Jayam Ravi (ஜெயம் ரவி)

  வித்தியாசமான ரோல்கள், மிரட்டலான நடிப்பு – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் நடிகர் ஜெயம் ரவி!

  ஒரு சில நடிகர்கள் தாங்கள் அறிமுகமான படத்தில் மிகபெரிய அளவில் பேசப்படுவார்கள். ஆனால் அதற்கடுத்து அடுத்து நடிக்கும் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறி விடுவார்கள். பெரும்பாலும் கதை தேர்வில் ஏற்படும் தவறுகள் காரணமாக மார்க்கெட்டில் சரிவை சந்திக்கும் நடிகர்கள் தங்களை நிரூபிக்க பல ஆண்டுகள் போராடி மீண்டும் வெற்றி பெறுவார்கள் அல்லது ஃபீல்டை விட்டு காணாமல் போவார்கள்.

  முதல் படத்தில் அறிமுகமானது முதல் தற்போது வரை ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ள மிக சில நடிகர்களில் முக்கியமான முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. பெயருக்கு ஏற்றார் போல இவர் நடிக்கும் பல திரைப்படங்கள் வெற்றி பெற்று ஹிட் லிஸ்டில் சேருவதில் இருந்தே இவர் எந்த அளவுக்கு சினிமாவில் வெற்றியை பெற்றுள்ளார் என்பதை புரிந்து கொள்ளலாம். நடிகர் ஜெயம் ரவியின் ஆரம்பகால வாழக்கை மற்றும் சினிமா வாழ்க்கை உள்ளிட்ட பல தகவல்களை இப்போது பார்க்கலாம்…

  பிறப்பு மற்றும் குடும்பம்:

  1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி பிறந்த நடிகர் ஜெயம் ரவியின் உண்மை பெயர் மோகன் ரவி என்பதாகும். மூத்த திரைப்பட எடிட்டர் ஏ.மோகன் – வரலட்சுமி தம்பதிக்கு மகனாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தார் ஜெயம் ரவி. சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் பள்ளி படிப்பை முடித்த ஜெயம் ரவி, சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்தார். பரதநாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், பரதநாட்டிய நடன கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனம் பயின்று தனது 12 வயதில் அரங்கேற்றம் செய்துள்ளார். இவருக்கு 2 உடன் பிறந்தவர்கள் உள்ளனர். ரவியின் வரது மூத்த சகோதரர் மோகன் ராஜா ஒரு பிரபல டைரக்டர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. ஏனென்றால் இவரது பெரும்பாலான படங்களில் ரவி தான் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இவர்களது சகோதரி ரோஜா ஒரு பல் மருத்துவர்.

  நடிப்பு பயிற்சி:

  லயோலா கல்லூரியில் படித்த போது திரைத்துறையில் நுழைய வேண்டும் என்ற ஆசை ரவிக்கு அதிகரித்தது. விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்த பின், திரைப்பட துறையில் நடிகராக களமிறங்க முடிவு செய்தார். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள கிஷோர் நமித் கபூர் நிறுவனத்தில் நடிப்பிற்காக பயிற்சியும் பெற்றார். திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகும் முன் 201-ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்திற்கு சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் ரவி.

  தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில்..

  ஜெயம் ரவி தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் முன்பே 1993 மற்றும் 1994-ல் 2 தெலுங்கு திரைடபங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இந்நிலையில் ரவி தந்தையின் தயாரிப்பில் அண்ணனின் இயக்கத்தில் வெளியான ஜெயம் திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். 2003-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் பின்னாளில் ரவியின் பெயரை ஜெயம் ரவி என்று மாற்றுமளவிற்கு சூப்பர் ஹிட் மூவியாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. ஜெயம் திரைப்படத்தை தொடர்ந்து தனது அண்ணனின் இயக்கத்தில் எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி திரைப்படத்தில் கிக் பாக்ஸராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனார்.

  தொடர்ந்து தாஸ், மழை, இதயதிருடன் என்று இவர் நடித்த படங்கள் பெரியளவில் வெற்றியடையவில்லை. அப்போது தம்பிக்கு, உனக்கும் எனக்கும் திரைப்படம் மூலம் தோள் கொடுத்தார் மோகன் ராஜா. அதன் பின்னர் தீபாவளி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திய ஜெயம் ரவி, பேராண்மை மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். படித்த காட்டுவாசி இளைஞனாக வித்தியாசமான நடிப்பில் மிரள வைத்து தனெக்கென தனி முத்திரை பதித்தார். பேராண்மைக்கு பிறகு தற்போது வரை ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

  தொடர்ந்து தில்லாலங்கடி, எங்கேயும் காதல் உள்ளிட்ட சாஃப்டான படங்களில் நடித்த ஜெயம் ரவியின் மிகப்பெரிய ஃபிளாப் படமாக அமைந்தது ஆதி பகவன். தொடர்ந்து நிமிர்ந்து நில், வித்தியாசமான கான்செப்டில் வெளியான காதல் திரைபடமான ரோமியோ ஜூலியட் மூலம் மீண்டும் ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றார். தனது சகோதரர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் இவர் நடித்து 2015-ல் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற “தனி ஒருவன்” இன்றளவும் பிளாக்பஸ்டர் படமாக நினைவுகூறப்பட்டு வருகிறது.

  தனி ஒருவனுக்கு பிறகு தொடர்ந்த மிரட்டல்..

  பூலோகம், மிருதன், போகன், வனமகன், டிக் டிக் டிக், அடங்கமறு, தும்பா என மிரட்டலான மற்றும் வித்தியசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ஸ்டைலை வகுத்து கொண்டுள்ளார் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படமான கோமாளி-யும் ரசிகர்களை கவர தவறவில்லை.

  பெரும் எதிர்பார்ப்பு:

  பல தமிழ் டைரக்டர்கள் எடுக்க நினைத்து முடியாமல் போன மற்றும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன்-ல் அருள்மொழி வர்மனாக நடித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி.

  குடும்பம்..

  கோபம், ஆக்ரோஷம், காதல், நகைச்சுவை, சண்டை, நடனம் என நடிப்பின் அனைத்து ஏரியாக்களிலும் புகுந்தது விளையாடும் ரவியின் மனைவி பெயர் ஆர்த்தி. 2009-ல் திருமணமான ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆரவ் 2010-ல் பிறந்தார். இளைய மகன் அயான் 2014-ல் பிறந்தார். மூத்த மகன் ஆரவ். டிக் டிக் டிக் திரைபடத்தில் ஜெயம் ரவிக்கு மகனாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.