அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடுவார் என்று அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆல் ரவுண்டர் மொயின் அலி கூறியுள்ளார். சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு தற்போது 41 வயது ஆகிறது. இந்த சீசனுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டது. இதுகுறித்து இ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ தளத்திற்கு சென்னை அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
ராஜஸ்தான் அணிக்கு எதிராக கடைசியாக நடந்த போட்டியில் தோனி சிக்சர்களை சர்வ சாதாரணமாக விளாசினார். இது மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும் நான் சாதாரணமாகத்தான் உணர்ந்தேன். ஏனென்றால் வலைப் பயிற்சியின்போது தோனி இதுபோன்ற ஷாட்களை மிக எளிதாக அடிப்பதை பார்த்திருக்கிறேன். இந்த வயதில் இப்படியொரு ஆட்டத்தை தோனியிடம் பார்ப்பது வியப்பாக உள்ளது. ஏனென்றால் வயது அதிகரிக்கும்போது, தளர்வு ஏற்படுவது என்பது இயற்கைதான். ஆனால் தோனியின் ஆட்டம் வயது அதிகரிக்க மெருகேறியுள்ளது.
தோனி விளையாடுவதை பார்க்கும்போது இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு அவர் களத்தில் ஆடுவதை நிறுத்த மாட்டார் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அவரால் அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். தோனி மிகவும் எளிமையான மனிதர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும், தலைக்கனம் இன்றி அவர் இருப்பார். அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். டிவியில் பார்க்கும்போது அமைதியாக இருக்கிறார் அல்லவா, அதேபோன்றுதான் நேரிலும் இருப்பார். யாரும் அவரை எளிதாக அணுக முடியும். நான் அடுத்ததாக உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக என்னை தயார்படுத்தி வருகிறேன். ஒருவேளை இதுதான் என்னுடைய கடைசி உலகக்கோப்பை போட்டியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.