Aadhi (ஆதி)

    திரைப்படத்தில் சேர முடியாவிட்டாலும் நிஜ வாழ்வில் அதே நடிகையை காதலித்து மனைவியாக்கி கொண்ட ஹீரோ!

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் நடித்து மக்களிடையே மேலும் புகழ்பெற்ற நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மாறுபட்ட ரோல்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகர்களாக இருப்பார்கள்.

    மிருகமாக அறிமுகமானவர்:

    தங்கள் கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக வித்தியாசமான கேரக்டர்களை துணிந்து ஏற்று நடிப்பார்கள். ஆனால் தமிழில் அறிமுகப்படத்திலேயே மிரட்டலான, மாறுபட்ட ரோலில் எய்ட்ஸ் நோயாளியாக மிருகம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை 'யார் இந்த புது நடிகர்” என திகைக்க வைத்தவர் மற்றும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் ஆதி.

    2007-ல் மிருகம் திரைப்படத்தில் நடித்த பிறகு இவரது அடுத்த திரைப்படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப டைரக்டர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான திகில் திரைப்படமான ஈரம்-ல் கதாநாயகனாக போலீஸ் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஆதியின் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை. காதல் மற்றும் திருமணம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை இனி பார்க்கலாம்…

    பிறப்பு மற்றும் படிப்பு:

    நடிகர் ஆதியின் முழுப்பெயர் ஆதி பினிஷெட்டி (Aadhi Pinisetty) என்பதாகும். இவர் கடந்த 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி தமிழக தலைநகரான சென்னையில் பிறந்தார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்தாலும் நடிகர் ஆதி தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் ரவிராஜா பினிஷெட்டி தான் நடிகர் ஆதியின் தந்தை. இவரது தாயின் பெயர் ராதா ராணி. சென்னை டான் போஸ்கோ பள்ளியில் (Don Bosco School) தனது ஆரம்ப கல்வியை முடித்த நடிகர் ஆதி ,பிறகு சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை (BE computer science) முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு உலகத்தை சுற்ற வேண்டும் ஆர்வத்தில் பைலட் ட்ரெயினிங்கிற்கு விண்ணப்பித்தார்.

    சினிமா அறிமுகம்:

    எனினும் இவரது தந்தை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய டைரக்டராக இருந்ததால் நடிகர் ஆதிக்கு முதலில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. எனவே வந்த வாய்ப்பை நழுவ விட கூடாது என்பதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான Oka V Chitram என்ற தெலுங்குப் படத்தில் பலராம் என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரியானார் ஆதி. இந்த திரைப்படத்தில் அறிமுகமான பிறகு தான் தமிழில் இவர் மிருகம், ஈரம் உள்ளிட்ட ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிப் படங்களில் வலுவான கதாபாத்திரத்தில் நடித்தார்.

    இந்த திரைப்படங்களை தொடர்ந்து தமிழில் அய்யனார், ஆடு புலி, அரவான். வல்லினம், கோச்சடையான் யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம், யு டர்ன், கிளாப், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். தமிழை போலவே ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து உள்ளார் நடிகர் ஆதி. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் ஆதி, ஹீரோவாக மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் என தனது மனதிற்கு பிடித்த வேடங்களை தயங்காமல் ஏற்று நடித்து வருகிறார். இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலுமே கணிசமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் ஆதி.

    திருப்புமுனை படங்கள்:

    நடிகர் ஆதிக்கு வாழ்க்கையில் திருப்புமுனை கொடுத்தது 2 தமிழ் படங்கள். ஒன்று யாகாவாராயினும் நா காக்க மற்றொன்று மரகதநாணயம். ஏனென்றால் தன்னுடன் இந்த 2 படங்களிலும் இணைந்து நடித்த பிரபல நடிகை நிக்கி கல்ராணியை தான் வாழ்க்கை துணையாக்கி கொண்டுள்ளார் நடிகர் ஆதி. அதிலும் மரகத நாணயத்தில் நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் சந்தர்ப்ப வசத்தால் சேராமல் போய்விடுவது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். அதில் வரும் “நீ கவிதைகளா” பாடல் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    எனவே பல ரசிகர்கள் இருவரும் ஒன்றிணையாமல் போய்விட்டார்களே என்று மரகத நாணயத்தை பார்த்து ஃபீல் செய்தனர். ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படத்தில் சேர முடியாவிட்டால் என்ன, நிஜத்தில் சேர்க்கிறோம் பாருங்கள் என இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதை ரசிகர்களுக்கு தங்களது திடீர் நிச்சயதார்த்தம் மூலம் வெளிப்படுத்தினர். குறிப்பாக நிக்கி ஒருகட்டத்தில் நடிகர் ஆதியின் வீட்டுக்கு அருகே குடியேறியது இவர்களிடையேயான காதலை மேலும் வலுப்படுத்தியது.

    இனிதே நடந்தேறிய திருமணம்:

    இருவரின் பெற்றோரும் சம்மதித்ததை தொடர்ந்து முதலில் நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் சென்னை எம்ஆர்சி நகரிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நிக்கி கல்ராணி கழுத்தில் தாலி காட்டி தனது மனைவியாக்கி கொண்டார் நடிகர் ஆதி. தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் ஆதி, அடுத்தடுத்து பல வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.