ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 2 இடங்களுக்குள் வர வேண்டும் என்றும், அதனால் அடுத்து வரும் ஒவ்வொரு மேட்ச்சும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை குவித்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய ஸ்கோரை நோக்கி பேட்டிங் செய்த பஞ்சாப் அணியால் 201 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
நடப்பு சீசனில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்கப்பட்ட போட்டியாக லக்னோ அணியின் இன்னிங்ஸ் அமைந்தது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இது அதிகபட்சமாக எடுக்கப்பட்ட 2 ஆவது ஸ்கோர் ஆகும். இந்த நிலையில் லக்னோ அணியின் வெற்றிக்கு பின்னர் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- டி20 போட்டிகளில்எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் நாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறோம் என்று எந்த அணியும் இருக்க முடியாது. அதிகமான ஸ்கோரை அடித்து வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 2 இடங்களுக்குள் வர வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். எனவே எங்களுககு அடுத்து வரவுள்ள அனைத்து போட்டிகளும் முக்கியமானதாக இருக்கும்.
லீக் ஆட்டத்தில் இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் வெற்றி பெற்று முதல் 2 இடங்களுக்குள் வருவதற்கு முயற்சி செய்வோம். கைல் மேயர்ஸ், ஸ்டாய்னிஸ், பதோனி என அதிரடி பேட்ஸ்மேன்களைக் கொண்ட அணியாக லக்னோ உள்ளது. ஒரு முக்கியமான விக்கெட் விழுந்தாலும் அடுத்து களத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்கள் நிலைமையை சிறப்பாக கையாளுகின்றனர். அடுத்தடுத்த போட்டிகளை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். லக்னோ அணி அடுத்ததாக பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.