HOME » ACTOR DHANUSH

Actor Dhanush

  இரண்டு தேசிய விருதுகளுடன் தமிழ் சினிமாவில் தனி இடத்தை தக்க வைத்துள்ள நடிகர் தனுஷ்!

  தமிழ் சினிமா என்ற ஆடுகளத்தின் நாயகனாக அறியப்படும் தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ பிரபு. கடந்த 1982ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி இயக்குநர் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலெட்சுமி ஆகியோரின் மகனகாகப் பிறந்தார் வெங்கடேஷ பிரபு. சினிமா உலகில் தனுஷ் என்ற அடையாளத்தோடு நுழைந்த இவருக்கு தற்போது 40 வயது ஆகிறது.

  20 வயதில் கதாநாயகன்

  திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இளம் வயதிலேயே படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆனார் தனுஷ். தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் முதன் முதலாக தனுஷ் நடத்த துள்ளுவதோ இளமை திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டில் வெளிவந்தது. படம் வெற்றியடைந்த போதிலும், தனுஷ் யார் என்பது அவ்வளவாக அப்போது ரீச் ஆகவில்லை.

  இதை தொடர்ந்து, தன்னுடைய சொந்த சகோதரர் செல்வராகவனின் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார் தனுஷ். இந்த படத்தில் அவர் ஒரு அப்பாவி இளைஞனாக அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தார் தனுஷ். இந்த படம் வெற்றியடைந்தது.

  இதற்கு அடுத்து வந்த திருடா திருடி தான் தனுஷுக்கு கமர்சியல் ரீதியாக பெரும் வெற்றியை தந்த படம் என்று சொல்லலாம். ஆக, ஹாட்ரிக் வெற்றியை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தனுசுக்கு குவிந்தன.

  திரை வாழ்க்கையில் சறுக்கலும், ஏற்றமும்

  அதே சமயம், ட்ரீம்ஸ், சுள்ளான், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் என நிறைய படங்கள் தோல்வியை தழுவத் தொடங்கின. இந்நிலையில், மீண்டும் 2006ஆம் ஆண்டு செல்வராகனின் இயக்கத்தில், புதுப்பேட்டை திரைப்படத்தில் கொக்கி குமாராக வந்து ஒரு மிரட்டு, மிரட்டிவிட்டு சென்றார் தனுஷ்.

  புதுப்பேட்டை படம் முழுவதும் அடி, தடி, வன்முறை காட்சிகள் நிறைந்ததாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் பிற்காலத்தில் வந்த கேங்க்ஸ்டர் படங்களுக்கு அதுவே முன்னோடி என்றுகூட சொல்லலாம். இன்னும் சொல்லப்பானால் இதே பாணியில் தனுஷ் நடித்த வட சென்னை, மாரி ஆகிய படங்களும் கூட ஹிட் அடித்தன.

  எல்லோர் மனதிலும் இடம்பிடித்த படங்கள்

  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இதில் நிறைய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன என்றாலும், தனுஷின் நடிப்பை வியந்து போற்றும் அளவுக்கு சில படங்கள் அமைந்தன.

  அந்த வகையில், யாரடி நீ மோகினி, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் தனுஷின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படங்கள் ஆகும். இதில், வேலையில்லா பட்டதாரி கமர்ஷியல் ரீதியாக செம்ம ஹிட்டான படமானது.

  ஆடுகளம், அசுரன் ஆகிய திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது. அதேபோல, தனுஷ் துணை தயாரிப்பாளராக வெளியிட்ட காக்கா முட்டை, விசாரணை ஆகிய திரைப்படங்களுக்கும் தேசிய விருது கிடைத்தது.

  பன்முக திறமை கொண்ட தனுஷ்

  சிறந்த நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தது மட்டும் அல்லாமல் கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கிறார். அனைத்து பிரிவுகளிலும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

  குடும்ப வாழ்க்கை

  தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 18 ஆண்டுகால மணவாழ்க்கை அண்மையில் முறிவுக்கு வந்தது.

  சொந்தம் கொண்டாடும் தம்பதியர்

  மதுரை திருபுவனத்தை சேர்ந்த கதிரேசன் மற்றும் மீனாள் ஆகிய தம்பதியர் கடந்த 2016ஆம் ஆண்டில் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், அவரது பெயர் கலையரசன் என்றும் அதிரடியான தகவலை வெளியிட்டனர். பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் கோபித்துக் கொண்டு சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை எனக் கூறினர். இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடுத்த போதிலும், அந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெறவில்லை.