தோனி ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்படும் நிலையில் அவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் இடம்பெறுவார் என்று சென்னை அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். நடப்பு சீசனில் மற்ற எந்த அணியின் தொடக்க வீரர்களை விடவும் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே இணை மிகவும் பொறுப்புடன் விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ஓபனிங் பேட்ஸ்மேன்கள் என்ற பெயரை ருதுராஜ் – கான்வே இணை பெற்றுள்ளனர்.
டெல்லி அணிக்கு எதிரான மேட்ச்சில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 87 பந்துகளில் 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த போட்டியில் டெல்லியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. இந்த ஆட்டத்திற்கு பின்னர் இருவரும் அளித்த பேட்டி ஒன்றை ஐபிஎல் இணைய தளம் வெளியிட்டுள்ளது. அதில் நிச்சயமாக நடப்பு சீசன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்காது என்று டெவோன் கான்வே கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘தோனிக்கு காயம் ஏற்பட்டபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடியுள்ளார். தற்போது அவரது முழங்கால்கள் நன்றாக உள்ளன. சென்னையில் குவாலிஃபையர் மேட்ச் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
எனக்கு ருதுராஜிற்கும் இடையிலான புரிந்துணர்வு நன்றாக இருக்கிறது. ஆடுகளத்தில் கிடைக்கும் நேரங்களில் அவருடன் நான் அதிக கேள்விகளை கேட்டுக் கொள்வேன். இந்த சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று கூறியுள்ளார். ருதுராஜ் கூறுகையில், ‘தோனி இன்னும் 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவார்’ என்று தெரிவித்திருக்கிறார். 20 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே இணை 1047 ரன்கள் சேர்த்துள்ளது. இவற்றில் 100+ நான்கு முறை எடுக்கப்பட்டுள்ளன. சென்னை அணியின் முரளி விஜய் – மைக் ஹஸிக்கு அடுத்தபடியாக இந்த இணை அதிக ரன்களை குவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.