ரிஷப் பந்த் முழுமையாக குணமடைவதற்கு, அதிக நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கே.எல், ராகுல் ஆகியோர் இருந்தாலும் அவர்களில் ரிஷப் பந்த் தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டங்கள் மற்றும் ரன் குவிப்பால் தனக்கென ஒரு இடத்தை அணியில் பிடித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கிக்கொண்டார். தலைநகர் டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு அவர் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் முழுமையாக குணம் அடையாத நிலையில், அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்து விளையாடக்கூடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றிலும் ரிஷப் பந்த் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குனராகவும் இருக்கும் கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- ரிஷப் பந்த்தை தேசிய அணி நிச்சயமாக இழந்துள்ளது. அவரது வெற்றிடம் நிரப்ப முடியாதது. மிகவும் இளமையான, அதே நேரம் திறமை மிக்க ஆட்டக்காரரான பந்த் காயத்திலிருந்து குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவர் சரியான முறையில் குணமடைவதற்கு போதுமான நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சிறப்பான முறையில் வெற்றியுடன் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வலை பயிற்சி நன்றாக அமைந்துள்ளது. பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். டெல்லி அணி திறமை மிக்க டேவிட் வார்னரை கேப்டனாக பெற்றுள்ளது. அவர் எப்போதும் சவால் நிறைந்தவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். இவ்வாறு அவர் கூறினார். வரும் சனிக்கிழமை டெல்லி கேபிடல்ஸ் அணி தனது தொடக்க போட்டியில், அன்று கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.