முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ரூ. 18 கோடி கொடுத்து அனுபவத்தை விலைக்கு வாங்க முடியாது’ – சாம் கரனை விளாசும் சேவாக்

‘ரூ. 18 கோடி கொடுத்து அனுபவத்தை விலைக்கு வாங்க முடியாது’ – சாம் கரனை விளாசும் சேவாக்

சாம் கரன் - வீரேந்தர் சேவாக்

சாம் கரன் - வீரேந்தர் சேவாக்

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் 7 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ரூ. 18 கோடி கொடுத்து அனுபவத்தை விலைக்கு வாங்க முடியாது என்று பஞ்சாப் அணியின் சாம் கரன் மற்றும் அணி நிர்வாகத்தை முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஷிகர் தவான் பங்கேற்க முடியாத சூழலில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். பஞ்சாபின் மொகாலியில் நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களுரு அணி 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களத்தில் இறங்கியது.

எளிதாக இலக்காக காணப்பட்டாலும் 150 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பஞ்சாப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கேப்டன் சாம் கரன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான அவரை பஞ்சாப் அணி நிர்வாகம் ரூ. 18.50 கோடி கொடுத்து அணியில் எடுத்தது. இந்த நிலையில், பஞ்சாப் அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான வீரேந்தர் சேவாக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கிரிக்பஸ் இணைய தளத்திற்கு சேவாக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- சாம் கரன் சர்வதேச தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் உங்களால் ரூ. 18 கோடி கொடுத்து அனுபவத்தை விலைக்கு வாங்க முடியாது. கடும் வெயிலுக்கு மத்தியில் ஆண்டுக்கணக்கில் விளையாடினால் மட்டுமே நீங்கள் பெற முடியும். மேட்ச்சில் வெற்றி பெற வைப்பார் என்ற காரணத்திற்காக மட்டுமே சாம் கரனை அணியில் எடுத்துள்ளார்கள். ஆனால் அவருக்கு போதிய அனுபவம் இல்லை. இதேபோன்று கேப்டனாக அவரை நியமனம் செய்யும்போது, மிகுந்த கவனத்துடன் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். போதிய அனுபவம் இல்லாததுதான் சாம் கரன் மற்றும் பஞ்சாப் அணியின் தோல்விக்கான காரணங்கள். இவ்வாறு அவர் கூறினார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் 7 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023