ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 13 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரியுடன் நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது லக்னோ அணி. ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிசேக் சர்மா ஆகியோர் களத்தில் இறங்கினர். அபிசேக் சர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்து அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்தார். நிதானமாக விளையாடிய அன்மோல்ப்ரீத் சிங் 27 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகளுடன் 36 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 13 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் 20 பந்துகளில் 28 எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலிப்ஸ் இந்த போட்டியில் முதல் பந்திலேயே நடையைக் கட்டினார். 12.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஐதராபாத் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து இணைந்த கிளாசன் – அப்துல் சமத் இணை பொறுப்புடன் விளையாடிய 6 ஆவது விக்கெட்டிற்கு 58 ரன்கள் பார்ட்னஷிப் அமைத்தது. கிளாசன் அதிரடியாக 29 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்தார். 4 சிக்சர்களுடன் சமத் 25 பந்துகளில் 37 ரன்கள் சேர்க்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது. அதிரடி வீரர் கைல் மேயர்ஸ் 14 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். குவின்டன் டி காக் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க லக்னோ அணி 8.2 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இணைந்த பிரேரக் மன்கட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணை பொறுபபுடன் விளையாடி ரன்களை சேர்த்தது. 25 பந்துகளில் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 13 பந்துகளில் 4 சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் குவிக்க, மன்கட் 45 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். 19.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழநத லக்னோ அணி வெற்றி இலக்கை அடைந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.