HOME » ACTOR ATHARVAA

Atharvaa (அதர்வா)

  இளம் நாயகனாக பட்டையக் கிளப்பி வரும் அதர்வா!

  அப்பா முரளியின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள இளம் ஹீரோ அதர்வாவின் திரைப்பயணம் பற்றி பார்க்கலாம்…

  திரைப்பயணம்:

  தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் வரிசையில் வாரிசு நடிகராக அடியெடுத்து வைத்தவர் அதர்வா. நல்ல நிறமும், ஹேண்ட்சம் லுக்கும், கட்டுமஸ்தான பாடியும் தான் ஹீரோவுக்கான அடையாளம் என இருந்த 90களில், ‘கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ என இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த நடிகர் முரளியின் மகன்.

  2010-ம் ஆண்டு ‘பாணா காத்தாடி’ என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அதர்வாவிற்கு இந்த படம், நல்ல ஓபனிங்காக அமைந்தது. படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்த படத்தில் ‘இதயம்’ முரளியாக மகனுக்காக நடிகர் முரளி சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

  அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 2012ம் ஆண்டு ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்ற படத்தில் நடித்தார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அமலாபால் நடித்திருந்தார். இந்த படத்திற்காக அதர்வா சிக்ஸ் பேக் வைத்து நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடல்கள் மற்றும் திரில்லரை அடிப்படையாக கொண்ட புதுமையான காதல் கதை என்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தனது இரண்டாவது படத்திலேயே 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடும் படமாக ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படம் மாறியது. அத்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது.

  அதன் பின்னர் அதர்வாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘பரதேசி’. இயக்குநர் பாலா இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, அதர்வாவிற்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. இன்றளவும் அதர்வா பெயரைக் கேட்டாலே அவரது ‘பரதேசி’ பட கெட்டப் தான் பலரது கண்முன்பும் தோன்றும். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்திருப்பார். பரதேசி படத்தில் காட்சிக்கு காட்சிக்கு நடிப்பது போல் இல்லாமல் நிஜமாகவே வாழ்த்திருப்பார் என்றும் சொல்லும் அளவுக்கு அதர்வா நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார்.

  இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றுள்ள அதர்வா, மலேசியாவில் தமிழ் திரைப்பிரபலங்களுக்கு வழங்கப்படும் எடிசன் விருது, நார்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது, 11வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது, ஆனந்த விகடனின் சிறந்த நடிகருக்கான விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.

  அதை தொடர்ந்து ‘இரும்புக் குதிரை’ (2014), ‘சண்டி வீரன் (2015)’, ‘ஈட்டி’ (2015), ‘கணிதன்’ (2016), ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ (2017), ‘செம போத ஆகாதே’ (2018), ‘பூமராங்’ (2019) போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதில் ‘சண்டி வீரன்’ திரைப்படம் தவிர பிற திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக எவ்வித வெற்றியையும் எட்டவில்லை. ‘செம போதை ஆகாதே’ என்ற படம் மூலமாக அதர்வா தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

  2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா உடன் இணைத்து ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் மற்றும் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

  அடுத்தடுத்த தோல்விகளில் கதைகளை பொறுமையாக தேர்வு செய்து நடித்து வரும் அதர்வா, ‘8 தோட்டக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராக் ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மதுரையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா அஜித் ரசிகராகவும், கபடி வீரராகவும் மிரட்டலாக நடித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதர்வா நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  குடும்ப வாழ்க்கை:

  கன்னட குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் முரளி மற்றும் சோபானா தம்பதிக்கு 1989ம் ஆண்டு, மே 7ம் தேதி 2வது குழந்தையாக பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளார்கள். 2020ம் ஆண்டு அதர்வாவின் தம்பிக்கும், பிரபல தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவிற்கும் திருமணம் நடைபெற்றது. இதன் மூலமாக அதர்வா நடிகர் விஜய்யின் நெருங்கிய சொந்தமாக மாறினார். சினேகா பிரிட்டோ விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் சகோதரியின் பேத்தி ஆவார்.