பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்ததுதான் குஜராத் அணியின் தோல்விக்கான முக்கிய காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியை தேர்வு செய்யும், குவாலிபையர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் வழக்கம்போல சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 34 பந்துகளை எதிர்கொண்ட டெவோன் கான்வே 4 பவுண்டரியுடன் 40 ரன்களை எடுத்தார். 1 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 44 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் குவித்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அடுத்து வந்த ஷிவம் துபே 1 ரன் எடுத்த நிலையில் நூர் அகமது பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அஜிங்யா ரஹானே, அம்பதி ராயுடு ஆகியோர் தலா 17 ரன்கள் எடுத்து வெளியேறினர். கேப்டன் தோனி 1 ரன் எடுத்திருந்தபோது மோகித் சர்மா பவுலிங்கில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் சாஹா 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து வெளியேற அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்பற்ற முறையில் விளையாடி 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
தசுன் ஷனகா 17 ரன்னும், டேவிட் மில்லர் 4 ரன்னும் எடுத்து வெளியேற குஜராத் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. விஜய் சங்கர் – ரஷித் கான் இணை அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. விஜய் சங்கர் 10 பந்தில் 14 ரன்கள் எடுக்க, ரஷித் கான் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு பேட்டிங் ஆர்டரில் குஜராத் அணி மாற்றம் செய்தது முக்கிய காரணம் என்று, முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
Hardik batting 3 and Shanaka batting 4 who’s career strike against spinners is 109 was tactically wrong move by GT. #CSKvsGT
— Irfan Pathan (@IrfanPathan) May 23, 2023
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஹர்திக் பாண்ட்யா 3 ஆவது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். 4 ஆவது பேட்ஸ்மேனாக வந்த தசுன் ஷனகாவின் ஸ்ட்ரைக் ரேட், ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக 109 ஆக உள்ளது. வியூகம் அடிப்படையில் இது குஜராத் அணியின் தவறான நகர்வு’ என்று கூறியுள்ளார். இர்பான் பதானின் கருத்தை ரசிகர்கள் பலரும் வரவேற்று கமென்ட் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.