முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. மிரட்ட காத்திருக்கும் அணிகள்..!

IPL 2023 : இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. மிரட்ட காத்திருக்கும் அணிகள்..!

இன்று தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்..

இன்று தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்..

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸ் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது.

  • Last Updated :
  • Ahmadabad (Ahmedabad) [Ahmedabad], India

அனல்பறக்கும் சம்மரில் நம்மை குளுமையாக்க 16 வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் கொண்டாடப்படவுள்ளது. 70 லீக் போட்டிகள், 3 பிளே ஆஃப் ஆட்டங்கள், என சாம்பியன் பட்டத்தை பெற 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மைதானம் மற்றும் எதிரணி மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

ஹர்த்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைடன்ஸ், தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரோஹித் தலைமையில் மும்பை இண்டியன்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஷிகர் தவன் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ், நிதிஷ் ரானா தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டு பிளஸி தலைமையில் ராயல் சேலர்ஞ்சர்ஸ் பெங்களூரு, மார்க்ரம் தலைமையில் சன் ரைசஸ் ஹைதராபாத், ராகுல் தலைமையில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட், வார்னர் தலைமையில் டெல்லி கேப்பிடஸ் என 10 கேப்டன்கள் கோப்பைக்காக மல்லுகட்டவுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னர், டு பிளசி, மார்கரம் என மூன்று வெளிநாட்டு வீரர்கள் கேப்டனாக செயல்படவுள்ளனர். ஏழு அணிகளுக்கு இந்திய வீரர்களே கேப்டனாக செயல்படுகின்றனர். விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டிற்கு பதிலாக டெல்லி அணியின் கேப்டனாக வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : அசுர பலத்துடன் களமிறங்கும் சென்னை அணியில் இருக்கும் ஒரே பிரச்னை இதுதான்!

டாஸ் போட்டதற்கு பிறகு ஆடும் லெவனில் மாற்றம் செய்துகொள்வது, தாமதமாக பந்துவீசினால் பவுண்டரி லைனில் நான்கு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி, இம்பேக்ட் பிளேயர் (Impact Player)என புதிய விதிகள் நடப்பு தொடரிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

தொடக்க விழா நிகழ்ச்சியில் நடிகை தமனாவின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாலிவுட் ஸ்டார்களான Katrina Kaif,Rashmika Mandanna,Tiger Shroff ஆகியோரின் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகழ்பெற்ற பாடகர் Arijit Singh குரலில் அரங்கமே மயங்க காத்திருக்கிறது. அத்துடன் வண்ணமயமான வாணவேடிக்கைகளும் அரங்கேற உள்ளன.

கடந்த சீசனில் தொடர் தோல்வியை சந்தித்து ஒன்பதாவது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை முழுபலத்தோடு களமிறங்குகிறது. கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக அமைய வாய்ப்புள்ளதால் சக வீரர்கள் கோப்பையோடு விடைகொடுக்க காத்திருக்கின்றனர். பென் ஸ்டோக்ஸ் வருகை, ஜடேஜா தக்கவைப்பு என்ற பல மாற்றங்கள் அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்களும் அதிரடி நாயகன்களுமான பிராவோ, பொல்லார்ட், கெய்ல் ஆகியோர் இல்லாத ஐபிஎல் தொடராக இந்த தொடர் அமையவுள்ளது.

பெங்களூரு, பஞ்சாப், டெல்லி, லக்னோ, ஆகிய அணிகள் இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பதால் இம்முறை இவர்களின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த முறையாவது கோப்பையை கையில் எடுப்பாரா என விராட் கோலியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு “ஈ சாலா கப் நமதே” என முழக்கமிடுகின்றனர்.

சாம்பியன் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மற்ற இரண்டு அணிகளுக்கு தலா ஏழு கோடி ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் சாம்பியன் அணிக்கு 4.8 கோடி ரூபாய் வழங்கப்பட்டதில் தற்போது 20 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐபிஎல் தொடர் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

First published:

Tags: CSK, Gujarat Titans, Hardik Pandya, IPL, MS Dhoni