ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைடன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மீதமுள்ள மூன்று அணிகள் யார் என்பதில் சஸ்பென்ஸ் இன்னும் நீடிக்கிறது. இதில் சென்னை அணிக்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு - நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 62 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிகளுக்குமிடையே நடைபெறும் யுத்தம் இறுதியில் உள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணி 13 போட்டிகளில் 9 வெற்றிகளை பதிவு செய்து 18 புள்ளிகளோடு பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக காலடி பதித்துள்ளது. இதன்படி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் தலா 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து 8 புள்ளிகள் எடுத்திருப்பதால் இவர்களால் 18 புள்ளிகளை நெருங்கமுடியாது எனவே இரண்டு அணிகளும் தொடரிலிருந்து வெளியேறுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளோடு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணியுடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதியாகிவிடும். லக்னோ அணியுடன் மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது தற்போது ஆபத்தாக வந்து நிற்கிறது. எஞ்சிய போட்டியில் அதிகபட்சம் இரண்டு புள்ளிகளை மட்டுமே கைப்பற்ற முடியும் என்பதால் முதலிடத்திற்கான வாய்ப்பும் பறிபோனது. இரண்டாவது இடத்தை தக்கவைக்க வேண்டும் என்றால் சென்னை வெற்றி பெற்று மும்பை ஒரு போட்டியில் தோல்வியை சந்திக்க வேண்டும்.
மும்பை அணி இன்னும் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஏற்கனவே விளையாடிய 12 -ல் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இரண்டிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை எட்டிப்பிடிக்க முடியும் என்பதால் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற மும்பைக்கு அதிக வாய்ப்புள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் 16 புள்ளிகளை கைப்பற்ற முடியும் இவ்வாறு நடந்தால் சென்னை அணி மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தற்கு போராட வேண்டும்.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கிடையே லக்னோ, பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. லக்னோ அணி 12 போட்டிகளில் ஆறு வெற்றி மற்றும் ஒரு முடிவில்லை என்பதன் அடிப்படையில் 13 புள்ளிகளை பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டிலும் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளை பெற்றுவிடுவதுடன் பிளே ஆஃப் வாய்ப்பும் உறுதியாகும். இதனால் சென்னை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பே பறிபோகவாய்ப்புள்ளது.
அதே போல் பெங்களூரு அணியும் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்றுள்ளது இன்னும் இரண்டு போட்டி மீதம் இருப்பதால் அந்த அணியாலும் 16 புள்ளிகளை கைப்பற்றி சென்னையை முந்துவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பெங்களூரு அணியும் சென்னைக்கு தலைவலியாக வந்துள்ளது. பஞ்சாப் அணியை பொருத்தவரையும் 12 போட்டியில் ஆறு வெற்றிகளை பதிவு செய்துள்ளதால். எஞ்சியுள்ள இரண்டில் வெற்றி பெற்று 16 புள்ளிகளோடு நான்காவது இடத்திற்கான போட்டியில் நீடிக்கிறது.
இதில் எதிலும் கலந்துகொள்ளாமல் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் சற்றும் ஒதுங்கி நிற்கின்றனர். ஏதேனும் ஒரு மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த அணிகளால் பிளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறமுடியும். இரண்டு அணிகளுக்கும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது தற்போது 12 புள்ளிகள் இருப்பதால் அதிகபட்சம் 14 புள்ளிகளை மட்டுமே கைப்பற்ற முடியும் எனவே இந்த இரண்டு அணிகளுக்கும் எறக்குறைய கேட்டு மூடப்பட்டுவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.