ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது. 14 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளைப் பெற்றிருந்த மும்பை அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வரும் புதன் அன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
சாஹா 12 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த விஜய் சங்கருடன் சேர்ந்து சுப்மன் கில் பெங்களூரு பவுலிங்கை வெளுத்தெடுத்தார். இருவரும் அதிரடியாக ரன்களை குவித்து அணியின் வெற்றியை விரைவுபடுத்தினர். 2 ஆவது விக்கெட்டிற்கு கில் மற்றும் விஜய் சங்கர் 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தினர். விஜய் சங்கர் 35 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 52 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது. தோல்வியடைந்த பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேற, 16 புள்ளிகளை கைவசம் வைத்திருக்கும் மும்பை அணி ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னையில் வரும் செவ்வாயன்று நடைபெறவுள்ள குவாலிபையர் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. புதன் அன்று எலிமினேட்டர் சுற்றில் மும்பையை லக்னோ அணி எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.