ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் அற்புதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் சென்னை – பெங்களூரு அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது. இரு அணிகளும் சம பலம் கொண்டதாக கருதப்படும் நிலையில், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்பு இரு அணிகளும் 30 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 19 முறையும், பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இதன் அடிப்படையில் சென்னை அணி 65.5 % வெற்றி சதவீத்தை பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 174 ரன்களை எடுத்து அதனை ஆர்.சி.பி. அற்புதமாக டிஃபெண்ட் செய்தது. ஆர்.சி.பி. அணிக்கு எதிராக தோனி அதிக ரன்களை குவித்துள்ளார். 27 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 739 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 43.47 ரன்னாக உள்ளது. மேலும், பெங்களூரு அணிக்கு எதிராக 4 அரைச்சதங்களை அடித்துள்ள தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 84 ரன்களாகும்.
சென்னை அணிக்கு எதிராக 30 ஆட்டங்களில் விளையாடியுள்ள விராட் கோலி 979 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 39.16 ரன்கள். இவற்றில் 9 அரைச்சதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 90 ரன்கள். முன்பு சென்னை அணிக்காக விளையாடிய ஃபாஃப் டூப்ளசிஸ் தற்போது பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் பேட்ஸ்மேனாக நல்ல ஃபார்மில் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது. நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தம் 214 ரன்களை எடுத்துள்ளார். இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு தரப்பில் விராட் கோலி, டூப்ளசிஸ், மேகஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹஸல்வுட் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மொயின் அலி, மிட்செல் சான்ட்னர், ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் சிறப்பாக விளையாடினால் சி.எஸ்.கேவின் வெற்றியை தடுக்க முடியாது என்கின்றனர் ஐபிஎல் விமர்சகர்கள். தற்போது 2 வெற்றி 2 தோல்வியுடன் சென்னை அணி பாயின்ட்ஸ் டேபிளில் 6 ஆவது இடத்தில் உள்ளது. இதே வெற்றி தோல்வியை பெங்களூரு அணி பெற்றபோதிலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் 7 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.