ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் தோனி விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே. வீரர் பதிரனா, 12 ஆவது ஓவரை வீசிய பிறகு, சிறிது நேரம் ஓய்வெடுக்க பெவிலியன் திரும்பினார். பின்னர் 16 ஆவது ஓவரை வீசுவதற்கு அவர் களத்திற்கு வந்த போது நடுவர்கள் பதிரனாவை பந்து வீச அனுமதிக்க மறுத்தனர். விதிப்படி அவர் பந்து வீசுவதற்கு மேலும் 4 நிமிடங்கள் களத்தில் காத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
அப்போது, மகேந்திர சிங் தோனி நடுவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் பதிரனா பந்து வீசுவதற்கு தகுதி பெற்றார். இந்நிலையில்,தோனி வேண்டுமென்றே நடுவர்களுடன் பேசி நேரத்தை தாமதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்காக, தோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கு அபராதமோ அல்லது இறுதி ஆட்டத்தில் விளையாட தடையோ விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சி.எஸ்.கே.ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க - வரலாறு படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… கடந்து வந்த பாதை இதோ…
நேற்று நடந்த குவாலிபையர் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்னை அணி தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், நடுவர்களிடம் தோனி நடத்திய உரையாடல் சர்ச்சையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.