முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘கடைசி ஐபில் சீசனா? நீங்களே முடிவு பண்ணிட்டீங்க!!‘ – வர்ணனையாளருக்கு ஷாக் கொடுத்த தோனி

‘கடைசி ஐபில் சீசனா? நீங்களே முடிவு பண்ணிட்டீங்க!!‘ – வர்ணனையாளருக்கு ஷாக் கொடுத்த தோனி

தோனி - டேனி மோரிசன்

தோனி - டேனி மோரிசன்

ஓய்வு குறித்த சூசகமான கேள்விக்கு தோனியின் இன்றைய பதில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் ஓய்வு குறித்து பரவலாக பேசப்படும் நிலையில் அதுகுறித்து வர்ணனையாளர் டேனி மோரிசன் இன்று வெளிப்படையாக தோனியிடமே சூசகமாக கேள்வி கேட்டார். இதற்கு தோனி அளித்துள்ள பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோ மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாக மழைத்தூறல் விழுந்து கொண்டே இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. 3 மணிக்கு போடப்பட வேண்டிய டாஸ், மழை காரணமாக 3.30 க்கு போடப்பட்டது. இதில் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். காயம் காரணமாக கே.எல். ராகுலுக்கு பதிலாக லக்னோ அணியை க்ருணல் பாண்ட்யா வழி நடத்துகிறார்.

டாஸ் நிகழ்வின்போது நடுவரும் வர்ணனையாளருமான டேனி மோரிசன் தோனியிடம், ‘இந்த மைதானத்தில் நீங்கள் விளையாடப் போகும் கடைசி மேட்ச் இது. இதனை எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்டார். இதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த தோனி, ‘நீங்களே இதுதான் இங்கு எனக்கு கடைசி மேட்ச் என்று முடிவு செய்துவிட்டீர்கள்’ என்றார். தொடர்ந்து பேசிய டேனி மோரிசன் ரசிர்களை பார்த்தவாறு, ‘அவர் அடுத்த ஆண்டு மீண்டும் இதே மைதானத்தில் விளையாட வருவார்’ என்று கூறினார்.

மோரிசனின் பேச்சை தோனி சிரித்தவாறு ரசித்துக் கொண்டிருந்தார். தோனி இந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதுகுறித்த உறுதியான எந்த தகவலையும் தோனி வெளியிடாமல் இருக்கிறார். சமீபத்தில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ஓய்வு பெறுவது குறித்து தோனி எந்தவொரு அறிகுறியையும் தன்னிடத்தில் தெரியப்படுத்தவில்லை என்று கூறியிருந்தார். ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் இன்றைய பதில் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023