பைக் மெக்கானிக் டூ வலிமை நாயகன் வரை; அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்து வந்த பாதை!
ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் அக்கவுண்ட் இல்லாமல், ட்ரெண்டிங்கில் தட்டித்தூக்க முடியும் என்றால் அது தல அஜித்தால் மட்டுமே சாத்தியம்… வெற்றிக்கு ‘முகவரியும்’ தோல்விக்கு ‘விவேகமும்’ கொடுத்து தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் அஜித் பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ…
அஜித் திரைப்பயணம்:
‘என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது டா’ பில்லா படத்தில் தல அஜித் பேசும் இந்த வசனம் அவருக்கு என்றே எழுத்தப்பட்டது போல் இருக்கும். தன்னம்பிக்கையுடன் தனித்துவமாக திரையுலகில் நடைபோடக்கூடியவர். பைக் ரேஸ், விளம்பர படங்கள் என பிசியாக இருந்த அஜித்திற்கு இடையில் சினிமா வாய்ப்பு கிடைத்தது.
முதன் முதலாக என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார். அதன் பின்னர் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார்.
இடையில் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டே வருமானத்திற்காக விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அப்படி வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த போது தான் செல்வா இயக்கத்தில் அறிமுக நாயகனாக ‘அமராவதி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் பைக் ரேஸில் பங்கேற்ற அஜித்திற்கு படுகாயம் ஏற்பட்டது, படுத்த படுக்கையாக இருந்தவரை வைத்து ‘பவித்ரா’ பட காட்சிகளை எடுத்து முடித்தார் அப்படத்தின் இயக்குநர் கே.சுபாஷ்.
எம்.ஜி.ஆர். – சிவாஜி, ரஜினி – கமல் வரிசையில் ரசிகர்களால் போட்டியாளர்களாக பார்க்கப்படும் அஜித் – விஜய் இருவரும் ஒன்றாக இணைத்து நடித்த ஒரே படம் ‘ராஜாவின் பார்வையிலே’. இந்த படத்தில் அஜித்திற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கதாபாத்திரம் இல்லை என்றாலும், பைக் ரேஸ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, அதற்கான பணத்தை ஈட்டுவதற்காக அஜித் நடித்த பல படங்களில் இதுவும் ஒன்று. என்ன தான் சினிமாவில் கடினமாக முயன்றாலும் சரியாக வாய்ப்பு அமையவில்லையே என வருத்ததில் இருந்த அஜித்திற்கு மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கிய ‘ஆசை’ படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அஜித் நடித்த வேட்டி விளம்பரம் ஒன்றை பார்த்த வசந்த் ஆசை படத்தில் ஹீரோவாக அவரை நடிக்க வைக்க முடிவெடுத்தார். அப்போது பேமஸ் நடிகராக இருந்த பிரகாஷ் ராஜ் உடன் போட்டி போட்டு நடித்த அஜித்தை திரையுலகே திரும்பி பார்த்தது. தமிழகத்தில் திரையிட்ட பல தியேட்டர்களிலும் ஆசை படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. இந்த சாதனை கோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பலரையும் ‘யார் இந்த ஹீரோ?’ என திரும்பி பார்க்க வைத்தது.
ஆசை நாயகனாக வலம் வந்த அஜித் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், ‘வான்மதி’, ‘கல்லூரி வாசல்’, ‘மைனர் மாப்பிள்ளை’ என அடுத்தடுத்து அஜித் நடித்த படங்கள் தோல்வியை தழுவின. வரிசையாக விஜய், ரஞ்சித், பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் அஜித் பெரும்பாலும் அந்த படங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டார். இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாதவர் பெரும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து காத்திருந்தார்.
அந்த சமயத்தில் தான் மைனர் மாப்பிள்ளை பட இயக்குநர் அகத்தியனோடு காதல் கோட்டை படத்தில் கரம் கோர்ந்தார். இன்றளவும் தமிழ் சினிமாவில் வெளியான காதல் படங்களில் இந்த படத்திற்கு தனி இடம் உண்டு. காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கிறார்கள் என்ற ஒன்லைனை வைத்து மிரட்டலான கதை உருவாக்கி, இயக்கியிருப்பார் அகத்தியன். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 205 நாட்கள் வரை கடந்து ஓடிய காதல் கோட்டை திரைப்படம் தான் அஜித் திரை வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.
இளம் பெண்களின் உள்ளம் கவர்ந்த நாயகனாகவும் அஜித்குமார் மாறியது இந்த படத்தில் இருந்து தான். காதல் கோட்டை படம் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடிய அஜித், அதன் பின்னர் நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு என அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார். ‘ஒரு படம் ஹிட்டானால் 4 படம் பிளாப்’ என்ற ரீதியில் தான் அஜித்தின் ஆரம்ப கால திரைப்பயணம் இருந்தது. அது தான் இன்றளவும் தல-க்கு தலைக்கணம் கொடுக்காத விஷயமாக மாறியிருக்கிறது. அஜித்தின் சினிமா ரேஸை டாப் கியருக்கும் தூக்கிய இயக்குநர்களில் சரண் மிகவும் முக்கியமானவர். அப்போது அறிமுக இயக்குநராக இருந்த சரண் இயக்கிய காதல் மன்னன் திரைப்படம் அஜித்திற்கு மிகப்பெரிய பிரேக்காக அமைந்தது. பந்தயம் என வந்தால் எதையும் செய்யும் கதாபாத்திரத்தில் அஜித் அசத்தியிருப்பார்.
காதல் மன்னன் பட ஹிட்டை தொடர்ந்து அஜித்திற்கு ரசிகர்கள் மட்டுமல்ல ரசிகைகள் பட்டாளமும் ஏராளமாக பெருக ஆரம்பித்தது. ‘காதல் மன்னன்’ படத்தை தொடர்ந்து ராஜ்கபூர் இயக்கத்தில் வெளியான அவள் வருவாளா படமும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்தில் தான் அஜித்துடன் சிம்ரன் முதன் முறையாக இணைந்து நடித்தார். அஜித்திற்கு மெல்ல வளர ஆரம்பித்த ரசிகர்கள் வட்டாரம் பிற நடிகர்களின் படங்களுக்கும் கவனம் ஈர்ப்பு விசையாக தேவைப்பட்டது. எனவே கார்த்திக்கின் ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’, பார்த்திபன் நடித்த ‘நீ வருவாய் என’ ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தார். இதனால் அஜித்திற்கு திரையுலகினர் மத்தியிலும் நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தது.
ஆசை படத்தில் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் களமிறங்கினார் அஜித். வாய் பேச முடியாத, காது கேளாத அண்ணணாகவும், ஹேண்ட்சம் தம்பியாகவும் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வில்லனாக அஜித் தோன்றிய கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு வெளிவந்த ஆனந்த பூங்காற்றே படமும் ஹிட்டானது. அதுவரை காதல் சப்ஜெட்டில் மட்டுமே நடித்து வந்த அஜித், முதன் முறையாக கொஞ்சம் ஆக்ஷன் கலந்த காதல் பார்முலாவிற்கு மாறினார். தனக்கு திரும்புமுனை கொடுத்த இயக்குநரான சரண் இயக்கத்தில் வெளியான அமர்க்களம் திரைப்படம் அஜித்திற்கு மற்றொரு வெற்றியை பெற்றுத்தந்தது. இந்த படம் மூலமாக தான்
அஜித் – ஷாலினி இடையே காதல் உருவாகி, பின்னாளில் திருமணத்தில் முடிந்தது.
இப்போதெல்லாம் புதுமுக நடிகர்கள் கூட முதல் படத்திலேயே ஆக்ஷன் கதாபாத்திரம் வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். ஆனால் ‘அமர்க்களம்’ திரைப்படம் அஜித்திற்கு 25வது படமாகும். அதுவரை காதல் மன்னனாக பார்க்கப்பட்ட அஜித் ஆக்ஷன் நாயகனாக கொண்டாடப்பட்டார். ‘முகவரி’, , ’கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ என மீண்டும் காதல் மன்னனாக மாறிய அஜித்தை, தீனா திரைப்படம் கமர்ஷியல் நாயகனாக மாற்றியது.
வாலி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய முருகதாஸை ‘தீனா’ படம் மூலமாக இயக்குநராக மாற்றினார் அஜித். ரவுடி கதாபாத்திரத்திற்காக தன்னுடைய ஒட்டுமொத்த கெட்டப்பையும் மாற்றி அஜித் நடித்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பஞ்ச டைலாக், ஆக்ஷன் சீன்கள், சென்டிமெண்ட் என கமர்ஷியல் ஹீரோவுக்கான அத்தனை வாய்ப்புகளும் அஜித்திற்கு தீனா படம் மூலமாக தான் கிடைத்தது. தன்னுடைய படங்களில் அதிக அளவில் உதவி இயக்குநர்கள் மற்றும் புதுமுக இயக்குநர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் அஜித்.
அறிமுக இயக்குநரான சரவண சுப்பையா இயக்கிய சிட்டிசன் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் மொத்தம் 9 கெட்டப்புகளில் நடித்து அசத்தினார். தீனா, சிட்டிசன் என இரண்டு ஆக்ஷன் படங்களில் நடித்த அஜித், பூவெல்லாம் உன் வசம் படத்தில் பக்கா குடும்ப சென்டிமெண்ட் டிராமாவில் நடித்து மிரள வைத்தார். இதற்காக அஜித்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. ‘ஒன்னு ஹிட்டு, 4 அவுட்டு’ என போய்க் கொண்டிருந்த அஜித்தின் திரைப் பயணத்தை 1999ம் ஆண்டு மாற்றியது என்று தான் சொல்லவேண்டும்.
1999 முதல் 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்த அஜித்தின் வளர்ச்சிக்கு ‘ராஜா’ படம் சறுக்கலாக அமைந்தது. இதனால் கதை தேர்வில் சற்றே கவனம் செலுத்த ஆரம்பித்த அஜித், முன்னணி இயக்குநரான கே.எஸ்.ரவிக்குமாருடன் கூட்டணி அமைத்தார். வாலி, சிட்டிசன் படங்களை தொடர்ந்து மீண்டும் இரண்டு கெட்டப்புகளில் வில்லன் படத்தில் களமிறங்கினார். அந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் விதி யாரை விட்டது என்பது போல் ஆஞ்சநேயா, ஜனா, ஜி போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன. இது அஜித்திற்கு பெரும் சிக்கலை உருவாக்கியது.
இனி அஜித் என்ற நடிகர் காலி, அவரை வைத்து படம் எடுத்தாலே தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டுக்கொள்ள வேண்டியது தான். அஜித் சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தரும் என்பதை தல அஜித் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார்.
2006ம் ஆண்டின் இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வரலாறு படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என நடித்தார் அஜித். அவர் வயது நடிகர்கள் நடிக்க தயங்கும் வயதான கதாபாத்திரத்தில் துணிந்து நடித்தார். படமும் சூப்பர் ஹிட்டானது.
அந்த வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் ‘ஆழ்வார்’ திரைப்படம் படுதோல்வியை தழுவ, ‘கிரீடம்’ திரைப்படமும் சுமாராகவே ஓடியது. அப்போது தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கே மாஸ் பிரேக் கொடுத்த பில்லா படத்தின் ரீமேக் வாய்ப்பு அஜித்தை தேடி வந்தது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் அஜித் ஸ்டைலிஷ் ஹீரோவாக மிளிர்ந்தார். இதுவரையிலும் அப்படியொரு கெத்துடனும், ஸ்டைல் உடனும் தலயை எந்த இயக்குநரும் காட்டவில்லை என அஜித் ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடும் படி அமைந்தது.
ஆனால் அதனைத் தொடர்ந்து வெளியான ஏகன், அசல், பில்லா 2 ஆகிய படங்கள் வெளியே கூட தெரியாத அளவிற்கு படுதோல்வி அடைந்தன. அந்த சமயத்தில் தான் அஜித்திற்கு அவருடைய 50வது படமான மங்காத்தா மாஸ் வெற்றியாக அமைந்தது. முதன் முறையாக அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மங்காத்தா படத்தில் தோன்றி அசத்தினார். இதனாலேயே இன்னொரு பில்லா அளவிற்கு மங்காத்தா படத்தை அஜித் ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடினர். தொடர் தோல்விகளை கொடுத்து வந்த அஜித்திற்கு ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியைக் கொடுத்து, மீண்டும் வசூல் நாயகனாக மாறினார். இடையில் அஜித் கஷ்டப்பட்டு வெயிட்டை குறைத்து சிக்ஸ் பேக் லுக்கில் மிரட்டிய விவேகம் படம் தோல்வியை தழுவியது.
இருந்தாலும் அந்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவாவை வைத்தே விஸ்வாசம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். 2016ம் ஆண்டு இந்தியில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடித்தார். முற்றிலும் மாறுபட்ட தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தில் அஜித் நடித்த இந்த திரைப்படம் அவருக்கு மற்றொரு வெற்றியை பெற்றுத் தந்தது. மீண்டும் மாஸ் போலீசார் ஆபீசராக அஜித் நடித்த வலிமை திரைப்படம் பட்டி தொட்டி எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
வாழ்க்கைப் பயணம்:
ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஐதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கிய அஜித்குமார், ரசிகர்களின் மனம் கவர்ந்த தல-யாக மாறியதற்கு பின்னால் உள்ள ஆரம்ப கால சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. கார் மற்றும் பைக் ரேஸ் மீது அஜித் கொண்டிருந்த காதல் இன்று வந்தது அல்ல, பதின் பருவத்திலேயே கொண்ட ஆர்வத்தால் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டார். அதன் காரணமாக தான் பைக் மெக்கானிக் வேலையிலும் சேர்ந்தார். தொடர்ந்து ரேஸில் கலந்து கொள்ள பணம் தேவை என்பதற்காக சில விளம்பர படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
திரையுலகில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் அஜித்திற்கு பிரேக் கொடுத்த திரைப்படம் ‘அமர்க்களம்’ இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது தான் அஜித்திற்கும், ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2000ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர். அஜித்திற்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் குமார் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற ஷாலினி, குழந்தைகளை கவனித்து வருகிறார்.