ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 112 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 59 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
விராட் கோலி ஒருநாள் போட்டியைப் போன்று ரன்கள் சேர்க்க டூப்ளசிஸ் சற்று வேகம் காட்டினார். 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அவைரத் தொடர்ந்து 44 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்து டூப்ளசிஸ் அவுட் ஆனார். அதிரடியாக ரன்களை சேர்த்த கிளென் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்தவர்கள் மஹிபால் லோம்ரோர் 1 ரன்னும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும், மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்னும் எடுத்து வெளியேறினர். கடைசி ஓவர்களில் அனுஜ் ராவத் 11 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 29 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.
சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மேயர், தேவ்தத் படிக்கல் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கும் நிலையில், ராஜஸ்தான் அணி எளிதாக இந்த இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணி வீரர்கள் ஒவ்வொருவராக நடையைக் கட்டினர். தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ஜோஸ் பட்லர் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 4 ரன்களும், ஜோரூட் 10 ரன்களும், தேவ்தத் படிக்கல் 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹெட்மேயர் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற ராஜஸ்தான் அணி 10.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.