைத்திலும் கலக்கும் திறனும் கார்த்தியை லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் மாஸ் ஹீரோவாக அமர வைத்துள்ளது.

  குடும்பம், திருமணம்:

  தமிழ் திரையுலகின் பழம் பெரும் நடிகரான சிவக்குமார் – லட்சுமி தம்பதிக்கு 1977ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி இரண்டாவது மகனாக பிறந்தவர் கார்த்தி. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா இவரது அண்ணன் என்பது அனைவரும் அறிந்த விஷயம், கார்த்திக்கு பிருந்தா என்ற சகோதரியும் உள்ளார். வண்டலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் படித்த கார்த்தி, பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். அதன் பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக அதைப் பற்றி படிக்க அமெரிக்கா சென்று திரும்பியவர்.

  அண்ணன் சூர்யா பல போராட்டங்களை கடந்து நடிகை ஜோதிகாவை கரம் பிடித்தார். இதனிடையே ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் நடித்த கார்த்தி – தமன்னா இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. ஆனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கார்த்தி அப்பா – அம்மா பார்த்து வைத்த பெண்ணையே இந்து முறைப்படி மணமுடித்தார். கோவையைச் சேர்ந்த சின்னசாமி – ஜோதி மீனாட்சியின் மகளான ரஞ்சனி என்பவரை 2011ம் ஆண்டு கார்த்தி மணமுடித்தார். கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

  இந்த தம்பதிக்கு உமையாள் என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘கந்தன்’ என பெயர் சூட்டியுள்ளார்.

  அண்ணன் சூர்யா ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார். தம்பி கார்த்தி விவசாயிகள் நலன் காப்பதற்காக உழவன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.

  வந்தியத்தேவனாக வாகைசூட காத்திருக்கும் கார்த்தி:

  தற்போது தான் இயக்குநராக பணியாற்றிய மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடித்துள்ளார். ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

  கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், த்ரிஷா, ஐஷ்வர்யாராய் பச்சன், 'ஜெயம்' ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஷ்வர்ய லெக்‌ஷ்மி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கல்கி எழுதிய வரலாற்று சிறப்புமிக்க இந்த கதையில் எம்.ஜி.ஆர்., கமல் ஹாசன் என ஜாம்பவான்கள் நடிக்க ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார். ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், தூதுவன், உளவாளி, பயமறியா மாவீரன், குந்தவையின் காதல் கணவன் என மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். எனவே வந்தியத்தேவனாக கார்த்தியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.