HOME » ACTOR ARYA

Arya (ஆர்யா)

    சாக்லேட் பாய் முதல் பாக்ஸர் வரை… நடிப்பில் டெரர் காட்டும் நடிகர் ஆர்யா!

    தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் என்று பெயரெடுத்த ஹீரோக்கள் வெகு சிலரே. இந்த பட்டியலில் இடம் பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளவர் நடிகர் ஆர்யா. மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் இளமை துள்ளலான தமிழ் திரைப்படமான “உள்ளம் கேட்குமே” மூலம் சாக்லேட் பாயாக தமிழ் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனவர் நடிகர் ஆர்யா.

    இவருடன் இந்த படத்தில் அறிமுகமான நடிகர்கள் நடிகை அசின் மற்றும் பூஜா. இவர்கள் மூவரும் அறிமுகமான இந்த திரைப்படம் முதலில் பெப்சி என்ற பெயரில் உருவானது. ஆனால் பல தடைகளை சந்தித்த பிறகு ஒருவழியாக ரிலீஸ் ஆகும் போது உள்ளம் கேட்குமே என்ற பெயரில் வெளியாகி ஹிட்டடித்தது. ஆனால் டைரக்டர் விஷ்ணுவர்தனின் அறிந்தும் அறியாமலும் படத்தில் குட்டி என்ற கேரக்டர் மூலம் தான் தமிழ் ரசிகர்களுக்கு முதலில் அறிமுகம் ஆனார் நடிகர் ஆர்யா. முதல் படமாக உள்ளம் கேட்குமே-வில் நடித்த போதும், சிக்கலில் சிக்கியதால் நம்மிடம் குட்டியாக முதன் முதலில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

    பிறப்பு மற்றும் படிப்பு:

    நடிகர் ஆர்யா கேரள மாநிலத்தில் உள்ள திருக்கரிப்பூர் (Trikaripur) எனும் சிறுநகரத்தில் 1980-ல் டிசம்பர் 11-ஆம் தேதி பிறந்தார். இவரது உண்மை பெயர் ஜம்ஷத். அதனால் தான் இவரது ‘ஜாமி’ என்றுதான் நண்பர்கள் அழைக்கிறார்கள். கேரளாவில் பிறந்த நடிகர் ஆர்யா தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள SBOA மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின் சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார் அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்தாலும், வசீகர தோற்றம் மற்றும் ஃபிட்டான உடல் அமைப்பு காரணமாக மாடலிங்கில் இறங்கினார் ஆர்யா.

    திரை அறிமுகம்..

    மறைந்த ஜீவாவின் வீட்டருகே வசித்த காரணத்தால் சினிமாத்துறையில் நுழைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை அணுகி வாய்ப்பு கேட்ட போது, சில டெஸ்ட்களுக்கு ஓகே சொல்லி இருக்கிறார். திரைப்பட துறைக்காக ஜாமி-யை ஆர்யாவாக பெயர் மாற்றம் செய்ததும் மறைந்த ஜீவா தான். அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ஆர்யாவிற்கு, இவர் நடித்த முதல் திரைப்படமான உள்ளமே கேட்குமே வெளியாகி நிறைய இளம் மற்றும் பெண் ரசிகர்களை பெற்று தந்தது.

    இதனை தொடர்ந்து சோனியா அகர்வாலுடன் சேர்ந்து இவர் நடித்த ஒரு கல்லூரியின் கதை மற்றும் கலாபக் காதலன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. மீண்டும் விஷ்ணு வர்தனுடன் இணைந்தது நடிகர் பரத்துடன் சேர்ந்து இவர் நடித்த பட்டியல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பின் வட்டாரம் மற்றும் ஓரம் போ உள்ளிட்ட படங்களில் சற்று வித்தியாசமான ரோல்களில் நடித்தாலும் கூட பெரிதாக பேசப்படவில்லை.

    அதிரடி முகம் காட்டிய ஆர்யா:

    மிரட்டலான கதைகளுக்கு சொந்தகாரரான டைரக்டர் பாலாவுடன் நடிகர் ஆர்யா இணைந்த போது, தமிழ் திரையலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. எதிர்பார்ப்பு வீணாகாமல் நான் கடவுள் திரைப்படத்தில் அகோரியாக நடித்து படம் பார்க்கும் அனைவரையும் மிரட்டினார் ஆர்யா. இவரிடமிருந்து இப்படி ஒரு பர்ஃபாமென்ஸை எதிர்பார்க்காத திரையுலகினரும், ரசிகர்களும் இந்த படத்திற்கு பிறகு ஆர்யாவை சாக்லேட் பாய் காணோட்டத்தில் இருந்து பார்ப்பதை நிறுத்தினர் என்றே சொல்லலாம். சர்வம் திரைப்படத்தை தொடர்ந்து தனது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை மதராசபட்டினம் திரைப்படத்தில் வெளிப்படுத்தினார் ஆர்யா.

    காமெடி..

    சிறந்த நடிகன் என்பவன் எல்லா கேரக்டரிலும் பொருந்தி போக வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதற்கேற்ப தன்னால் காமெடியிலும் பின்னி பெடெலெடுக்க முடியும் என்று சந்தானத்துடன் இணைந்து பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் மூலம் நிரூபித்தார் ஆர்யா. இதனை தொடர்ந்து சிக்கு புக்கு, அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, சேட்டை, இரண்டாம் உலகம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் சவாலான கேரக்டர்களை அசால்ட்டாக நடிக்க துடித்து கொண்டிருந்த ஆர்யாவுக்கு ஏற்ற படங்கள் எதுவும் அமையவில்லை.

    பாக்சிங்..

    இந்நிலையில் தான் பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஆர்யா. வித்தியாசமான கதைக்களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை பொய்யாக்கி விடாமல் நான் கடவுள் திரைப்படத்திற்கு பிறகு சிறந்த மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி மெகாஹிட் திரைப்படத்தில் தானும் ஒரு முக்கிய அங்கமானார் ஆர்யா. பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் நடிகர் ஆர்யாவின் உடல் தோற்றம் அனைவரையும் மிரள செய்தது.

    திருமணம்:

    ஜாலியான பேர்வழி என்பதால் பல நடிகைகளும் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஆர்யா, தன்னுடன் கஜினிகாந்த் திரைப்படத்தில் சேர்ந்து நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாயிஷாவை விட நடிகர் ஆர்யா சுமார் 16 வயது மூத்தவர் ஆவார். இவர்களது திருமணம் மார்ச் 10, 2019-ல் ஐதராபாத்தில் நடந்தது. இந்த தம்பதியருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தங்களது மகளுக்கு ‘ஆரியானா’ (Ariana) என்று பெயர் வைத்துள்ளதாக சோஷியல் மீடியா மூலம் இருவரும் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.