முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘சொந்த அணிக்கு எதிராகவே விளையாடுகிறார்’ – டேவிட் வார்னருக்கு எதிராக குவியும் விமர்சனம்

‘சொந்த அணிக்கு எதிராகவே விளையாடுகிறார்’ – டேவிட் வார்னருக்கு எதிராக குவியும் விமர்சனம்

டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து ஏன் யாரும் பேசவில்லை – இர்பான் பதான் கேள்வி

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சொந்த அணிக்கு எதிராகவே டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் விளையாடி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெல்லி அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் வார்னரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 துறையிலும் பலவீனமான வீரர்களைக் கொண்ட அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி மாறியுள்ளது. 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து -1.576 நெட் ரன்ரேட் கொண்டதாக பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை டெல்லி அணி பிடித்துள்ளது.

நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். குறிப்பாக ஆட்டத்தின் கடைசிப் பந்தில் மும்பை அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது, அருமையான ரன் அவுட் வாய்ப்பை டேவிட் வார்னர் தவற விட்டார். பேட்டிங்கிலும் 47 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்களை மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டிகளையே சில வீரர்கள் டி20 போல் ஆடும் நிலையில் வார்னரின் ஆமை வேக ஆட்டம் அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் வார்னர் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் விமர்சகருமான ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘டி20 போட்டிகளைப் பொருத்தளவில் ரன்களை மிக வேகமாக குவிக்க வேண்டும். வார்னர் ஆடிய விதத்தை பார்க்கும்போது அவர் தனது சொந்த அணிக்கு எதிராகவே விளையாடியதாகத்தான் பார்க்க முடிகிறது’ என்று குறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தனது ட்விட்டர் பதிவில், ‘மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வார்னரின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து ஏன் யாரும் பேசவில்லை. மிக மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் வார்னர் ஆடியுள்ளார்’ என்று பதிவிட்டிருக்கிறார். டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பில் இருந்த ரிஷப் பந்திற்கு கார் விபத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இந்த ஐபிஎல் தொடரை தவிர்த்ததால் அவருக்கு பதிலாக சீனியர் ஆட்டக்காரராக கருதப்படும் டேவிட் வார்னர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி அணி இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

First published:

Tags: IPL, IPL 2023