Arun Vijay (அருண் விஜய்)

    என்றென்றும் இளமையாகவே காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய்!

    தமிழ் சினிமாவில் என்றென்றும் இளமையாகவே காட்சியளிக்கக் கூடிய நடிகர்களில் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 1977ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 44 வயது ஆகிறது. ஆனால், தோற்றத்திற்கும், வயதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இன்றைக்கும் இளமையாகவே காட்சியளிக்கிறார்.

    தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட திரையுலக படங்களில் அருண் விஜய் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய. இவரது இயற்பெயர் அருண் குமார் என்றாலும், நியூமராலஜி ராசி கருதி அதை மாற்றி வைத்துக் கொண்டார்.

    1995ஆம் ஆண்டில் முதல் சினிமா

    கடந்த 1995ஆம் ஆண்டில் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா உலகில் அருண் விஜய் அடியெடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து தற்போது வரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மாஞ்சா வேலு, தடையற தகர்க்க, குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், யானை உள்ளிட்டவை இவர் நடித்துள்ள படங்களில் குறிப்பிடத்தகுந்த படங்கள் ஆகும்.

    சிறந்த வில்லன்

    இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், நடிகர் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். குறிப்பாக, நார்வே தமிழ் திரையுலக விழா, எடிசன் அவார்ட்ஸ் போன்ற அமைப்புகளின் சார்பில் சிறந்த வில்லன் என்ற விருது வழங்கப்பட்டது.

    நடிகர் ஷியாம் நடித்த இயற்கை என்ற படத்தில், சப்போர்டிங் நடிகராக அருண் விஜய் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டான நிலையில், சிறந்த மொழிப் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது.

    பள்ளி, கல்லூரி வாழ்க்கை

    சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை அருண் விஜய் முடித்தார். அதைத் தொடர்ந்து லயோலா கல்லூரியில் உயர்கல்வி படித்தார். படிக்கும் போதே திரைப்படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் இருந்தது என்றாலும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகுதான் திரையுலகில் நுழைய வேண்டும் என்று தந்தை விஜயகுமார் கண்டிஷன் போட்டிருந்தாராம்.

    குடும்ப வாழ்க்கை

    திரைப்பட தயாரிப்பாளர் என்.எஸ்.மோகனின் மகள் ஆராதியை கடந்த 2006ஆம் ஆண்டில் அருண் விஜய் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பூர்வி என்ற மகளும், அர்னவ் விஜய் என்ற மகனும் உள்ளனர். குறிப்பாக, 2006ஆம் ஆண்டு வரையில் அருண் குமார் என்று அறியப்பட்ட இவர், 2007ஆம் ஆண்டில் இருந்துதான் அருண் விஜய் என்று அறியப்படுகிறார்.

    தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அருண் விஜய்

    கடந்த 2015ஆம் ஆண்டில் ‘இன் சினிமாஸ் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அருண் விஜய் தொடங்கினார். சினிமா துறையில் சாதிக்க விரும்பும் திறன் வாய்ந்த நபர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சி அளித்து வருகிறது.

    விளையாட்டுகளில் ஆர்வம்

    சினிமா மட்டுமல்லாமல் விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் கொண்டவர் அருண் விஜய். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். அமெரிக்காவில் உள்ள பாராசூட் சங்கம் ஒன்றில் உரிமம் பெற்ற ஸ்கைடைவராக அருண் விஜய் இருக்கிறார்.

    இது மட்டுமல்லாமல், ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும் அருண் விஜய்க்கு ரொம்பவே ஆர்வம் அதிகம். தென்னிந்திய சினிமா துறையில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

    குதிரையேற்றம், பாட்டு பாடுவது போன்ற கலைகளிலும் அருண் விஜய் அவ்வபோது ஆர்வம் காட்டுவார். ஓய்வு நேரங்களில் இந்த கலைகளின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

    சமூக வலைதளங்களில் அருன் விஜய்

    மற்ற பிரபலங்களைப் போலவே அருண் விஜயும் சமூக வலைதளங்களில் பிஸியாக வலம் வருகிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. டிவிட்டரில் சுமார் 1.6 மில்லியன் யூசர்கள் அருண் விஜயை பின்தொடருகின்றனர். இதேபோன்று ஃபேஸ்புக்கில் அவரது பக்கத்தை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமிலும் அருண் விஜய் நிறைய பதிவுகளை வெளியிடுவார். அங்கு 1.4 மில்லியன் யூசர்கள் அவரை பின் தொடருகின்றனர்.