முகப்பு /செய்தி /விளையாட்டு / WTC இறுதிப் போட்டி... இந்தியா, ஆஸ்திரேலியா அணியின் பலங்கள் என்னென்ன?

WTC இறுதிப் போட்டி... இந்தியா, ஆஸ்திரேலியா அணியின் பலங்கள் என்னென்ன?

வெற்றி கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

வெற்றி கோப்பையுடன் இரு அணி கேப்டன்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதவுள்ள நிலையில் இரு அணிகளின் பலத்தை தெரிந்துகொள்வோம்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் களைகட்டவுள்ளது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரியணை ஏறுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது. இரு அணிகளுக்குமான வாய்ப்புகளைத் தெரிந்துகொள்வோம்.

ஒரு போட்டியின் முடிவிற்காக ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டுமா, எங்களுக்கு ஐந்து மணி நேரத்திலேயே ரிசல்ட் வேண்டும் என டி 20 போட்டிகளுக்கு நகர்ந்த 2k கிட்ஸ்சை டெஸ்ட் போட்டியை பார்க்கவைக்க கொண்டுவரப்பட்டது தான் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்.

2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இத்தொடரில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற 19 டெஸ்ட் போட்டிகளில் 11 வெற்றிகளை பதிவு செய்த ஆஸ்திரேலியாவும், 18 டெஸ்ட் போட்டிகளில் 10 வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணியும் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்டது. கடந்த முறை தவறவிட்ட கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இம்முறை களமிறங்கவுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில், புஜாரா, கோலி என பேட்டிங் வரிசை சிறப்பானதாக அமைந்துள்ளது. உள்ளூர் போட்டிகளில் அசத்தி, ஐ.பி.எல் போட்டிகளில் ஜொலித்த ரஹானே மீண்டும் வெள்ளை நிற ஜெர்ஸியை கையில் எடுக்கவுள்ளார். கார் விபத்தால் காயத்திலுள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கு பதில் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் கிஷான் மாற்று வீரராக இடம்பெற்றுள்ளார்.

இவர்களோடு அஸ்வின் மற்றும் ஜடேஜா என இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் கைகொடுக்கவுள்ளனர். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர்களின் சொந்த மைதானத்திலேயே சதம் விளாசிய அஸ்வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஜடேஜா என இந்தியா பேட்டிங்கில் அசுர பலத்தில் உள்ளது. காயத்திலிருந்து மீண்டுவராத பும்ராவிற்கு பதிலாக சமி அசத்த காத்திருக்கிறார். இவருக்கு சிராஜ் மற்றும் சர்த்துல் தாக்கூர் கைகொடுக்கவுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 24 டெஸ்டில் விளையாடி 8 சதம் உள்பட 1,979 ரன்கள் அடித்துள்ள கோலியின் வேட்டை இந்த போட்டியிலும் தொடருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஐ.பி.எல் தொடருக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் -கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், கோப்பையை வசப்படுத்த எல்லா வகையிலும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். வார்னர் மற்றும் ஸ்மித் என இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றனர். அவர்களுடன் கவாஜா, லேபுசேன் ஜ், ஸ்மித், அலெக்ஸ் ஹேரி என வலுவான பேட்டிங் வரிசையை கட்டமைத்துள்ளது ஆஸ்திரேலியா. அதிரடி ஆல்ரவுண்டர் கிரீன் அணிக்கு மேலும் வலு சேர்க்கிறார்.

பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் மிரட்ட காத்திருக்கின்றனர். சுழலில் அசத்த நாதன் லைனை களமிறக்குகிறது ஆஸ்திரேலியா. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ஐந்து நாட்கள் ஆட்டத்திலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தை பொருத்தவரை பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாகவே பார்க்கப்படுகிறது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.

‘இந்த 2 வீரர்கள் தான் ஆஸ்திரேலிய அணிக்கு பிரச்னையாக இருப்பார்கள்’ – ஸ்டீவன் ஸ்மித் பேட்டி

இரு அணிகளும் இதற்கு முன் 106 முறை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 44 போட்டிகளிலும் இந்தியா 32 பொட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 29 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. இரண்டு அணிகளும் முதல் முறையாக பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. ஐசிசி நடத்தும் அனைத்து விதமான உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிகளில் விளையாடிய அணிகள் என்ற சாதனையையும் படைத்துள்ளன.

First published:

Tags: Cricket, India vs Australia